/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: நம்பிக்கையோடு நிராகரியுங்கள்!
/
கவிதைச்சோலை: நம்பிக்கையோடு நிராகரியுங்கள்!
PUBLISHED ON : ஜூன் 01, 2025

உங்கள் சிறகுகளை வெட்டுவதற்கு
உங்களையே குனிய சொல்பவரை
வெகுண்டெழுந்து விரட்டுங்கள்!
உங்கள் வளங்களை சுரண்டுவதற்கு
உங்களையே உழைக்க கோருவோரை
எதிர்த்து கேள்வி எழுப்புங்கள்!
உங்கள் கனவுகளை சிதைப்பதற்கு
உங்களையே கருவியாக்க முயல்பவரை
துணிவுடன் தள்ளி விடுங்கள்!
உங்கள் உயரத்தை குறைப்பதற்கு
உங்களை தாழ்த்தி பேசுவோரை
நிமிர்ந்து பார்த்து நிராகரியுங்கள்!
உங்கள் நேரத்தை திருடுவதற்கு
உங்களை குழப்பத்தில் ஆழ்த்துபவரை
ஒதுக்கிவிட்டு நகர்ந்திடுங்கள்!
உங்கள் உணர்வுகளை மிதிப்பதற்கு
உங்களை புறக்கணித்து செல்வோரை
கவலையின்றி கடந்திடுங்கள்!
உங்கள் எல்லைகளை வகுப்பதற்கு
உங்களிடமே ஆலோசிப்பவரை
உறுதியாக மறுத்து விலக்குங்கள்!
உங்கள் வாழ்வை கட்டமைப்பதற்கு
உங்களை சம்மதிக்க வற்புறுத்துவோரை
நம்பிக்கையோடு நிராகரியுங்கள்!
- டி.எல்.குமார், விழுப்புரம்.