sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பூட்டு!

/

பூட்டு!

பூட்டு!

பூட்டு!


PUBLISHED ON : பிப் 02, 2025

Google News

PUBLISHED ON : பிப் 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கை ஒரு கதவு. இதற்கு பூட்டுத் தேவை. இது, அழகானது மட்டுமல்ல; பாதுகாப்பானது கூட. அன்னியர், உள்ளே நுழையாதபடி, ஒரு அரணாக தாங்கி இருக்கிறது.

ஒருமுறைக்கு இருமுறை, பூட்டி இழுத்துப் பார்ப்பது கூட, திரும்பி வந்தால் நமக்கு இடமிருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையில் தான். வாழ்க்கைக் கதவு திறந்தால், உள்ளே நம் பிரதிபிம்பங்கள் அங்கே இருக்கும்.

வாழ்க்கை எனும் வீட்டுக்கு, பூட்டும், சாவியும் தேவை.

மாலதிக்கு நிகழ்ந்தது கூட, இப்படித் தான். இந்த வாழ்க்கை பூட்டை உடைத்தது, சேது தான். தனக்கென்று ஒரு வீடு இருப்பதாக நினைத்து வாழ்ந்து வந்தாள், மாலதி.

பூட்டை உடைத்தால் குற்றம். சொந்தக்காரனே உடைத்தாலும் தண்டனை கிடையாதா?

கோர்ட்டு தீர்ப்பு ஆகிவிட்டது. விவாகரத்து வழக்கு. வழக்கறிஞர், நீதிமன்றம், கவுன்சிலிங் என, ஐந்து ஆண்டு காத்திருப்புக்குப் பின், விவாகரத்து கிடைத்து விட்டது.

ஒரு பெண் குழந்தைக்கு தாயாக மாலதி இருந்ததால், குழந்தையின் பராமரிப்புக்காக, இவள் குடியிருந்த மஞ்சக்காணி வீட்டையும் திரும்பத் தந்து, இழப்பீடாக ஒரு தொகையும், ஜீவனாம்சமாக வங்கியில் போடப்பட்டது.

பூட்டி இருந்த வீடு. கோர்ட் சாட்சியுடன் அந்த வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைய வழி வகுத்தது, நீதிமன்றம். ஐந்து வயது குழந்தை ப்ரியாவுடன், பல ஆண்டுகளுக்கு பின், அந்த வீட்டிலேயே புதிய பயணம்.

பட்டாம்பூச்சி, பறப்பதை ஜன்னல் வழியே பார்த்து ரசிப்பதில், மாலதிக்கு ஆசை. ஆனால், அதை தீப்பெட்டிக்குள் அடைத்து ரசிப்பதில், சேதுவுக்கு ஆசை. இவர்கள் இணைந்தது எப்படி?

தும்மல் வந்தது. பழைய நினைவுகளும் சேர்ந்தே வந்தன.

'வீடு முழுவதும் குப்பை, குப்பை. எங்கு பார்த்தாலும் குப்பை. எத்தனை பெருக்கினாலும் குப்பை...' சேதுவின் குரல் ஒலித்தது.

'இது என்ன டேபிளா, குப்பைத் தொட்டியா? முகத்துக்கு பவுடருக்கு பதிலா இந்த துாசியைப் பூசிக்கோ. செலவாவது மிச்சம்....'

'தோசைக்கு மிளகாய்ப் பொடி வேணும்ன்னு எத்தன நேரமா கேட்டுட்டு இருக்கேன்...'

'ப்ரியாவுக்கு உடம்பு சரி இல்லைனா, நீ டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போ. தாயும், மகளும் பேசாம உங்க அம்மா வீட்டுக்கு போயிடுங்க. உங்களுக்கு ஊழியம் செய்ய முடியாது...'

வீடு பாதுகாப்பானது தான். ஆனால், திருடனையே உள்ளே வைத்து பூட்டிக் கொண்டால் என்ன பாதுகாப்பு கிடைக்கும்.

இதை உடைத்தது, மாலதியின் தாய் தான். அந்தக் கால மனுஷி அவள். 'காலுக்கு உதவாததை கழட்டி எறி...' என்று சொன்னவளும் அவள் தான்.

