
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 26; கணவர் வயது, 31. டில்லியில் மத்திய அரசு பணியில் உயரதிகாரியாக பணிபுரிகிறார், கணவர். நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன்.
நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத ஊரில், செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவள், நான். எங்கள் வீட்டில் அத்தை, மாமா, அண்ணன்கள், அக்காக்கள் மற்றும் அவர்களது குடும்பம் என, 25 பேர், கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம்.
எனக்கு மாப்பிள்ளை முடிவு செய்ததும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, டில்லிக்கு போக வேண்டுமே என்று சற்று வருத்தப்பட்டேன். எனக்கு மாமியார் இல்லை; கணவருடன் பிறந்த இரு சகோதரிகளும், சென்னையில் அவரவர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
மாமனாருக்கு, தன் மகன் மீது மிகவும் பிரியம். பெண் பார்க்க வந்த அன்றே, 'என் மகனுக்கு ஏற்றபடி, 'லைப்-ஸ்டைல்' மாற்றிக் கொள்ளணும்...' என்று, அதிகார தொனியில் பேசினார். அப்போதே எனக்கு நடுக்கம் ஆரம்பித்து விட்டது.
திருமணத்தன்று, சீர்வரிசைகளைப் பார்த்து, 'இதென்ன பழங்காலம் போல், பித்தளை, இரும்பு பாத்திரங்களை அடுக்கி வைத்திருக்கிறீர்கள்... டில்லியில், பெரிய பெரிய உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் அடிக்கடி விருந்துக்கு வருவர். மாடர்னாக, 'டின்னர் செட்' வாங்கி கொடுங்கள்...' என்றார்.
எனக்கும், குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியாகி விட்டது. திருமணம் நின்று போனால், ஊரில் தலைகாட்ட முடியாது என்பதால், என்னை சமாதானப்படுத்தி, மண மேடையில் அமர வைத்தனர்.
திருமணம் முடிந்து, டில்லி சென்றதும் ஆரம்பித்தது கஷ்ட காலம். என் வீட்டில், அம்மா, அத்தைகள், அக்காக்கள் மற்றும் அண்ணிகள் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்ததால், எனக்கு சமைத்து பழக்கம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், ஓரளவுக்கு சமாளிக்கும் அளவுக்கு சமையலை கற்றுக் கொண்டிருந்தேன். அதை வைத்து சமாளித்து கொள்ளலாம் என்று தைரியமாக இருந்தேன். ஆனால், நடந்ததோ வேறு.
கணவருக்கும், மாமனாருக்கும் தமிழ்நாட்டு சமையல் தான் பிடிக்கும். இதற்காக, தினமும் விடியற்காலையில் எழுந்து, இட்லி, பூரி, பொங்கல், தோசை மற்றம் அதற்கு பொருத்தமான, 'சைடு- டிஷ்' செய்ய வேண்டும். பூரியோ, இட்லியோ கொஞ்சம் பதம் தவறி போனால், கடுமையான தண்டனை கொடுப்பார், மாமனார்.
ஒருநாள், பூரி சற்று கனமாக போய் விட்டது என்று, சூடான எண்ணெயை என் உள்ளங்கையில் ஊற்றி விட்டார். தோசை சற்று கனமாகி விட்டது என்று, சூடான தோசை கல்லில், என் கையை வைத்து, தேய்த்து விட்டார்.
எதையும் கண்டும் காணாமல் போய் விடுகிறார், என் கணவர். இதையெல்லாம் விட, திருமணமாகி இந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும், எங்களுக்கு முதலிரவே நடக்கவில்லை.
'என் மகனுக்கு ஏற்றபடி, ஸ்டைலாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச கற்றுக் கொள். நாலு பெரிய மனிதர்கள் வரும் போது, நாகரிகமாக நடந்து கொள். அதன்பின், நானே உங்களை, காஷ்மீர், சிம்லா என்று தேனிலவுக்கு அனுப்பி வைக்கிறேன்...' என்கிறார், மாமனார்.
தினமும், கையில் குச்சி வைத்துக் கொண்டு, ஆங்கிலத்தில் பேச பயிற்சி கொடுத்து வருகிறார். ஹிந்தியும் கற்று தருகிறார். தவறாக கூறி விட்டால், அடிவிழும். இதில், ஒரே நன்மை என்னவென்றால், வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களிடம், ஹிந்தியில் சரளமாக பேச ஆரம்பித்து விட்டேன்.
