sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 20, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 31 வயது பெண். மருத்துவராக பணிபுரிகிறேன். என் கணவர் வயது: 34.

என் பெற்றோருக்கு நான், ஒரே மகள். சிறுவயது முதலே டாக்டர் ஆக வேண்டும் என்பது, என் லட்சியம். என் பெற்றோரும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், என் துரதிருஷ்டம், என் 20வது வயதில், என் பெற்றோர் விபத்து ஒன்றில் இறந்து விட்டனர்.

உறவினர் ஒருவரது ஆதரவில், எம்.பி.பி.எஸ்., படித்தேன். என் படிப்பு முடிந்ததும், திருமண தகவல் மையம் ஒன்றின் வாயிலாக, மாப்பிள்ளை தேர்ந்தெடுத்து, எனக்கு திருமணம் செய்து வைத்தார், உறவினர்.

திருமணத்துக்கு என் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். ஆனால், அவரது வீட்டிலிருந்து, யாரும் வரவில்லை. அதுபற்றி கேட்டதற்கு, ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பினார். மாப்பிள்ளைக்கு, நல்ல வேலையும், 'பர்சனாலிட்டி'யாகவும் இருந்ததால், உறவினர் சமாதானமானார்.

திருமணத்துக்கு பின் ஒரு நாள் கூட, என்னை வெளியே அழைத்து சென்றதில்லை. இரண்டு முறை மட்டும் கோவிலுக்கு சென்றிருந்தோம்.

அவருக்கு நண்பர்கள் என, யாரும் இல்லை. அதுபற்றி கேட்டால், 'நான் யாரிடமும் பழக மாட்டேன்...' என்றார்.

திருமணமான முதல் மூன்று ஆண்டுகள், சந்தோஷமாக இருந்தேன். அதன்பின் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. மது, மாது மற்றும் சூதாட்டம் என அத்தனை, 'கல்யாண குணங்களும்' அமைந்திருந்தது. நல்ல வேளை குழந்தை இல்லை.

பெரிய மருத்துவமனை ஒன்றில், வேலையில் சேர்ந்திருந்ததால், பணக்கஷ்டம் ஏற்படவில்லை. ஒருமுறை, அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கு போன் செய்த போது, அவருக்கு, அவர் வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்த்துள்ளதாக தகவல் கிடைத்தது.

அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, முதலில் இல்லை என, சாதித்தார். 'அம்மாவும், தங்கையும் என்னை கேட்காமல் முடிவு செய்து விட்டனர்...' என்றார்.

எப்படியோ, அப்பெண்ணின் முகவரி வாங்கி, நேரடியாக அவள் வீட்டுக்கு சென்று, 'நான் தான் அவரது முதல் மனைவி...' என, சில ஆதாரங்களுடன் கூறினேன்.

பெண் வீட்டில் உஷாராகி, திருமணத்தை நிறுத்தி விட்டனர். அதிலிருந்து, என் மீது வன்முறையை பிரயோகிக்க ஆரம்பித்தார். அவரிடமிருந்து பிரிந்து, ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், ஒருநாள் ஹாஸ்டலுக்கு வந்து, 'நடந்தது நடந்து விட்டது. இனி தவறு செய்ய மாட்டேன். வீட்டுக்கு வா, போகலாம்...' என, அழைத்தார்.

அவரை நம்பி போக விரும்பவில்லை.

தோழிகளிடம் பேசியதில், 'முழுவதுமாக திருந்தி வந்தால் போ. இல்லாவிட்டால், வேண்டாம்...' என்கின்றனர். உறவினரின் ஆதரவும் இப்போது இல்லை. நான் என்ன முடிவு எடுப்பது என, தெரியவில்லை.

நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.

இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

உனக்கு திருமணம் செய்து வைத்த உறவினர், வரன் பார்க்கும் விஷயத்தில் முழு கவனத்தையும் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. தன் மகளுக்கு வரன் பார்ப்பது என்றால், இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்திருப்பாரா?

