
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது: 36. கணவர் வயது: 40. என்னுடைய, 26வது வயதில் திருமணமானது. நான், பி.காம்., படித்துள்ளேன். கணவர் மற்றும் அவரது அப்பாவும் மருத்துவர். கணவருடன் கூட பிறந்த இரு சகோதரிகளின் கணவர்களும், மருத்துவர்கள் தான். பெரிய நர்சிங் ஹோம் வைத்துள்ளார், மாமனார்.
என் அப்பா, மத்திய அரசு பணியில் இருந்தார். அம்மா, இல்லத்தரசி. எனக்கு இரு அண்ணன்கள், இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி.
எனக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால், திருமணம் தள்ளி போனது. அப்போது தான், இந்த வரன் தேடி வந்தது. தன் மகனுக்கும் செவ்வாய் தோஷம் இருந்ததால், என்னைத் தேடி வந்து பெண் கேட்டனர்.
மத்திய தர வகுப்பை சேர்ந்த எங்களுக்கு, பணக்கார வீட்டு மாப்பிள்ளை பொருத்தமாக இருக்குமா என கலங்கினார், அம்மா. அப்பாவுக்கும் அந்த எண்ணம் இருந்தது.
'நாம் நேரில் சென்று விசாரிப்போம். இந்த திருமணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், முக்கியமாக மாப்பிள்ளைக்கும் சம்மதம் என்றால் ஒப்புக் கொள்வோம்...' என்றனர், என் அண்ணன்கள்.
ஆனால், அவர்களோ, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு வரவழைத்து, அங்கேயே பேசி முடிக்கலாம் என கூறிவிட்டனர். என் பெற்றோர் மற்றும் அண்ணன்கள் அங்கு சென்றனர். மாப்பிள்ளையின் பெற்றோர் மட்டும் வந்திருக்க, அவர்களுடன் பேசிவிட்டு வந்தனர். பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கும் அதே ஹோட்டலில் தான் ஏற்பாடு செய்தனர்.
'கோட் சூட்' அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தார், மாப்பிள்ளை. அவரது இருபக்கமும், அவர்கள் வீட்டு மாப்பிள்ளைகள், 'பாடி கார்டு' போன்று நின்றிருந்தனர். அவர் பேச முற்படும் போதெல்லாம் தடுத்தனர்.
இதுகுறித்து, என் அப்பாவிடம் நான் கூற, 'மாப்பிள்ளை சங்கோஜ பேர் வழி என்று ஏற்கனவே கூறிவிட்டனர்...' என்றார்.
திருமணத்தை எளிமையாக நடத்தலாம் என, வெளியூர் கோவில் ஒன்றில் ஏற்பாடு செய்தனர். என் பெற்றோராலும் அதிக செலவு செய்ய முடியாது என்பதால் சம்மதித்தனர்.
புகுந்த வீட்டுக்கு வந்த பின், 'கணவருடன் ஒரே அறையில் தங்கக் கூடாது. இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பதால், சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். அதன் பின், பார்த்துக் கொள்ளலாம்...' என்றார், மாமியார்.
நான் அங்கு சென்று, இரண்டு மாதங்களாகியும், பூஜை செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. காலையில் நான் எழுவதற்கு முன்பே கணவர், நர்சிங் ஹோமுக்கு சென்று விட்டதாக கூறுவார், மாமியார். இரவும் நான் துாங்கிய பின்னரே வருவார் எனக் கூறி, என்னை சீக்கிரம் சாப்பிட்டு, படுத்துக் கொள்ள சொல்லிவிடுவார்.
ஒருநாள், சமையற்காரர், 'லீவு' என்பதால், என்னை சமைக்க சொன்னார், மாமியார். மாடியில் கணவர் அறையில் ஏதோ சத்தம் கேட்க, அவரை பார்க்க, டிபன் எடுத்து சென்றேன். அறைக்குள், அரைகுறை உடையுடன், பாத்ரூம் வாசலில் விழுந்து கிடந்தார், கணவர்.
அவரை துாக்கி, கட்டிலில் படுக்க வைத்தேன். என்னை பார்த்து, 'நீ யார்? சமையற்காரர் எங்கே?' என்று கேட்டு, ஏதேதோ பேசி, அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்தார். அவர், ஒரு மனநோயாளி என்று புரிந்துவிட்டது.
கீழே இறங்கி வந்ததும், 'உன்னை யார் மாடிக்கு போக சொன்னது?' என்று கேட்டு, கடுமையாக பேசிவிட்டார், மாமியார்.