தன் மகன் மீது கொண்ட பிரியத்தால் இப்படி நடந்து கொள்கிறார். அவரிடமிருந்து மகனை பிரித்து விடுவேனோ என்று, அவர் பயப்படுவதும் புரிந்தது. என் வீட்டினர் யாரிடமும் போனில் கூட பேச முடியாது. என் மொபைல் போன் கூட மாமனாரிடம் தான் உள்ளது.
இந்த பிரச்னையில் இருந்து மீள்வது எப்படி என, நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.
- இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கூட்டுக் குடும்பத்தில் சுகமாய் வாழ்ந்த உன்னை, டில்லியில், ஹிட்லர் மாமனார் வீட்டுக்கு மணம் முடித்துக் கொடுத்தது, உன் குடும்பம் செய்த முதல் தவறு.
ஒரு பொறுப்பான தந்தை, தன் மகனுக்கு பொருத்தமான மணமகள் தேட வேண்டுமே தவிர, தனக்கு பொருத்தமான மருமகள் தேடக் கூடாது.
எனக்கு தெரிந்து, திருமணத்திற்கு முன், சுடுநீர் கூட வைக்கத் தெரியாத பெண்கள், திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில், நளபாகத்தில் துாள் கிளப்புகின்றனர்.
தேவையும், விருப்பமும், கணவனின் மீது காதலும் இருந்தால், தானாகவே ஒரு பெண், சமையல் கலை நிபுணர் ஆகிவிடுவாள்.
உன் மாமனார் முன்கோப அவசரக் கொழுக்கட்டை!
ஓர் ஆணோ, பெண்ணோ ஒரு புதுமொழி பேசும் பகுதியில் வசிக்க நேர்ந்தால், இரண்டே ஆண்டுகளில் அந்த மொழியைக் கற்றுக் கொள்வர். அப்படித்தான், நீயும் ஹிந்தி கற்றுக் கொண்டு இருந்திருப்பாய்.
ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் பெரிய வித்தை இல்லை. உன் கணவர் மற்றும் சில செயலிகள், 'ஆன்லைன்' வாயிலாக, எளிதாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம். ஹிந்தி, ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மகன் -- மருமகள் சாந்தி முகூர்த்தத்தை தடுத்து நிறுத்தியிருக்கும், உன் முட்டாள் மாமனாரை என்ன சொல்வது!
உன் கணவர் இல்லாத சமயத்தில், உன் மாமனாருடன் மனம் விட்டு பேசு.
'மாமா... உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, ஒரு பெண்ணை பார்த்து, உங்கள் மகனுக்கு கட்டி இருக்கலாமே... எதற்கு என் வாழ்க்கையை பாழாக்குனீர்கள்? எனக்கு, நல்ல குணமுள்ள மாமனார் தான் தேவை; ஹிட்லர் மாமனார் இல்லை.
'உங்கள் திருமண வாழ்க்கை முற்று பெற்று விட்டது. அத்தை இறந்து விட்டார். சாப்பிட்டு முடித்தபின், பந்தியிலிருந்து எழாமல், பக்கத்து இலைக்காரனை ஏன் சாப்பிட விடாமல் தடுக்கிறீர்கள்? உங்கள் நடத்தையின் உள்நோக்கம் என்ன?
'உங்களின் போலி கவுரவத்துக்கு நானும், உங்கள் மகனும் பலி ஆடுகளா? என் மொபைல் போனை கொடுக்கிறீர்களா அல்லது புதிய போன் வாங்கிக் கொள்ளவா?
'பத்து தடவை பூரி சுட்டால், ஓரிரு முறை பதம் தவறத் தான் செய்யும். நான் தயாரிக்கும் பூரி பிடிக்கவில்லை என்றால், 'ஆன்லைனில்' தருவித்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். சூடு போடும் வேலை எல்லாம் வைத்துக் கொண்டால், நான் வேறு முடிவு எடுக்க வேண்டியிருக்கும்.
'இன்னும் ஒரு வாரத்திற்குள், எங்களை தேன் நிலவுக்கு அனுப்பி வையுங்கள். இல்லை என்றால், நான் பிறந்த வீடு போய் விடுவேன். உங்கள் ஹிட்லர் குணம் மாறும் வரை, டில்லியில் கால் வைக்க மாட்டேன்...' எனக் கூறு.
கணவரிடமும், உன் நிலையை விளக்கி, நல்ல முடிவை எடுக்கச் சொல்.
மாமனாரை வெறுப்பேற்ற அவரிடம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி பேசு. இரு உதடுகள் நடுவே சுட்டுவிரலை பதித்து, 'கபர்தார் சாச்சா!' என கிசுகிசு.
'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!' என, தமிழச்சியாய் மாறி பரிகசி.
- என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.