திருமணம் செய்து கொடுத்தால் கடமை முடிந்தது என, மகளுக்கு திருமணம் செய்து முடித்தாள். ஆனால், இப்போது கடமை தொடர்கிறது. அதே பழைய வீட்டை புதுப்பிப்பது, பேத்தி ப்ரியாவின் பராமரிப்பு எல்லாமே, அந்த தாயின் வேலையாகிப் போனது.

இருபது ஆண்டு காலத்தின் நெடிய கணக்கு. மானுடத்தின் ஒரு கனவு நேரம்.

பட்டம் பெற்று ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கிறாள், மகள் ப்ரியா. வீட்டு வாடகையும், ஒரு வருமானமாக இருந்தது. படிப்பு நிமித்தம் இடம்பெயர்ந்து போகும் போது, பழைய பொருட்களை ஒரு அறையில் போட்டுவிட்டு, மீதி இடத்தை அப்படியே வாடகைக்கு கொடுத்து விட்டுத்தான் போயிருந்தனர்.

இப்போது ஒரு பழைய பீரோவும், குப்பையும் தான் மிச்சம்.

''அம்மா,'' என அழைத்தாள், ப்ரியா.

குரல் கேட்டு திரும்பினாள், மாலதி.

''ஏம்மா, அறையில ஒரு பழைய ஸ்டீல் பீரோ இருக்கு இல்ல. சாவி கூட தொலைஞ்சு போச்சுன்னு சொன்னியே. பேசாம கம்பெனிக்காரங்கள கூப்பிட்டு, பூட்ட உடைச்சு, நசுங்கின பழசெல்லாம் சரி பண்ணி நாமே வச்சுக்கலாம். இத்தனை நாளா தான் வெளியூர்லே இருந்தோம். இப்போ சொந்த வீடு வந்துட்டோமே... என்ன சொல்ற?''

மீண்டும், சேதுவின் குரல்.

'நாயெ எதிர்த்தா பேசறே?' என, இவள் மீது, அரிவாள்மணையை வீசினான், சேது. இவள் சட்டென்று விலகிக் கொள்ள, ஸ்டீல் பீரோவைத் தாக்கி, பீரோ முழுவதும் கீறல்களை ஏற்படுத்தி, தரையில் வீழ்ந்து, இரண்டாக உடைந்தது.

மற்றொரு முறை, அம்மிக் குழவியை இவள் மீது குறி பார்த்து எறிய, குறி தவற இவள் தப்பினாள். ஆனால், பாவம் பீரோ காயப்பட்டது.

பல வரலாற்று சின்னங்களை தனக்குள் அடக்கிய ஒரு ஆவணம், அந்த பீரோ. எத்தனை எத்தனையோ நினைவுத் தழும்புகள்?

''என்னமா? அந்த பீரோவை, 'ரிப்பேர்' பண்ணிடலாமா?''

இடை மறித்தாள், மாலதி.

''அம்மை வந்த முகத்துக்கு, அந்த தழும்பு தான் அடையாளம். அது, அப்படியே இருக்கட்டும். அம்பாவோட ஆசையா இருக்கட்டுமே. உனக்கு என்ன கஷ்டம்?''

ப்ரியாவுக்கு அம்மாவை மீறி எதையும் செய்து பழக்கம் இல்லை. விவாகரத்தானவள் அம்மா என்பது மட்டும் தெரியும். மற்றது எதுவும் அம்மாவிடம் கேட்டதும் இல்லை; மாலதி சொல்லவுமில்லை.

'சிங்கிள் மதர்' ஆக, அம்மா வாழ்ந்து, தன்னை ஆளாக்கியது மட்டும் தெரியும். பழைய கதை சொல்வாள், பாட்டி. ஆனால், சொந்தக் கதை எதுவும் சொல்ல மாட்டாள். இப்போது புகைப்படத்தில் மாலையுடன் இருக்கிறாள்.

அன்று...

''ப்ரியா, இன்னைக்கு அன்னதானம் செய்யப் போறேன். 'கேட்டரிங்'காரங்ககிட்டே சொல்லிட்டேன். வழக்கம் போல நமக்கு தெரிந்த ஆட்டோகாரர் தயாளன் வருவார். எனக்கு வேலை இருக்கு. நீ போயிட்டு வந்துடறியா? உனக்கு, இன்னைக்கு, 'லீவு' தானே?''

