
அன்பு சகோதரிக்கு —
நான், 42 வயது ஆண். படிப்பு: பி.காம்., மனைவியும், பள்ளியில் படிக்கும் ஒரு மகளும் உண்டு. மனைவி இல்லத்தரசி. எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை. அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அண்ணன், நான் மற்றும் என் பெற்றோர் என, அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்.
அப்பா நடத்தி வந்த ஜவுளி கடையை, இப்போது அண்ணன் நடத்தி வருகிறார்.
அரிசி மண்டி, காய்கறி மற்றும் பழங்கள் மொத்த விற்பனை நிலையம், பிரபல தனியார் பால் நிறுவனம் ஒன்றின், 'டீலர்' என, பல தொழில்கள் செய்து வந்தேன், நான். சரியான பணியாட்கள் இல்லாததாலும், அத்தனையிலும் நான் ஒருவனே கவனம் செலுத்த முடியாததாலும், நஷ்டம் ஏற்பட்டு விட்டது.
தொழிலை சரிவர நடத்த தெரியவில்லை என, அப்பாவும், அண்ணனும் குற்றம் சாட்டுகின்றனர்.
நஷ்டத்திலிருந்து மீண்டு வர, கொஞ்சம் பண உதவி கோரினேன். இருவருமே மறுத்து விட்டனர். மனைவியின் நகைகளை அடகு வைத்தும் சரியாகவில்லை. எனவே, நண்பன் ஒருவன் மூலம் சிங்கப்பூருக்கு செல்ல முயன்று வருகிறேன்.
இதற்கிடையில், நான் வியாபாரம் செய்தபோது, என் ஊருக்கு அருகில் சில்லரை வியாபாரம் செய்து வந்த ஒருவருக்கு, அரிசி, காய்கறி, பழங்கள் மற்றும் பால் பாக்கெட்டுகளை வினியோகித்து வந்தேன். அந்த கடையின் உரிமையாளர் எனக்கு மிகவும் பழக்கமானவர். சொந்த வீடு, நிலம் என, வசதியானவரும் கூட. அவரது மனைவியுடன் சேர்ந்து தான், கடையை நடத்தி வந்தார்.
நாங்கள் ஒரே இனத்தார் மற்றும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால், குடும்ப நண்பர்களாக பழகி வந்தோம். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவர்களுடைய பழக்கம் குறைந்து போனது.
தற்செயலாக, அந்த ஊருக்கு சென்ற நான், பழைய நண்பரை பார்க்க சென்றேன். விதவை கோலத்தில் அந்த பெண் மட்டும், கடையை கவனித்து கொண்டிருந்தார். கணவன், இறந்து விட்டதாகவும், வியாபாரத்தை விடக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மனிதாபிமான முறையில், அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தேன்.
கடை மற்றும் விவசாய நிலத்திலிருந்து, மாதம், ஒரு லட்ச ரூபாய் வருமானம் வருவதாக கூறினார். அவருக்கு இரண்டு மகன்கள். பள்ளி இறுதி வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். வயதான மாமனார் -- மாமியார் இருந்தாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை கூறி, என்னை வியாபாரத்தை கவனித்துக் கொள்ள முடியுமா எனக் கேட்டார்.
உறவினர்கள் பலரும், தங்கள் சொத்தை அபகரிக்க முயல்வதாக கூறி வருத்தப்பட்டார்.
குடும்பத்துடன் அவர்கள் ஊருக்கே வந்து விட வற்புறுத்துகிறார்.
அவரது யோசனையை ஏற்க நினைத்தாலும், அவரது உறவினர்கள், அவரையும், என்னையும் இணைத்து கதை கட்டி விடுவரே என, அச்சப்படுகிறேன். மேலும், என் குடும்பத்தினரும் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஊரில் கவுரவமான குடும்பம் எங்களுடையது. என் மனைவியும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்.
வெளிநாட்டுக்கு சென்றாலும், உடனடியாக குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு வருமானம் கிடைக்குமா என்பது சந்தேகம். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. தக்க ஆலோசனை தாருங்கள் சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரனுக்கு —
கூட்டுக்குடும்பத்தில் பத்து உறுப்பினர்கள் இருந்தால், அதில் இருவராவது புத்திக் கூர்மையற்றவர்களாக, பிறர் உழைப்பை உறிஞ்சுபவர்களாக இருப்பர். உன்னை அந்த வகையில் சேர்ப்பதற்கு வருத்தப்படாதே.
