
அன்புள்ள சகோதரிக்கு —
நான், 45 வயது பெண். அரசு சுற்றுலா துறையின் சார்பில், ஒப்பந்த அடிப்படையில், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணியருக்கு, வழிகாட்டியாக பணிபுரிகிறேன்.
சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், எனக்கு சொந்தமாக, ஒரு படுக்கையறை உள்ள வீடு உள்ளது.
என்னுடைய பூர்வீகம் ஆந்திரா. பெற்றோர், இரு தம்பிகள் மற்றும் ஒரு தங்கை. என் 15வது வயதில், சென்னைக்கு குடி வந்தோம்.
என்னை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று, பெரு முயற்சி எடுத்தார், என் அப்பா. துணை நடிகையாக, இரண்டு, மூன்று படங்களில் தலை காட்டினேன். அவ்வளவு தான். ஆனால், தினமும், என்னை சென்னையிலுள்ள ஸ்டுடியோக்களுக்கு அழைத்துச் சென்று, இயக்குனர்களிடம் எனக்காக வாய்ப்பு கேட்பார், அப்பா. ஆனால், பலன் ஒன்றும் கிடைக்கவில்லை.
தெலுங்கும், ஆங்கிலமும் சரளமாக பேசுவேன். தமிழ் கற்றுக் கொடுக்க, ஆசிரியர் ஒருவரையும் நியமித்தார், அப்பா. எனக்கு நடிப்பதை விட, நன்கு படிக்க வேண்டும், என் வயதுள்ள பெண்களிடம் பேசி, விளையாட வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது.
இது எதற்கும் வழி இல்லாமல், தினமும், வீட்டில் சண்டை, சச்சரவுமாக இருக்கும். இவர்களது தொந்தரவு தாங்க முடியாமல், சினிமாவில் வளர்ந்து வந்த, கேமராமேன் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து, வீட்டை விட்டு வெளியேறினேன்.
அந்த கேமராமேனுக்கு, ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்த விஷயம் பிறகு தான் தெரிந்தது. அவனது மனைவியும், மாமனாரும் என்னை கடுமையாக பேசி, கேமராமேனை விட்டு விலகாவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினர்.
என்னால் பிரச்னை வர வேண்டாம் என்று, அவனிடமிருந்து விலகி, மீண்டும் பிறந்த வீட்டுக்கு வந்தேன். அங்கு ஒரு வேலைக்காரியை விட, மட்டமாக நடத்தப்பட்டேன்.
இதற்கிடையில், என் தங்கையை, தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தி, அவளும், இரண்டு, மூன்று படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தாள். சிறுவர்களான தம்பிகள் இருவரும் பள்ளியில் படித்து கொண்டிருந்தனர்.
வீட்டில் நிலைமை சரியில்லாததால், அங்கிருந்து வெளியேறி, ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் அடைக்கலமானேன். அங்கு வேலை செய்தபடியே, இடையில் நிறுத்திய படிப்பை படிக்க ஆரம்பித்தேன். தமிழும் நன்றாக கற்றுக் கொண்டேன்.
இல்லத்துக்கு உதவி செய்ய வந்த வெளிநாட்டினரிடம் ஆங்கிலத்தில் பேசுவதை அறிந்து, இல்லத்தின் நிர்வாகி, என்னை புகழ்பெற்ற பல கோவில்களுக்கு அனுப்பி, அக்கோவில்களை பற்றி அறிந்து வர செய்தார். எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டு, நிறைய ஆன்மிக புத்தகங்கள் வாங்கி படித்து, அறிவை வளர்த்துக் கொண்டேன்.
இல்ல நிர்வாகி, 'டூரிஸ்ட் கைடு' ஆக பதிவு செய்து கொடுத்தார்.
சுற்றுலா துறையினர் அழைக்கும் போது, வெளிநாட்டு பயணியருக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறேன். என்னை ஆதரித்த இல்லத்துக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
இப்போது பிரச்னை என்னவென்றால், என் தங்கை என்ன ஆனாள் என்று தெரியவில்லை. தம்பிகள், அரை குறை படிப்புடன் தனித்தனியாக சென்று விட்டனராம். ஆதரவற்ற நிலையில், நோயுடன் என் பெற்றோர், சிறு குடிசையில் வாழ்ந்து வருவதாக, நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் ஒன்றில் சந்தித்த, என் தோழி ஒருத்தி தகவல் கூறினாள்.
பெற்றோரை அழைத்து வந்து என்னுடன் தங்க வைத்துக் கொள்வதா அல்லது என்னை பராமரித்த ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடுவதா? இவர்களை தொடர்ந்து, என் தம்பிகளும் வந்து என்னுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? அனைவரையும் வைத்து பராமரிக்க முடியுமா என்று சந்தேகமாக உள்ளது. எனக்கும் வயதாகிறதே... நான் என்ன செய்யலாம், சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
ஆன்மிக சுற்றுலா வழிகாட்டி பணி உன்னதமானது. உன் பெற்றோர், தம்பிகள் மற்றும் தங்கையை ஒரே வாரத்தில் உன் கூட்டில் வந்து அடைய வைத்து விடலாம்; இது பெரிய விஷயமில்லை. அதற்கு முன் சில விஷயங்களை யோசித்து முடிவு செய்.
* நீ வளர்ந்த, ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியுடன் மனம் விட்டு பேசு. பெற்றோர், தம்பிகள் மற்றும் தங்கையை ஆதரவற்றோர் இல்லத்தில் அழைத்து வந்து இணைப்பதன் சாதக, பாதகங்களை அவருடன் விவாதி. வாழ்வில் பாதியை, 'நெகடிவ்' சூழலில் கழித்து விட்டவர்களை உன் வீட்டுக்கு அழைத்து வந்து திருத்துவது குதிரைக்கொம்பு.
இல்ல நிர்வாகி கொடுக்கும் அறிவுரைகளை கடைபிடி
* 'பிரைவேட் டிடக்டிவ் ஏஜென்சி' வாயிலாக, உன் பெற்றோர், தங்கை மற்றும் தம்பிகளின் உள்ளும் புறங்களை முழுமையாக ஆராயச் சொல்லி அறிக்கை பெறு.
என்னைக் கேட்டால், அவர்களிடமிருந்து முழுமையாக விலகி நில் என்று தான் சொல்வேன்.
உன் மனம் துடிக்கிறது என்றால், ஒரு உபாயம் செய். உன்னால் ஒரு ஐந்து லட்சம் செலவு பண்ணக் கூடிய வங்கி கை இருப்பு இருக்கிறதா?
ஐந்து லட்சத்தை, ஐந்து பங்குகளாக பிரி.
நீ, உன் குடும்பத்தை அவர்களுக்கு தெரியாமல் நின்று பார்த்துக் கொள். உன் ஆதரவற்றோர் இல்லம் சார்பாக, அவர்கள் ஐந்து பேருக்கும், தலா ஒரு லட்சம் வழங்கச் செய்.
அவர்கள் அந்த தொகையை உபயோகமாக பயன்படுத்தினால், உதவிகள் தொடரும் என, அவர்களிடம் வாக்குறுதி தரட்டும், இல்ல நிர்வாகி.
ஐந்து பேரையும் உன் வீட்டுக்கு அழைத்து வந்து சேர்த்தால், உன்னை, அவர்கள் ஒரே மாதத்தில் காலி பண்ணி விடுவர் என்பதை நினைவில் வை.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.