
எதைச் செய்தாலும், சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர், மகாகவி பாரதியார். அதனால் தான் அவருடைய கவிதைகள், இன்றும் பேசப்படுகின்றன.
ஒருநாள் வீட்டில், ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார், பாரதியின் மனைவி செல்லம்மாள். இதைக்கேட்ட பாரதி, உடனே, ஹார்மோனியப் பெட்டியை எடுத்து வந்து, தன் விருப்பம் போல இசைக்க ஆரம்பித்தார். அதிலிருந்து புறப்பட்ட ஒலி, அபஸ்வரமாக இருந்தது.
பாரதி காரணமில்லாமல் இப்படி செய்ய மாட்டார் என்பது, செல்லம்மாளுக்கு தெரியும். அவர், பாரதியிடம் இதுபற்றி கேட்டார்.
'அதுவா... நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே என்ன பண்ணிக் கிட்டிருந்தே...' எனக் கேட்டார், பாரதி.
'ஸ்லோகங்களை சொல்லிக்கிட்டு இருந்தேன்...' என்றார், பாரதியின் மனைவி.
'நீ சொன்ன ஸ்லோகமும், இப்படித்தான் இருந்தது. எதைச் செய்தாலும் சரியா செய்யணும். சமஸ்கிருத ஸ்லோகங்களை சரியா உச்சரிக்கணும். அப்பத்தான் அது கேட்கிறதுக்கு நல்லா இருக்கும். இல்லேன்னா, இப்ப நான் வாசிச்ச மாதிரி தான் இருக்கும்...' என்றார்.
தன் தவறை உணர்த்தவே, பாரதி இப்படி செய்தார் என்பதை புரிந்து கொண்டார், செல்லம்மாள்.
*****
சிலர் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்வது, பெர்னாட்ஷாவுக்கு பிடிக்காத விஷயம்.
இதுகுறித்து அவர் கூறிய கருத்து இது:
உலகம் முழுவதும், வேட்டையாடுவதை ஒரு விளையாட்டாக கருதுகின்றனர்.
காடுகளில் அலைந்து திரிந்து விலங்குகள் அல்லது பறவைகளை கொல்வதைத் தான் அவர்கள், வேட்டையாடுதல் என்று நினைக்கின்றனர்.
கொலை செய்யும் நோக்கத்தில் அதை செய்யவில்லை என்றாலும், இந்த விளையாட்டில், உயிரினங்கள் இறக்கின்றனவே என்ற உணர்ச்சியும், அவர்களுக்கு இருப்பதில்லை.
சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகள் கூட, வேட்டையாடுகின்றன. ஆடு, மாடுகளை, தங்கள் பசியை தீர்த்துக் கொள்ள கொல்கின்றன. பசி இல்லாத நேரங்களில் அவை, எதையும் கொல்வதில்லை. ஆனால், மனிதன் விளையாட்டுக்காக கொல்வது என்பது எவ்வளவு கொடுமை?
இதேபோல், மன்னர்களுக்கும், விளையாட்டுக்கும் நிறையவே தொடர்பு உண்டு.
உதாரணம்... கண்காட்சி சாலை ஒன்றில், குற்றவாளிகளின் தலையை வெட்டும் பழங்கால இயந்திரத்தை கண்டான், அரசன் ஒருவன். அது எப்படி இயங்குகிறது என, அறிய விரும்பினான்.
தன்னுடன் பரிவாரத்தில் வந்த ஒருவனை கூப்பிட்டு, இயந்திரத்தில் தலையை கொடுக்க கட்டளையிட்டான். அடுத்த நிமிடம் இயந்திரம் வேலை செய்து, அவன் தலை துண்டானது. அரசன் விளையாட்டாக யோசிக்க, ஒரு உயிர் போனது தான் மிச்சம்.
- நடுத்தெரு நாராயணன்