
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 24 வயது பெண். பிளஸ் 2 வரை படித்துள்ளேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு, ஒரு அக்காவும், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உண்டு. என்னுடைய, 12வது வயதில், சென்னையில் உள்ள, வசதியான துாரத்து உறவினர் வீட்டுக்கு, வேலைக்கு அனுப்பி விட்டனர், என் பெற்றோர்.
அந்த உறவினருக்கு, இரு மகன்கள். நான் வேலைக்கு சேர்ந்தபோது, பெரியவனுக்கு 10 வயது. இளையவனுக்கு, 8 வயது. 12 வயதான என்னை, 'அக்கா, அக்கா...' என, அழைப்பர்.
உறவினரும், அவரது மனைவியும் என்னை, தன் மகள் போல பார்த்து கொள்வர். நான், அவர்கள் வீட்டுக்கு சென்றபோது, 8ம் வகுப்பு வரை தான் படித்திருந்தேன். என்னை, 'பிரைவேட்'டாக, பிளஸ் 2 வரை படிக்க வைத்தனர்.
'உனக்கு நாங்களே திருமணம் செய்து வைத்து விடுகிறோம். அதன் பின்னரும் நீ எங்களுடன் தான் இருக்க வேண்டும்...' என, அடிக்கடி கூறுவார், உறவினர். அவர் மகன்களுக்கு டிரஸ் வாங்கும் போதெல்லாம், எனக்கும் சேர்த்தே வாங்கி தருவர்.
இன்று, வீட்டு வேலைகள் மொத்தமும் என் பொறுப்பில் விட்டு விட்டனர். உறவினரும், அவரது மனைவியும் அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வதால், தோட்டக்காரர், சமையல்காரம்மா மற்றும் டிரைவர் அனைவரையும், நான் மேற்பார்வை செய்து, வேலை வாங்குவேன்.
உறவினர், அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு தேவையான உதவிகளை மட்டும், நான் செய்து தருவேன்.
இப்போது, பெரிய மகனுக்கு, 22 வயது. கல்லுாரியில் படித்து வருகிறான். இவனால் தான் இப்போது பிரச்னையே!
அவனது பெற்றோர் இல்லாத நாட்களில், என்னை, 'சில்மிஷம்' செய்து, சீண்டுவான். பெற்றோர் இருக்கும் போது, பவ்யமாக, 'அக்கா' என, அழைத்து பேசுவான். பலமுறை எச்சரித்தும், அடங்க மாட்டேங்கிறான். அவனது அப்பாவிடம் சொன்னால், தோலை உரித்து விடுவார்.
தம்பி என்பதால் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது. நிம்மதியாக துாங்க முடியவில்லை. வேலையை விட்டு நின்று விடலாமா என, தோன்றுகிறது. அவனை திருத்த நல்ல வழி கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
ஒரு பெண்ணை, 'அக்கா, அம்மா' என, அழைத்து விட்டு, அவளிடம் சில்மிஷம் செய்யலாமா? உன் சின்ன முதலாளிக்கு உறவுமுறைகளின் மகத்துவம் தெரியவில்லை.
கல்யாண ஆசை இல்லாமல், வெறுமனே சின்ன முதலாளியின் சந்தோஷத்துக்காக, அவனின் அத்துமீறலை நீ அனுமதித்தால், காரியம் முடிந்ததும், 500 ரூபாயை சுண்டிவிட்டு, உன்னை விலை மகளிர் ஆக்கி விடுவான்.
இப்படிதான் சில நிகழ்வுகள், நம்மை புதைசேற்றுக்குள் அமிழ்த்த துடிக்கும். பின் விளைவுகளை சீர்துாக்கி பார்த்து முடிவெடுப்பது மகா புத்திசாலித்தனம்.
அடுத்து நீ செய்ய வேண்டியவை...-
* சின்ன முதலாளியின் துர்நடத்தையை பெரிய முதலாளியிடம் உரிய முறையில் தெரிவித்து விடு. அவர் அவனின் தோலை உரித்தால் என்ன, வாலை வெட்டினால் என்ன?
* பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து, அவர்களையும் வர வை
* முதலாளியிடம் பெரிய தொகை வாங்கி, வேலையை விட்டு நின்று கொள்வதாகவும், 12 ஆண்டுகள் ஆதரவு கொடுத்ததற்கு நன்றியும் கூறி கிளம்பு. 'மகனை கண்டித்து வைக்கிறேன். நீ தொடர்ந்து இரு...' என, உன் முதலாளி நிர்ப்பந்தித்தால் சம்மதிக்காதே.
'இல்லை, முதலாளி. நான் வேலையை விட்டு நிற்பது தான், நம் இரு பக்கத்துக்கும் நல்லது.
'மகனின் படிப்பையும், பொழுதுபோக்கையும், நண்பர்களையும் கண்காணியுங்கள். அடிக்கடி வெளிநாட்டுக்கு போவதை தவிர்த்து, மகனுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். வெளியில் இந்த விஷயத்தை பேசாது கண்ணியம் காப்பேன்...' எனக்கூறி, முதலாளியிடம் ஆசி பெறு
* முதலாளி கொடுத்த பணத்தில், சொந்த ஊரில் கடை வைத்து, வியாபாரத்தில் இறங்கு. தபாலில், மேற்படிப்பு படி. வங்கி கணக்கு ஆரம்பி. பணத்தை சேமி. தம்பி, தங்கைகளை படிக்க வை
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், உன் குடும்பத்து அங்கத்தினர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைத்து விட்டு, திருமணம் செய்து கொள். நாளையும் நமதே, வெற்றியும் நமதே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