உன் உறவினர், மாப்பிள்ளையின் எந்த உறவு முறையுடன் திருமணத்தை பேசி முடிவெடுத்தார்?

கணவரின் கல்வித்தகுதி என்ன? என்ன வேலை செய்கிறார்? அவரது நிரந்தர முகவரி என்ன? அவரது பெற்றோர் பற்றிய முழு விபரங்கள் என்ன? அவருடன் உடன்பிறந்தோர் பற்றிய விபரம், அவரது உண்மையான வயது போன்ற, முழு விபரங்களையும் சேகரித்து இருந்திருக்க வேண்டும், உன் உறவினர்.

இன்னொரு விஷயம் தெரியுமா உனக்கு? திருமணமான ஆண்களை புறத்தோற்றத்திலேயே கண்டுபிடித்து விடலாம். ஒரு விதமான தாம்பத்ய திருப்தி முகத்தில் தவழும். பலருக்கு மிதமான தொப்பை கூட இருக்கும்.

உன் கணவர் உனக்கு முன்னமே, ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்திருக்கலாம் என்றும் யூகிக்கிறேன். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது, உங்கள் தரப்புக்கு தெரியாமல் இருக்கவே, உங்களின் திருமணத்துக்கு உறவு, நட்பு யாரையும் அவர் அழைக்கவில்லை.

முதல், மூன்று ஆண்டுகள், தன் தொடர்பான ரகசியங்களை கசியவிடாமல் ஒளித்து மறைத்துள்ளார், கணவர். அவரின் மது, மாது மற்றும் சூது பழக்கங்களும் அவருக்கு இளம் பிராயத்திலிருந்தே இருந்து வந்திருக்கும். மருத்துவர் பணியில் இருந்த உனக்கு, அவரை ஆராய நேரமில்லை.

எல்லா சேதாரங்களும் நிகழ்ந்த பின், கணவரின் சுயரூபம் வெளிபட்டிருக்கிறது. கணவரின் மூன்றாவது திருமணத்தை நிறுத்தி விட்டாய்.

ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்பவன், ஒரு மனநோயாளி. 'கடலளவு நீர் இருந்தாலும் கையளவு நீர் தான் பிராப்தம்' என, சொலவடை உண்டு.

நீதித்துறையில், 'பழக்கவழக்கக் குற்றவாளி' என்ற வார்த்தை உண்டு. இவ்வகை குற்றவாளிகள், குற்றங்களை பொழுதுபோக்காய், விருப்பமாய் தொடர்ந்து செய்வர். இவர்களிடம் குற்ற உணர்ச்சி சிறிதும் இருக்காது.

இந்த வகை தான், உன் கணவர். நல்லவேளை உனக்கு குழந்தைகள் இல்லை. கணவரின் மீது ஈவு இரக்கம் காட்டாதே.

தோழிகளுடன் ஆலோசனை செய்வது அனாவசியம். நேரடியாக காரியத்தில் இறங்கு. குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, மனுதாக்கல் செய். உன், மொபைல் போன் எண்ணை மாற்று.

மீண்டும், கணவர் உன்னை சந்திக்க வந்தால், 'இனி என்னை பார்க்க வராதீர்கள். விவாகரத்து கோரி இருக்கிறேன். விவாகரத்து கிடைத்த பின், உங்கள் மனம் போல செயல்படுங்கள். கடந்த, ஐந்து ஆண்டுகள், எனக்கு ஒரு கெட்ட கனவு.

'என்னை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தீர்கள் என்றால், உங்கள் மீது காவல்நிலையத்தில் புகார் செய்வேன். ஒன்ஸ் பார் ஆல் குட் பை மிஸ்டர் டெவில்...' எனக்கூறி, அவரின் உறவுக்கு, முற்றுப்புள்ளி வை.

விவாகரத்துக்கு பின், ஆற அமர யோசித்து, மறுமணம் செய்து கொள்ளலாம்.

— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us