PUBLISHED ON : ஆக 03, 2025

ஆக., 03 நண்பர்கள் தினம்
சிரிக்கும் நேரத்தில் சேர்ந்து சிரிப்பதாக மட்டும்
இருப்பது நல்ல நட்பல்ல...
அழுகின்ற நேரத்தில்
ஆறுதல் கூறி தேற்றிட
ஓடி வருவதே உன்னத நட்பு!
பெற்றுக் கொள்கிற
இடத்திலேயே நிற்பது மட்டும்
பெருமையான நட்பல்ல...
இக்கட்டான நேரத்தில்
கொடுத்து உதவி தோள் தர
தேடி வருவதே துாய நட்பு!
ஆபத்து நேரத்தில்
காப்பாற்ற வருவது மட்டும்
சிறப்பான நட்பல்ல...
துன்பம் நேர்ந்திடாமல்
முன்னரே தடுத்திட
நாடுவதே மேன்மையான நட்பு!
பகைத்தலுக்கு அஞ்சி புகழ்ந்து பேசுதல் என்பது
புனிதமான நட்பல்ல...
விலக வேண்டி வந்தாலும்
பாதை தவறுகையில்
இடித்துரைத்தலே இனிய நட்பு!
வாழ்வதற்கு ஆசைப்பட்டு
காட்டிக் கொடுத்தல் என்பது
வளமான நட்பல்ல...
உயிரை விட நேர்ந்தாலும்
உறுதியான மனதோடு
ரகசியம் காப்பதே உயர்ந்த நட்பு!
கண்ணீரைத் துடைக்க விரலோடு வருதல் என்பது
பெருமிதமான நட்பல்ல...
வேதனைகள் சூழ்ந்தாலும்
நம்பிக்கையோடு புன்னகைக்க
வழிகாட்டுவதே அற்புத நட்பு!
எதிர்பார்ப்புகள் நிறைவேற
துணை நிற்றல் என்பது
மதிப்பான நட்பல்ல...
உலகே கிடைத்தாலும்
இதயத்தில் அன்பு நிறைத்து
விட்டுக் கொடுத்தலே மேலான நட்பு!
— இந்திராணி ஆறுமுகம், புவனகிரி, கடலுார்.

