
ஈ.வெ.ரா.,வின், 'விடுதலை' பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றினார், அண்ணாதுரை. அப்போது, ஒரு இதழில் மிக அருமையான தலையங்கம் எழுதியிருந்தார்.
அதை, ஈ.வெ.ரா., படிக்கும் போது, இரவு நேரமாக இருந்தது.
அப்போது, அண்ணாதுரை உறங்குவதற்காக மாடியில் உள்ள அறைக்குச் சென்று விட்டார்.
இவ்வளவு அருமையான தலையங்கத்தை எழுதிய அண்ணாதுரையை பாராட்ட விரும்பிய, ஈ.வெ.ரா., சிரமம் பார்க்காமல் மாடிப்படிகள் ஏறிச் சென்றார்; துாங்கிக் கொண்டிருந்த, அண்ணாதுரையை எழுப்பி பாராட்டினார்.
அந்தப் பாராட்டு, அண்ணாதுரைக்கு ஆனந்தத்தை கொடுத்தாலும், 'இரவில் தங்களுக்கு ஏன் இத்தனை சிரமம்? காலையில் பாராட்டி இருக்கலாமே...' என்றார்.
அதற்கு, 'இல்லை, இல்லை... நல்ல ஒரு விஷயத்தை தள்ளிப் போடவே கூடாது. பாராட்ட வேண்டும் என நினைத்தால், உடனே பாராட்டி விட வேண்டும். பிறகு பாராட்டிக் கொள்ளலாம் என, தள்ளிப் போட்டால், ஒரு வேளை அதை மறந்து விடலாம் அல்லது என்ன பெரிய விஷயம் என்று நினைத்து மனம் மாறிவிடலாம். அதனால் தான் உடனே பாராட்டி விட மாடிக்கு வந்தேன்...' என்றார், ஈ.வெ.ரா.,
*****
எப்போதுமே மெதுவாக தான் நடந்து செல்வார், அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.
ஒருமுறை, அவரது நடையை கிண்டல் செய்ய நினைத்தான், ஒருவன்.
'என்ன மிஸ்டர், லிங்கன். ஏன் இப்படி மெதுவாக நடக்கிறீர்கள்? பூமிக்கு வலிக்குமென்றா அல்லது கால் ஊனமா?' என, கிண்டலாக கேட்டான், அவன்.
அவனை பார்த்து, 'நண்பரே, நான் எப்போதுமே மெதுவாகத்தான் நடப்பேன். அதனால், யாருக்கும் எந்தப் பாதகமும் இல்லை. ஆனால், உம்மைப் போல் என்றுமே நான், பின்னோக்கி நடந்ததில்லை...' என, ஒரு போடு போட்டார், லிங்கன்.
கிண்டல் செய்தவன் ஓடிவிட்டான்.
******
கடந்த, 1970ல், கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, அவர் தலைமையில், சேலத்தில் ஒரு கவியரங்கம் நடந்தது.
'கணக்கு!' என்பது கவியரங்கத்தின் தலைப்பு. இதில், கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய, நான்கு தலைப்புகளில், நான்கு கவிஞர்கள் கவிதை பாடினர். அந்த நான்கு கவிஞர்களில், கவியரசு கண்ணதாசனும் ஒருவர்.
தலைமைக் கவிதைகளில், கருணாநிதி கணக்கின் பெருமைகளை பட்டியலிட்டுக் கவிதை படித்தார்.
அதில் ஒரு ருசிகரமான கணக்கு இது:
'இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லல், மனக்கணக்கு; இருபது, பதினெட்டைக் கூட்டிச் செல்லல், காதல் கணக்கு!'
இந்த கணக்கு கவிதையை கேட்டு, கவியரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.
*******
அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் வீட்டுக்கு வந்தார், நண்பர் ஒருவர்.
ட்வைனின் வீடு முழுவதும் புத்தகங்கள் இறைந்து கிடப்பதைப் பார்த்த நண்பர், அப்படியே அசந்து போனார்.
'ஓ மை காட்! இவ்வளவு புத்தகங்களா? ஒரு நுால் நிலையம் வைக்கலாம் போலிருக்கிறதே... ஏன் மிஸ்டர் ட்வைன், ஒரு பீரோவை ஏற்பாடு செய்து இவற்றையெல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கலாமே...' என்றார், நண்பர்.
'அடுக்கி வைக்கலாம் தான். ஆனால், எனக்கு புத்தகங்களை கடனாக கொடுக்கும் நண்பர்கள், பீரோவையும் கடனாக கொடுத்து உதவவில்லையே...' என்று சொல்லி சிரித்தார், மார்க் ட்வைன்.
- நடுத்தெரு நாராயணன்