
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 21 வயது பெண். பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். என் அப்பா, பள்ளி இறுதி வரை படித்தவர். வாழை மண்டி வைத்துள்ளார். என் அம்மா, 8ம் வகுப்பு வரை படித்தவர். கிராமத்தை சேர்ந்தவர். எனக்கு ஒரு தம்பி, 10ம் வகுப்பு படிக்கிறான்.
என் அம்மாவுக்கு, மற்றவர்களை போல் புடவை கட்டத் தெரியாது. கிராமத்து பாணியில் கட்டுவார். தலையில் நிறைய எண்ணெய் வைத்து வாரி, கொண்டை போடுவார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருப்பார். எப்போதும், ஏதாவது வீட்டு வேலை செய்து கொண்டே இருப்பார்.
அவரிடம் பலமுறை, 'தலையில் இவ்வளவு எண்ணெய் பூசாதீங்க, நெற்றியில் சின்னதாக பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். புடவை கட்ட நான் சொல்லித் தருகிறேன்...' எனக் கூறினேன்.
'எனக்கு இப்படி இருக்கத்தான் பிடித்து உள்ளது...' எனக் கூறி விடுவார்.
எங்கள் மீது பாசமாக இருப்பார். நாங்கள் எந்த டிபன் கேட்டாலும், சுவையாக செய்து தருவார். என் அப்பாவும் அம்மாவின் போக்குக்கே விட்டு விட்டார்.
ஆனால், என் தோழிகள் வீட்டுக்கு சென்றால், அவர்களது அம்மாக்கள் நாகரிகமாக, 'டீசன்ட்' ஆக பேசுவர். என்னிடமும், நிறைய விஷயங்கள் பற்றி பேசுவர்.
அம்மாவின் நாட்டுப்புற உடையும், பேச்சும் இருப்பதால், தோழிகளை, என் வீட்டுக்கு வர சொல்லவே மாட்டேன். ஒருமுறை, எதேச்சையாக என் வீட்டுக்கு தோழி வந்துவிட, அவளை வாசலில் நிற்க வைத்தே பேசிக் கொண்டிருந்தேன்.
'பாப்பாவுக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வரட்டுமா?' என்றபடி அம்மா வந்துவிட, எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், 'என் அம்மா வெளியே போயிருக்காங்க, இவங்க எங்க வீட்டு வேலைக்காரி...' என, மெதுவாக தோழியிடம் கூறி விட்டேன்.
அது என் அம்மா காதில் விழுந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை.
அதிலிருந்து, யாரிடமும் பேசாமல், வீட்டு வேலைகளை முடித்தவுடன், சுருண்டு படுத்து கொள்கிறார்.
அப்பாவுக்கு எதுவும் தெரியாது. அம்மாவின் நிலையை அறிந்து கவலைப்படுகிறார். டாக்டரிடம் போகலாம் என, அப்பா அழைத்தால், போக மறுத்து விடுகிறார், அம்மா.
அம்மா, வர வர சரியாக சாப்பிடுவதும் இல்லை. உடல் மெலிந்து போய் விட்டது.
என் தவறு எனக்கு புரிகிறது. ஆனால், அம்மாவை எப்படி சமாதானப்படுத்துவது என, தெரியவில்லை. நீங்கள் தான் எனக்கு வழி கூற வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
ஒரு தாயும், மகளும், 50 + 50 சதவீதம், டி.என்.ஏ.,களை பகிர்ந்து கொள்கின்றனர். தாயின் மூளை அமைப்பும், மகளின் மூளை அமைப்பும் ஒரே மாதிரியானவை. பெண் குழந்தைகள் எக்ஸ், எக்ஸ் குரோமோசோம்களுடன் பிறக்கின்றன.
இந்த விஞ்ஞான உண்மைகள் புரியாமல் சில பெற்றோர், 'எனக்கு போய் இவ்வளவு அவலட்சணமா குழந்தை பிறந்திருக்கே?' என, புலம்புவர்.
