
அதிசயிக்கத்தக்க நினைவாற்றல் கொண்டவர், சுவாமி விவேகானந்தர். ஒருமுறை படித்தால் போதும், அது அப்படியே அவருடைய நினைவில் பதிந்து போகும். அவருடைய அறையில், 'என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' எனும் தகவல் களஞ்சியத்தின், 25 தொகுதிகள் இருந்தன.
உடல் நலமில்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த, விவேகானந்தரை உடனிருந்து கவனித்துக் கொண்டார், அவரது சீடர் சரத் சந்திரர்.
'என்சைக்ளோபீடியா' புத்தகங்களை பார்த்ததும், தனக்கு தானே, 'இவற்றைப் படித்து முடிக்க ஒரு ஜென்மம் போதாது போலிருக்கிறதே...' என்று சொல்லிக் கொண்டிருந்தார், சரத் சந்திரர்.
இதைக் கேட்டு, 'சரத், இவற்றை படிக்க எதற்காக அவ்வளவு காலம். நான் சில மாதங்களிலேயே இவற்றில், 10 தொகுதிகளை படித்து முடித்து விட்டேன்...' என்றார், விவேகானந்தர்.
தான் சொன்னதை, சரத் சந்திரர் நம்பவில்லை என்பதை, அவரது முகத்தை பார்த்தே தெரிந்து கொண்டார், விவேகானந்தர்.
உடனே, அவரிடம் அந்த புத்தகங்களை எடுத்துவர உத்தரவிட்டார். அந்த தடிமனான தலையணை போன்ற புத்தகங்களை எடுத்து வந்தார், சரத் சந்திரர்.
'சரத், முதல் பத்து தொகுதிகளிலிருந்து நீ, எதை வேண்டுமானாலும் கேள். அதற்கு நான் பதில் கூறுகிறேன்...' என்றார், விவேகானந்தர்.
புத்தகங்களின் பல பகுதிகளிலிருந்து பல கேள்விகளை கேட்டார், சரத் சந்திரர். அந்தக் கேள்விகளுக்கான பதிலை புத்தகத்தில் இருப்பது போலவே தெளிவாக சொன்ன, விவேகானந்தரின் நினைவாற்றலைக் கண்டு வியந்தார், சரத் சந்திரர்.
****
ஒருமுறை, விவேகானந்தரிடம், 'உங்கள் சமயம் என்ன?' எனக் கேட்டனர்.
'காட்டிற்கு சென்று கண்மூடி தவம் செய்வது தான், உயர்ந்த சமய ஒழுக்கம் அல்ல. மக்களின் பசியை போக்குவதே, சமயத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
'என் நாட்டில் பசியால் வாடுவது, ஒரு நாயாக இருந்தாலும், அந்நிலையில் அதற்கு உணவளிப்பது தான் என் சமயம்...' என்று கூறினார், விவேகானந்தர்.
****
நான்கு ஆண்டுகள், பல்வேறுநாடுகளில் ஆன்மிக பயணம் முடித்து, இந்தியா திரும்பும் முன் இங்கிலாந்து சென்றார், விவேகானந்தர்.
அங்கு அவரை சந்தித்த பத்திரிகை நண்பர் ஒருவர், 'சுகமும், சந்தோஷமும் நிறைந்த மேலை நாடுகளை எல்லாம் சுற்றி அனுபவித்தப் பின், தங்களது தாய் நாட்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
'மேல் நாடுகளுக்கு நான் பயணம் செய்யும் முன், என்னுடைய நாட்டை சாதாரண அன்புடன் தான் நேசித்தேன். அந்த நாடுகளை எல்லாம் பார்த்த பின், இந்திய மண், புனிதமானதாக தோன்றுகிறது.
'இந்தியாவில் வீசும் காற்றே பரிசுத்தமானதாக தோன்றுகிறது. இந்திய நாடு முழுவதும் எனக்கு புனிதத் தலமாகவும் தோன்றுகிறது...' என்று பெருமையுடன் பதிலளித்தார், விவேகானந்தர்.
****
ஒருமுறை தன் மாணவர்களிடம், 'அரை மணி நேரம் தியானம் செய்தால், அது ஆறு மணி நேர உறக்கத்துக்கு சமமானது...' என்றார், விவேகானந்தர்.
'சுவாமி, ஆறு மணி நேரம் துாங்கினால், அரை மணி நேர தியானத்துக்கு சமமா?' என்று கேட்டார், மாணவர் ஒருவர்.
'ஒரு முட்டாள் தியானம் செய்தால், அறிவாளியாக முடியும். ஒரு அறிவாளி துாங்கினால், முட்டாளாகத்தான் ஆக முடியும்...' என்றார், விவேகானந்தர்.
- நடுத்தெரு நாராயணன்