
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 35 வயது பெண். பட்டப்படிப்பு படித்துள்ளேன். கணவர் வயது: 39. மருத்துவராக இருக்கிறார்.
என் கணவருக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். கணவர் ஒரு, அம்மா பைத்தியம். வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாம், 'அம்மா, அம்மா...' என, அவர் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பார்.
இரவு நேரம் மட்டும் என்னுடன் அறைக்குள் இருப்பார். கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மது அருந்திவிட்டால், அம்மா மடியில் சென்று படுத்துக் கொள்வார்.
'கல்யாணத்துக்கு முன்பு வரை, அவன் நன்றாக தான் இருந்தான். அதன்பின் தான் குடிக்க ஆரம்பித்துள்ளான்...' என, கூசாமல் கூறுவார், மாமியார்.
அவருக்கு, ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்ததை, அவரது உறவினர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார். திருமணமானதில் இருந்து, என்னை வெளியே எங்கும் அழைத்துச் சென்றதில்லை. எதுவும் வாங்கியும் தந்ததில்லை. நானாக ஏதாவது ஆசைப்பட்டு கேட்டால், 'அம்மாவிடம் கேட்டு, வாங்கிக் கொள்...' என்பார்.
எப்படியோ எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். குழந்தைக்கு தேவையானதைக் கூட, வாங்கி தர மாட்டார். என் பெற்றோர் தான், என்னென்ன தேவையோ அத்தனையையும் வாங்கி வந்து தருவர். வீட்டுக்கு வரும் என் பெற்றோரிடம் முகம் கொடுத்து பேச மாட்டார்.
வீட்டிலோ, வெளியிலோ நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் தன் அம்மாவிடம் கூறுவார். ஆனால், என்னிடம் பேசவே மாட்டார்.
உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போகும் போது மட்டும், என்னை நன்கு அலங்கரித்துக் கொள்ள சொல்வார். என்னுடன் பாசமாக இருப்பது போல், அவர்கள் முன்னிலையில் நடிப்பார். வீட்டுக்கு திரும்பியதும், தனித்தனி தீவாக மாறிவிடுவார்.
சமையல் செய்வது நான் தான் என்றாலும், அவர் அம்மா பரிமாறினால் தான் சாப்பிடுவார். சாப்பாட்டில் நிறை, குறை எதையும் சொல்ல மாட்டார். நானாக கேட்டால், 'என் அம்மா சமையல் போல் வருமா?' என்பார். இத்தனைக்கும் என் மாமியாரை விட, என் சமையல் நன்றாகவே இருக்கும்.
'நல்ல மனோவியல் மருத்துவரை பாருங்கள்...' என்றால், 'அவனுக்கு என்ன குறை. நீதான் பைத்தியம் போல் நடந்து கொள்கிறாய்...' என, என் மீது பாய்கிறார், மாமியார்.
'விவாகரத்து வாங்கிக் கொடுத்து விடுங்கள்...' என, என் பெற்றோரிடம் கூறினால், தயங்குகின்றனர்.
இந்த சூழ்நிலையில் என் குழந்தை ஆரோக்கியமாக வாழ்வானா என்பது சந்தேகமாக உள்ளது.
இதிலிருந்து மீள, நல்ல வழிக்காட்டுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கிரேக்க தொன்மக் கதைகளில், ஈடிபஸ் என்பவர், தீபெஸ் நாட்டின் அரசன். இவர், தன் தந்தையை கொன்று தாயை மணந்தார். இதை, 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்' என்பர். 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்' என்பது, ஒரு மகன், தன் தாயின் மீது பாலியல் மனப்பான்மையை கொள்வதையும், தந்தைக்கு எதிராக விரோதம் கொள்வதையும் குறிக்கும்.
உன் மருத்துவக் கணவர், 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்' மனநோயாளி. உலக திருமணமான ஆண்களில், 20 சதவீதம் பேர், 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸால்' பாதிக்கப்பட்டவர்கள் தான்.
ஓர் ஆணுக்கு அம்மாவின் மீது பாசம் இருப்பதில் தவறேதுமில்லை. ஆனால், அதை பகிர்ந்து கொள்ள மனைவி வந்துவிட்டால், இருவர் மீதான அன்பை காட்டுவதில் ஒரு கழைக்கூத்தாடி தனம் தேவை.
நான் சொல்லும் இரு உபாயங்களை கையாளு.
1 தாம்பத்யத்தை விரும்பி கணவர், உன்னிடம் வந்தால், சில நிபந்தனைகளை விதி. அம்மா கோண்டு கட்சியிலிருந்து, மனைவி கோண்டு கட்சிக்கு வந்தால் கிடைக்கும் சலுகைகளை பட்டியலிடு. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறு முத்தம், சிறு ஆலிங்கனம் செய்து கிளர்ச்சியூட்டு. இரவில், கணவரை செல்லப் பெயர்களால் கொஞ்சு. அம்மா சமையலும் கிரேட், மனைவி சமையலும் கிரேட் என, கணவரை சொல்ல வை.
2. கணவரை சந்திக்க, ஒரு மனநல மருத்துவரை, கணவரின் கிளினிக்குக்கு அனுப்பு. இருவரும் மனம் விட்டு பேசட்டும். ஒரு கட்டத்தில் மனநல மருத்துவர், கணவரை, 'கன்வின்ஸ்' செய்து, 'தெரபி'க்கு ஆயத்தப்படுத்துவார். நான்கைந்து முறை சந்தித்தப் பின், கணவர் நார்மலுக்கு வர வாய்ப்பிருக்கிறது.
இரண்டு உபாயங்களும் பலனளிக்கவில்லை என்றால், அதையடுத்த ஆறு மாதங்களில், முறைப்படி கணவரிடமிருந்து விவாகரத்து பெறு.
உன் மகன், அம்மா கோண்டு ஆகிவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்.
வாழ்க்கையில் எதுவும் மிதமாய் இருக்க வேண்டும். மீறினால் சிக்கலே.
நல்ல வேலைக்கு போ. சொந்தக் காலில் நின்று மகனை வளர்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.