'அழகான எனக்கு இவ்வளவு மோசமான பெர்சனாலிட்டி உள்ள பெற்றோரா?' என ஆவலாதிப்பர், சில மகள்கள்.
எனக்கு தெரிந்த பல பெண்கள், தங்களின் பதின்ம வயது மகளை, 'தங்கை' என அறிமுகப்படுத்துகின்றனர். சில மகன்கள், தங்கள் கிராமத்து தந்தையை, 'பண்ணையாள்' என சக மாணவர்களிடம் அறிமுகப்படுத்துவர்.
இது ஒரு மிருகத்தனம், நன்றிகெட்டத்தனம். 'ஜென் இஸட்' தலைமுறை பெண்கள், உறவுமுறையில் பாசாங்குதனமும், கபட நாடகமும் ஆடுகின்றனர்.
பெற்றோரின் பராமரிப்பு வேண்டும். பெற்றோரின் சொத்து வேண்டும். ஆனால், பெற்றோர், கிராமத்து அடையாளத்துடன் இருத்தல் கூடாது. என்ன நியாயம் இது?
பின் கொசுவம் அல்லது கண்டாங்கி பாரம்பரிய முறைகளில் புடவை கட்டுவர், கிராமத்து பெண்கள். இது, தமிழர் கலாசாரங்களில் முக்கியமான கூறு. இது உனக்கு கேவலமாக இருக்கிறது.
தலைகேசத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால், தலைமுடிக்கு போஷாக்கும், பாதுகாப்பும், உச்சந்தலை ஆரோக்கியமும் கிடைக்கும். பொடுகு நீங்கும், புரதசத்தை நல்கும். நீங்கள் தான் தலைக்கு எண்ணெய் தடவாமல், பரட்டையாக திரிவீர்கள். தலைகேசத்தை பளபளப்பாய் வைத்துக் கொள்ளும் அம்மா, உனக்கு இளப்பமாக தெரிகிறாள்.
கிராமத்து பொட்டு, கருப்பு, சிவப்பு, பச்சை போன்ற வர்ணங்களில் இருக்கும். கிராமத்து பொட்டுகளில் பூக்கள், நட்சத்திரங்கள் போன்ற சின்னங்களும் காணப்படும். கிராமத்து பொட்டுகளில் குங்குமப் பொட்டு, கல் பொட்டு, கோபி பொட்டுகள் என, பலவகைகள் உள்ளன. கிராமத்து பொட்டு வைத்து உன் அம்மா, அம்மன் போல வலம் வருவது, உனக்கு எரிச்சல் மூட்டுகிறது !
இனி நான் சொல்வதை செய்.
தமிழ் கலாசார அடையாளங்களை இழிவாய் பார்ப்பதை நிறுத்திக் கொள். மற்றவர்களுக்காக வேஷம் போடாதே. உன் தனித்துவமான அடையாளத்தை போற்றி பாதுகாத்துக் கொள்.
அம்மாவின் கால்களில் விழுந்து கதறியழுது, மன்னிப்பு கேள்.
'அம்மா நீ எனக்கு அங்கம்மா, அன்னம்மா, சர்க்கரையம்மாள், இசக்கி அம்மாள், நீலி, காத்தாயி. உன்னை வேலைக்காரி எனச் சொன்ன, என் வாய்க்கு சூடு போடு. என்னுடைய, 40வது வயதில், முழுக்க உன் சாயலுக்கு வந்து விடுவேன்.
'போலி கவுரவத்தை தலைமுழுகி விட்டு, உன் காலடியில் சரணாகதி அடைந்துள்ளேன். மீண்டும் வீறு கொண்டெழுந்து, கிராமியத் தமிழில் பேசு. என் காதுகளில் தேன் பாயட்டும்...' எனக் கூறி, உன் அம்மாவை சமாதானப்படுத்து.
உன் அம்மா எழுந்து அமர்ந்து விடுவாள்.
—என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

