/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம் - படகோட்டி அறிந்த உண்மை!
/
ஞானானந்தம் - படகோட்டி அறிந்த உண்மை!
PUBLISHED ON : டிச 08, 2024

ஆற்றின் மறுகரையில், ஒரு கோவில் இருந்தது. அன்றைக்கு மிகவும் விசேஷமான நாள். அதனால், கோவிலுக்கு செல்ல, அதிகாலையிலேயே படகுத் துறையில் பக்தர்களின் கூட்டம்.
வழியில், ஒரு சிறு குன்றை கடந்து தான், ஆற்றங்கரைக்கு வர வேண்டும். அக்குன்றின் மீது, துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். சிலர், அவரிடம் சென்று வணங்கி, தங்களிடம் இருந்த உணவை அவருக்குத் தந்தனர். அவரும் மகிழ்ச்சியோடு அதை வாங்கிச் சாப்பிட்டு, அவர்களை ஆசீர்வதித்தார்.
அப்போது, வானம் இருண்டு இடியும், மின்னலுமாய் மழை வரும் போலிருந்தது.
ஆற்றங்கரையில் இருந்த படகோட்டி, 'நீங்கள் எல்லாம் சாப்பிடாமல் விரதம் இருந்து வந்திருக்க வேண்டும்; அப்படி வராததால் தான், மழை வந்து விட்டது...' என்று கூறி, படகை எடுக்க மறுத்து விட்டான்.
'சரி தான்... இப்போது, என்ன செய்வது? கோவிலுக்குப் போக வேண்டுமே... படகை எடு...' என்றனர், பக்தர்கள்.
'ஒருவராவது பட்டினியாக இருந்தால் தான், படகை எடுப்பேன்...' என்று வாதம் செய்தான், படகோட்டி.
'நாங்கள் பட்டினியாகத் தான் இருக்கிறோம்; கோவிலுக்குப் போய் வந்த பின் தான் சாப்பிடுவோம்....' என்றனர்.
அதை, படகோட்டி நம்பவில்லை.
'நீ எங்களை நம்பாவிட்டால், முழுப் பட்டினி கிடக்கும் ஆளை, நாங்கள் எங்கே போய் தேடுவது?' என்று கேட்டார், கூட்டத்தில் ஒருவர்.
'அந்த குன்று மீது இருக்கிற சாமியாரைக் கூப்பிடுங்கள்; அவர் வந்து படகில் ஏறட்டும்...' என்றான், படகோட்டி.
அங்கிருந்தவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று முன் தானே துறவி சாப்பிட்டார் என நினைத்து குழம்பினாலும், வேறு வழியில்லாமல், அவரை போய் அழைத்தனர். அவரும் மறுக்காமல் வந்து படகில் ஏறினார். பத்திரமாக படகு அக்கரை சேர்ந்தது.
'இது என்ன விந்தை... நாங்கள் கொடுத்ததை அவர் சாப்பிட்டாரே...' என்று, படகோட்டியிடம் கேட்டார், ஒருவர்.
'விந்தை ஒன்றும் இல்லை; நாமெல்லாம் வயிற்றை மட்டுமே பட்டினி போடுகிறோம். மனதை அப்படி விடாமல் எதையாவது உள்ளே திணித்துக் கொண்டே இருக்கிறோம்.
'ஆனால், சாமியாரோ வயிற்றுக்கு கொஞ்சம் சாப்பிட்டாலும், மனம் சுத்தமாக இருக்கிறது. அதில், பேராசை, விருப்பு, வெறுப்பு மற்றும் பற்று என்று, எதுவும் இல்லை.
'கோவிலுக்கு செல்லவும், தெய்வத்தை வணங்கவும், துாய்மையான மனது தான் வேண்டும்; வயிறு அல்ல...' என்றான், படகோட்டி.
பி. என். பி.,