அம்மா வழக்கமாக இப்படி சில நாள், அன்னதானம் செய்வது வழக்கம் தான். கோவில் வாசலில், தெருவோரம் அனாதையாகக் கிடப்பவர்களுக்கு தேடித் தேடி தானம் செய்வாள். புளியஞ் சாதம், தேங்காய் சாதம் மற்றும் தயிர் சாதம் என, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து, வாட்டர் பாட்டிலுடன் அனைவருக்கும் கொடுத்து விட்டு வருவாள்.

இவளும் அம்மாவுடன் சில நாட்கள் போனதுண்டு.

இன்று இவள், தனியாக சென்றாள். தெரிந்த ஆட்டோ தான்.

திடீரென்று பெரியவர் ஒருவர், ஆட்டோ முன் வந்து விழ, ஏகக் குழப்பம். நல்லவேளை காயம் ஏதுமில்லை.

''பார்த்து வரக் கூடாதா ஐயா,'' என்றாள், ப்ரியா.

''எனக்கு ஒண்ணும் அடிபடலை, கவலைப்படாதீங்க. இங்க என்னமோ அன்னதானம் போடறதா சொன்னாங்க. அதான் வேகமா வந்தேன்,'' எனக் கூறி, மணலை தட்டி விட்டுக் கொண்டு எழுந்தார், அந்த பெரியவர்.

அவர் கையில், ஒரு பெரிய வளையத்தில் பூட்டு சாவி தொங்கிக் கொண்டிருந்தது.

''சாப்பாடு தானே? இதோ இங்கயே சாப்பாடு தயாரா இருக்கு. இந்தாங்க,'' என, ப்ரியா, சாப்பாடு டப்பாவை எடுத்து தர, ஆட்டோக்காரரும் உதவினார்.

''அண்ணாச்சி நீங்களா? நீங்க சாப்பாடு தேடி போக வேண்டாம். சாப்பாடு உங்களை தேடி வந்துடுச்சு. இந்தாங்க,'' என்றார்.

''அய்யா யாருன்னு தெரியுமாம்மா? மார்க்கெட்டில் உட்காந்திருப்பார். சாவி தொலைந்து போன, பூட்டுக்கெல்லாம் மாற்று சாவி போடுவார். யாரும் இல்லை அனாதை. கிடைச்சதை சாப்டுட்டு, கிடைச்ச இடத்தில படுத்து துாங்குவார்,'' என்றார், ஆட்டோக்காரர்.

சாப்பாட்டை வாங்கிக் கொண்டார், பெரியவர்.

''ஏழையோட பசி தீர்த்த அன்னபூரணி, நீங்க நல்லா இருக்கணும்,'' என, கை உயர்த்தி ஆசிர்வதித்தார்.

அன்னதானம் செய்து முடித்து, வீடு திரும்பும் போது, அம்மாவிடம் பேசுவதற்கு இன்று நிறைய விஷயம் இருப்பதாக நினைத்துக் கொண்டாள், ப்ரியா.

வாசல் கதவு சற்றே திறந்திருக்க, உள்ளே நுழைந்தாள். அறைக்குள் அந்த ஸ்டீல் பீரோ, லேசாகத் திறந்திருந்தது.

'அம்மா, சாவி தொலைந்து போயிற்று என்றாளே... எப்படி திறந்தாள்...' என, யோசித்தாள்.

ஒரு அட்டையில், புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. பழைய செய்தித்தாளில் இருந்து, கிழிக்கப்பட்ட படம். சற்றுமுன் பார்த்த அந்த பெரியவரின் முகம், அதில் தெரிந்தது.

'அது அப்படியே இருக்கட்டும்மா. முகத்துல அந்த தழும்பு அம்பாளுடைய ஆசிர்வாதமாக இருக்கிற மாதிரி, இந்த பீரோவும் ஒரு அடையாளமா இருந்துட்டுப் போகட்டும்...' என, அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

'இந்த நாள். அம்மா வரம் வாங்கி வந்த நாளா இருக்குமோ...' என, நினைத்துக் கொண்டாள், ப்ரியா.

மாடியில் அம்மா, 'காக்கா காக்கா...' என்று, காகத்துக்கு உணவு படைக்கும் சத்தம் கேட்டது.

அவசரமாக வெளியே வந்தாள், ப்ரியா. சிறிது நேரத்துக்கு பின், அப்போது தான் வந்தவளைப் போல், அழைப்பு மணியை அழுத்தினாள். அம்மாவுடன் பேச எந்த விஷயமும் இல்லை. வாசலில் காத்திருந்தாள், ப்ரியா.

விமலா ரமணி






      Dinamalar
      Follow us