
அன்பு சகோதரிக்கு —
நான், 35 வயது ஆண். படிப்பு: எம்.ஏ., சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். படிப்பு முடிந்ததுமே, மளிகை கடை வைத்து, நல்ல நிலைமைக்கு வந்தேன்.
என் பெற்றோர், எனக்கு பெண் பார்க்கும் போது, வசதி குறைவான இடமாக பார்க்குமாறு, கூறி விட்டேன். அதன்படி அமைந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன்.
மனைவியையும் நன்றாக கவனித்து கொண்டேன். என் மீது, அதிக பாசமாக இருப்பாள். அதுவே, பின்னாளில் சந்தேக வெறியாக மாறியது. எங்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். கடைக்கு வரும் பெண்ணிடமோ, சிறுமிகளிடமோ பேசினால் கூட, சந்தேகப்பட்டு, தகாத வார்த்தையில் சாடுகிறாள். அப்பெண்களை அவதுாறாக பேசி, அவமானப்படுத்துகிறாள்.
எனக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தால், ஒட்டு கேட்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து கொள்கிறாள்.
நானும், அவள் திருந்துவாள் என, விட்டு விட்டேன். ஆனால், நாளுக்கு நாள் சந்தேகம் அதிகமாகி வருகிறது. ஆண் நண்பர்களிடம் பேசினால் கூட, 'எதற்கு தேவையில்லாமல் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?' என, கத்துகிறாள்.
இத்தனைக்கும் அவள், பி.காம்., படித்திருக்கிறாள். என் மீதான கோபத்தை, குழந்தைகள் மீது காட்டுகிறாள். வீட்டில் நிம்மதியே இல்லை. என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் யாரும் வீட்டுக்கு வரக்கூடாது என்கிறாள்.
இவளை எப்படி திருத்துவது என, தெரியவில்லை. என் பிரச்னை தீர வழி சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு, உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரனுக்கு —
எந்த ஒரு விஷயத்தையும் எதிர்கேள்விகள் கேட்காது அப்படியே ஏற்றுக் கொள்வது விவேகமாகாது. ஏன், எதற்கு, எப்படி என, கேள்விகள் கேட்டு, உசிதமான பதில்கள் கிடைத்தால் அமைதியுறுவது நல்லது.
சந்தேகம் இயல்பாய் இருக்கும் வரை பிரச்னை இல்லை. அதீத சந்தேகம், ஆமை புகுந்த வீடு தான். தித்திப்பான ஒன்றை சந்தேகித்து, ஆழமாக ஆராய்ந்தால் கசக்கும். கசப்பான ஒன்றை சந்தேகித்து, ஆழமாக ஆராய்ந்தால் இனிக்கும்.
மனித உறவுகளை, 'போஸ்ட்மார்ட்டம்' பண்ணி பார்ப்பது, ஆபத்தானது. வாழ்க்கை நரகமாகி விடும். சந்தேக ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தால், மன கூடாரத்தை முழுவதும் ஆக்கிரமித்து, நல்லுணர்வுகளை தள்ளிவிடும்.
மனைவியின் சந்தேகக் குணத்திற்கான காரணங்கள், கீழ்க்கண்ட பட்டியலில் காணக் கிடைக்கும்.
* கல்வியறிவின்மை (உன் மனைவி ஏட்டுக்கல்வி படித்திருக்கிறாள். வாழ்க்கைக்கல்வி படிக்கவில்லை.)
* தாழ்வு மனப்பான்மை - பணத்தால், அறிவால், அழகால் தான் தாழ்ந்தவள் என்ற மனப்போக்கு
* விபரீத கற்பனைகள் - சாதாரண விஷயத்தையும், விபரீதமாக கற்பனை செய்வது
* பொருளாதார சுதந்திரமின்மை
* தாம்பத்யத்தில் ஈடுபாடு இன்மை - தனக்கு ஈடுபாடு இல்லாததால், கணவன் வேறு இடம் தேடி போய் விடுவானோ என்ற பயம்
* உறவினர் மற்றும் நண்பர், புறம் பேசுவதை அப்படியே நம்பி, குடும்பத்தில் சண்டை இழுப்பது
* சுயசுத்தம் பேணாமை - தினசரி குளிக்காமல், தலை சீவாமல் அழுக்கு நைட்டியுடன் அலைவது
* கணவர் மற்றும் மகன்களின் சிறு பலவீனங்கள் வெளிப்பாடு
* தினசரி வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களில் சோம்பல்
* ஆண் - பெண் உறவுகள் பற்றிய, தவறான செய்திகளில் மூழ்குதல்.
அடுத்து நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மனைவி சந்தேகப்படுவதில் மில்லி மைக்ரான் அளவு உண்மை இருந்தாலும், உன்னை திருத்திக் கொள்.
மனைவி நல்ல மூடில் இருக்கும்போது, அவளுடன் மனம் விட்டு பேசு. அவளது மனக்குறைகளை கேள். நியாயமான மனக்குறைகளை தீர்த்துவை. நியாயமற்ற மனக்குறைகளை பூப்போல சொல்லி அகற்று.
மனைவியை தாம்பத்யத்தில், முழுமையாக மகிழ்ச்சிப்படுத்து. தாம்பத்யத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லாவிட்டால் ஈடுபாட்டை உருவாக்கு.
மனைவி பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து, ஏ.டி.எம்., கார்டை கொடு. இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து ஓட்டச் சொல்.
புறம் பேசுபவர்களை அவளது வட்டத்திலிருந்து விலக்கு.
உன் மொபைல் போனில், கடவுச் சொல் போட்டு பூட்டி வைக்காதே.
கடைக்கு வரும் பெண்களிடம் பேசுவதை ரேஷன் செய்.
மனைவியை ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்து போய், தகுந்த ஆலோசனை கிடைக்கச் செய்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.