PUBLISHED ON : ஜூலை 27, 2025

ஜூலை 27 - அப்துல் கலாம் நினைவு தினம்
ஏவுகணை நாயகனே மாணவ இதயங்களில்
லட்சியங்களை விதைத்தவர் நீங்கள்!
நீங்கள் சொன்ன
கனவு காணுங்கள் என்ற
ஒற்றை வாக்கியத்தால்
உலகம் உங்களை நிமிர்ந்து பார்த்தது!
துாக்கத்தில் வருவதல்ல கனவு
துாங்க விடாமல் செய்வதே கனவு
என்றீர்கள்... அது -
சும்மா கிடந்த இளைஞர்களை
சும்மா இருக்க விடவில்லை!
உங்களின் வார்த்தையல்ல
வாழ்க்கை தான்
பலரையும் வியக்க வைத்தது
உங்கள் நேர்மையும், எளிமையும்
எங்களுக்கு
உந்துவிசையாக இருந்தது!
உங்களின் பார்வை
ஆகாயத்தை விட அகலமானது
அதனால் தான்
உலக அரங்கில் இந்தியாவை
வல்லரசாக பார்த்தீர்கள்
வல்லரசாக்க பாடுபட்டீர்கள்
நீங்கள்
வீட்டுக்காக உழைத்ததில்லை
நாட்டுக்காக துடித்தீர்கள்!
பிறப்பு - ஒரு சம்பவமாக இருந்தாலும்
இறப்பு - ஒரு
சரித்திரமாக இருக்கணும் என்று
சொன்னது போலவே
சரித்திரம் படைத்தீர்கள்!
கடமையை செய்வதில்
காலத்தை வென்றவர் நீங்கள்
அரசியலும், ஜாதி மதமும்
உங்கள் பயணத்தை
கட்டுப்படுத்த முடியவில்லை
'மக்கள் ஜனாதிபதி'யாக உயர்ந்தீர்கள்!
நீங்கள் மரம் நடுவதை பார்த்து
காடுகளெல்லாம்
கையசைத்து மகிழ்ந்தன
உங்கள் மரண செய்தி கேட்டு
செயற்கைகோள்கள் செயலிழந்தன!
தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்த போதே
மண்ணை விட்டு விட்டீர்கள்
விண்ணை தொட்டு விட்டீர்கள்!
விஞ்ஞானிகள் மத்தியில்
விண்ஞானியாக வாழ்ந்த நீங்கள்
மண்ணில் அல்ல...
மனித இதயங்களில்
புதைக்கப்பட்டு இருக்கிறீர்கள்!
— என்.ஆசைதம்பி, சென்னை. தொடர்புக்கு: 98411 66883