ஒரு பைத்தியத்தை என் தலையில் கட்டத்தான், இப்படி நாடகம் ஆடியுள்ளனர் என்பது புரிந்து, என் அப்பாவுக்கு போன் செய்து, விபரம் கூறினேன். அவரும் நேரில் வந்து கேட்க, மாமனாரும் - மாமியாரும் அவரை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டனர்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் கணவர், வெறித்தனமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த முடியாமல், ஏதேதோ மாத்திரை மற்றும் ஊசி போட்டு சமாளித்தார், மாமனார்.
பிறந்த வீட்டுக்கு திரும்ப போக நினைத்தால், என் உடன்பிறந்தவர்களின் திருமணத்துக்கு தடங்கல் வருமோ என்று தயங்கினேன். இதையடுத்து, என் மாமியாரின் நடவடிக்கை மாறியது.
ஒரு கட்டத்துக்கு பின், என்னால் கொடுமைகளை தாங்க முடியவில்லை.
மாற்றுத் திறனாளிகளின் இல்லம் ஒன்றில், காசாளர் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரம் பார்த்து, அங்கு சேர்ந்தேன். உணவு மற்றும் தங்கும் வசதியுடன் பாதுகாப்பும் இருந்ததால், அங்கேயே சென்று விட்டேன்.
காலம் உருண்டோடியது. என் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
மாமனார் - மாமியாருக்கு, 8-0 வயது சதாபிஷேகத்துக்கு அழைத்தனர். நானும் போனேன். வயதான தோற்றத்தில் இருந்தார், கணவர். தொடர் சிகிச்சையில் சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறினர்.
'எங்களுக்கு வயதாகி விட்டது. எங்களுக்கு பின், மகனை யார் பார்த்துக் கொள்வர். நீ மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடு...' என, கெஞ்சுகிறார், மாமியார்.
நம்பிக்கை துரோகம் செய்த இவர்களுடன் செல்ல, எனக்கு உடன்பாடு இல்லை. அதுமட்டுமல்லாமல், என்னை நம்பி மாற்றுத்திறனாளிகளின் இல்லத்தை என்னிடம் ஒப்படைத்து உள்ளனர். அங்கிருப்பவர்களுக்கு என் உதவி நிச்சயம் தேவை என்பதால், என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. எனக்கு தங்கள் ஆலோசனை தேவை.
— இப்படிக்கு,
உங்கள் மகள்
அன்பு மகளுக்கு —
மொத்தத்தில், உன் திருமணம், உன் குடும்பத்தாரின் அஜாக்கிரதையால் விளைந்த அலங்கோலம்.
எப்போது உன் கணவர், குறையுள்ளவர் என்று தெரிந்து கொண்டாயோ, சட்டப்படி விவாகரத்து பெற்றிருக்க வேண்டும்.
மாமனார் -- மாமியார் சதாபிஷேகத்துக்கு நீ போயிருக்கக் கூடாது. உன் திருமணத்தில் கணவர் தவிர மாமனார், மாமியார், நாத்தனாரின் கணவர்கள் குற்றவாளிகள். அவர்கள் உன்னிடத்தில் மன்னிப்பு கேட்டனரா? செய்த தவறுக்கு பிராயசித்தமாக பெரும்தொகை நஷ்டஈடாக கொடுத்தனரா?
அவர்களே தங்கள் தவறை உணர்ந்து, திருமண பந்தத்திலிருந்து விடுவித்து, உனக்கு மறுமணம் செய்து வைத்திருக்க வேண்டும்.
உன்னை தங்கள் மருமகளாக, மீண்டும் வீட்டுக்கு அழைக்கவில்லை. அவர்களின் மகனை கவனித்துக் கொள்ளும், ஆயாவாக உன்னை பார்க்கின்றனர்.
இப்போதும் ஒன்றும் கெட்டு போகவில்லை. கணவரை விவாகரத்து செய். முன்னாள் கணவர் வீட்டாருடன் ஆன தகவல் தொடர்பை அறவே துண்டி.
நீ, இப்போது பார்க்கும் பணியை தொடர்ந்து செய். மேற்படிப்பு படித்து, யு.ஜி.சி., நெட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையலாம். 42 அல்லது 43 வயதில் கூட, நீ கல்லுாரி ஆசிரியர் பணிக்கு போகலாம்.
தகுதியான நபர் கிடைத்தால் நீ, மறுமணம் செய்து கொள்ளலாம்.
அண்ணன்கள், தங்கைகள் மற்றும் தம்பி குடும்பங்களுடன் உறவில் இரு.
பெற்றோரை (இப்போது அவர்கள் உயிருடன் இருந்தால்) அரவணைத்துக் கொள்.
துரோகிகளை மன்னித்து விடு. ஆனால், அவர்கள் மீண்டும் துரோகம் செய்ய வாய்ப்பைத் தராதே.
உன்னால் முடியும் என, நம்பு.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.