
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 24 வயது பெண். படிப்பு: பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ். எனக்கு ஒரு தங்கை. அரசு பணியில் உள்ளார், அம்மா.
அம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நானும், தங்கையும் குழந்தையாக இருந்தபோதே பிரிந்து சென்று விட்டார், அப்பா. அம்மா பாட்டியும், தாத்தாவும் கிராமத்தில் வசித்து வந்தனர். காலையில் எழுந்து, எல்லா வேலைகளையும் முடித்து, எங்களுக்கு டிபன், மதிய சாப்பாடு எல்லாம் தயார் செய்து டப்பாவில் போட்டு கொடுத்து விடுவார், அம்மா. எனக்கு அப்போது, 6 வயது, தங்கைக்கு, 3 வயது.
வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் எங்களை விட்டுவிட்டு, வேலைக்கு சென்று விடுவார், அம்மா. பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்து, கதவை திறந்து, நானும், தங்கையும் வீட்டுக்குள் சென்று, உள்பக்கமாக தாழ் போட்டுக் கொள்வோம்.
பக்கத்து வீட்டு அக்கா, இரண்டு டம்ளரில் பால் எடுத்து வந்து தருவார். அதைக் குடித்து விட்டு, வீட்டிலிருக்கும் பிஸ்கட் சாப்பிட்டு, அம்மா வரும் வரை விளையாடிக் கொண்டிருப்போம். இரவு, 7:00 மணிக்கு வந்துவிடுவார், அம்மா.
இருட்ட ஆரம்பித்ததுமே எனக்கு பயம் வந்து விடும். எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு, கட்டிலில் உட்கார்ந்து கொள்வேன். துாங்கி விடுவாள், தங்கை.
அம்மா வந்து, சமையல் செய்து பின், சாப்பிடுவோம். அதன்பின், எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். சிறு வயது முதலே, தனிமையில் இருந்து இருந்து, எனக்கு எதைப் பார்த்தாலும், பயம் வந்துவிடும்.
இருட்டைப் பார்த்தால் பயம், மலையை அண்ணாந்து பார்த்தால் பயம், நீர்வீழ்ச்சியை பார்த்தால் பயம், யாராவது சத்தமாக சண்டை போட்டாலோ, நாய் குரைத்தாலோ பயத்தில் நடுங்கி விடுவேன்.
நிறைய தன்னம்பிக்கை புத்தகங்கள் படி என்றனர்; தியானம் செய்ய கூறினர். அந்த நேரத்துக்கு சற்று ஆறுதலாக, தைரியமாக இருப்பது போல் தோன்றும். ஆனால், ஓரிரு நாளில் மீண்டும் பயம் என்னை ஆட்கொள்ளும்.
தனியார் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறேன். வேலையில் ஏதாவது தப்பு வந்துவிடுமோ, மேனேஜர் திட்டுவாரோ என்று பயப்படுகிறேன். என்னுடன் பணிபுரியும் தோழி தான், அவ்வப்போது வந்து தைரியம் சொல்லி செல்வாள்.
இப்படியே இருந்தால், திருமணம் ஆகாது என்று கருதி, என்னை, 'கவுன்சலிங்' கொடுக்க மருத்துவரிடம் அழைத்துச் சென்றார், அம்மா.
மருத்துவர் கூறிய அறிவுரைகளை கேட்டு, ஓரளவுக்கு மனதை தேற்றி, நானே சில நாட்கள், தனியாக இருட்டில் செல்ல ஆரம்பித்தேன். சில நாட்கள் அம்மாவோ, தங்கையோ பின் தொடர்வர். நான் எதையெல்லாம் கண்டு பயப்படுகிறேனோ அங்கெல்லாம் வலிய அழைத்து சென்று, தைரியப்படுத்துவார், அம்மா.
சில நாட்கள், நார்மலாக இருப்பேன். மீண்டும், பழைய கதைத்தான். என்னை நினைத்து அம்மாவும், தங்கையும் மிகவும் கவலைப்படுகின்றனர். அவர்களுக்காகவாவது நான் மாற வேண்டும் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்யட்டும் அம்மா?
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உளவியல் பிறழ்நிலையில் மூன்று வகைகள் உள்ளன.
1.பயம், அச்சம், வெகுளி எனப்படும், 'போபியா!'
2. பித்து எனப்படும், 'மேனியா!'
3.நோய்க்குறி தொகுப்பு எனப்படும், 'ஸிண்ட்ரோம்!'
மகளே! உனக்கிருப்பது போபியா. உலகில் 500க்கும் மேற்பட்ட போபியாக்கள் உள்ளன.
ஆண்களை விட இரு மடங்காய் பெண்கள், 'போபியா'களால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு பொருள், சூழ்நிலை, இருட்டு, மிருகங்கள், இயற்கைச் சுற்றுச்சூழல் மற்றும் ரத்தம், ஊசி, காயம் என, 'போபியா'கள் பொதுவாக ஏற்படும்.
இப்போது உன் விஷயத்துக்கு வருவோம்...
உனக்கு எதையெதைக் கண்டால் பயம் என்பதை, மனதிற்குள் பட்டியலிடு. இருட்டைக் கண்டு பயப்படுகிறாய் என்றால், பேய் இருப்பதாக நம்புகிறாய் என, பொருள். பேய் எனப்படுவது நேற்றைய மனிதர்கள் தானே. நாம் நாளைய பேய்கள் தானே!
ஆவிகளுக்கும், உனக்கும் என்ன பகை? அவை உண்மையாக இருந்தால் உனக்கெதற்கு கேடு விளைவிக்கப் போகின்றன? அவை பாட்டுக்கு இருக்கட்டும். நீ உன் வேலையை பார்.
கந்தசஷ்டி கவசம் முணுமுணுத்துக் கொண்டே முதல்நாள் ஐந்து நிமிஷம், இரண்டாம் நாள் பத்து நிமிஷம் என, இருட்டில் நேரத்தை கூட்டிக்கொண்டே போ.
தினமும் காலை, ஆளுயர கண்ணாடி முன் நின்று, 'என்னிடம் தாழ்வு மனப்பான்மையோ, அவநம்பிக்கையோ அறவே கிடையாது. வங்கி வேலையை மிகச்சிறப்பாக செய்வேன். பயம், என் கால்துாசிக்கு சமம். பயத்தை காலில் இட்டு நசுக்குவேன், நான் சாதிக்கப் பிறந்தவள்...' என, உரக்கக் கூறி சுயவசியம் செய்.
சிறிதும் மனம் தளராமல் மனநல மருத்துவரிடம், 'கவுன்சிலிங்' பெறலாம்.
'போபியா'களை விரட்ட, சாதகமான அனைத்து சூழல்களுக்கும் ஒத்துழைப்பு தா.
எப்போதாவது, ஏதாவது ஒரு சூழலில் பயந்தால், உனக்கு நீயே சத்தமாக பேசி, உன்னை அமைதிபடுத்திக் கொள்.
நீ தொடை நடுங்கி பயில்வான் இல்ல. புல்டோஸர் போல, உன் பயங்களை அடித்து நொறுக்கு மகளே! பயங்களுக்கு பயம் வந்து தலைதெறிக்க ஓடி ஒளியட்டும்.
கோழைலட்சுமி, தைரியலட்சுமி ஆக வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.