அரிசி மண்டி, காய்கறி, பழங்கள் மொத்த விற்பனையிலும், தனியார் பால் விநியோகத்திலும் முறைப்படி வியாபாரம் செய்திருந்தால், தினசரி லாபமே குறைந்தபட்சமாக, 10 ஆயிரம், அதிகபட்சம், 20 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும்.
சரியான பணியாட்கள் இல்லை; தனி ஒருவனே வியாபாரத்தை கவனித்துக் கொண்டேன். அதனால், நஷ்டம் என கூறுவது, கிரிக்கெட் ஆடத்தெரியாதவன் ஸ்டேடியம் கோணல் என்ற கதை தான்.
நீ, இளங்கலை வணிகவியல் படித்திருக்கிறாய்.
தினசரி கணக்கு வழக்குகளை எழுதி வந்திருக்க வேண்டும். பொருத்தமான நபர்களை, பொருத்தமான பணி இடங்களுக்கு நியமித்து, சிறப்பான ஆள் நிர்வாகம் செய்திருக்க வேண்டும்.
நீ, வியாபாரத்தில் பெரும் நஷ்டமடைய கீழ்க்கண்ட காரணங்களை யூகிக்கிறேன்.
* சரியான வரவு செலவு கணக்கு நிர்வகிக்கவில்லை
* வரவுக்கு மிஞ்சிய செலவு. மது, மாது, சூது, கெட்ட சகவாசம். மிதமிஞ்சிய ஆடம்பரம்
* வியாபாரத்தில் நேரடி கண்காணிப்பு இல்லாததால் திருட்டு
* அழுகும் பொருட்களை பாதுகாக்க, போதிய குளிர்பதன வசதி இல்லாதது
* வாடிக்கையாளர்களுக்கு தாறுமாறாய் கடன் கொடுத்து விட்டு, வசூலிக்க தெரியாமல் திணறுதல்
* வியாபார போட்டி. கடைக்கு நற்பெயர் இல்லாதிருத்தல்.
வியாபாரம் சரிவர செய்ய தெரியாத உன்னை நம்பி, அப்பாவும், அண்ணனும் எப்படி கடன் கொடுப்பர்? மனைவியின் நகைகளை விற்று தின்ற நீ, சிங்கப்பூருக்கு எதற்கு செல்கிறாய்? அதிலும், ஒரு டுபாக்கூர் ஏஜென்டை நம்பி, பணம் ஏமாந்து போவாய்.
விதவை தோழி, உன்னை தன் தொழிலுக்கு துணையாக அழைப்பதும், நீ, அவளின் தொழிலுக்கு துணையாக நிற்க துடியாய் துடிப்பதும், எதிர்பாலின கவர்ச்சியே.
நீ, விதவை தோழிக்கு துணையாக போனால், இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று-: அவளுக்கும், உனக்கும் திருமணம் பந்தம் மீறிய உறவு ஏற்படும். இரண்டு-: ஒரே ஆண்டில், அவளது தொழிலை ஊற்றி மூடி விடுவாய்.
நட்பு நட்பாக இருக்கட்டும். அவளிடமிருந்து விலகி நில்.
உன் தொழில்கள் எதனால் நஷ்டமடைந்தன என்பதை, ஆத்மார்த்தமாக சுயதணிக்கை செய். உன் தந்தை, அண்ணன் மற்றும் மனைவியிடமிருந்து அவர்களின் பார்வையில் நீ ஏன் நஷ்டமடைந்தாய் என்பதற்கான, அபிப்ராயங்களை கேட்டுப் பெறு.
மூன்று மாதங்கள் முழுமையான சுய அலசலுக்கு பின், குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வா.
மிகச்சிறிய முதலீட்டில், ஒரு பெட்டிக்கடை ஆரம்பி. வரவுக்குள் செலவு செய்து சேமி.
'எனக்கும் வியாபாரத்துக்கும் ஏழாம் பொருத்தம்...'- என, நீ இறுதியாக கருதினால், கெஞ்சி கேட்டு உன் அண்ணனின் ஜவுளிக்கடையில், ஒரு பணியாளாக சேர்.
வாழ்த்துகள்!
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.