
வாழ்க்கை பற்றி மெஞ்ஞானிகளிலிருந்து, விஞ்ஞானிகள் வரை பலரும், பல விதமான விளக்கங்களை, பல காலங்களாக கொடுத்து வருகின்றனர்.
நாமும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதுடன், ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது, அவன் அதிர்ஷ்டக்காரன், இல்லை கெட்டிக்காரன், புத்திசாலி, பிழைக்கத் தெரிந்தவன், முட்டாள் மற்றும் ஏமாளி என்ற பலவாறான கருத்துக்களை பதிவு செய்து கொண்டு தானே இருக்கிறோம்! அதில் தவறில்லை என்பது மட்டும் காரணமல்ல; வேறு வழியுமில்லை என்பது தான் நிஜம்.
விரிவுரையாளராகவோ, பேராசிரியராகவோ அல்லது எளிமையாக சொன்னால் வாத்தியாராகவோ 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவத்தில், நான் கண்ட பல ஆச்சரியமான சம்பவங்களில், இரண்டை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பணி புரிந்தது, ஆராய்ச்சிக்கூடத்தின் ஓர் பகுதியான பட்டபடிப்புக்கு பயிற்சி தரும் அங்கத்தில்.
அதில், பலவிதமான மாணவ - மாணவியரை பார்க்கலாம். எல்லாரும் கெட்டிக்காரர்களாக இருக்க மாட்டார்கள்; அது சாத்தியமும் இல்லை. நான் அதில் உள்ள புத்திசாலிகளைப் பற்றி கூறப் போவதில்லை, ஒரே ஒருவனை மட்டும் தவிர. அதை கடைசியில் சொல்கிறேன்.
அவன், பிரசாத், சுருக்கமாகச் சொல்லப் போனால், மாணவ பருவத்தில் ஓர் உதவாக்கரை. சற்று பிற்பட்ட குடும்பத்தில் இருந்து, பிளஸ்- 2வில், நல்ல மார்க் கிடைத்த சலுகையால் இடம் பெற்றவன். வகுப்புக்கு வரமாட்டான். வந்தாலும், எது கேட்டாலும் பதில் வராது. கல்லுளிமங்கன் போல், வாய் திறக்காமல் வெற்றுப்பார்வை பார்ப்பான்.
என் பாடத்தில் அவன் தொடர்ந்து, 'பெயில்' ஆனான். ஒருநாள், அவனை என் அறைக்கு வரச்சொல்லி பேச முயன்றேன். வரவில்லை. இரண்டு முறை நல்ல முறையிலும், மூன்றாவது முறை கோபமாகவும் சொன்ன பின் வந்து பார்த்தான்.
உட்காரச் சொன்னேன். உட்கார்ந்தான்.
''நீ தொடர்ந்து என் பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருக்கிறாய். இது, உனக்கு பிரச்னை தரும். வேறு எதாவது பாடங்களிலும் நீ மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டி இருக்கிறதா?'' எனக் கேட்டேன்.
ஒரு நிமிட மவுனத்திற்கு பின், ''இருக்கிறது,'' என்றான்.
''இது உனக்கு வேண்டாத சுமை இல்லையா?'' என்றேன்.
பதில் சொல்லாமல் தலையசைத்தான்.
''உனக்கு ஏன் படிப்பில் நாட்டம் இல்லை? அதோடு, குடி பழக்கமும் உனக்கு இருப்பதாக கேள்விபட்டேன். உண்மையா?'' என்றதும், ஒரு நிமிஷம் என் முகத்தை வெறுப்போடு பார்த்து விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டான். பதில் வரவில்லை.
நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.
முகத்தை பார்க்காமலே, ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.
''அது உனக்கு இப்போது தேவையா?'' என்றேன்.
பதில் வரவில்லை. நானும் விடவில்லை. மீண்டும் கேட்டேன்.
''குடித்தால் என்ன தப்பு? எங்க வீட்டில், என் அப்பா குடிப்பார், மாமன் குடிப்பார். நான் குடிப்பதில் என்ன தப்பு?'' என்றான்.
நான் சற்று திடுக்கிட்டேன்.
''உன் அப்பா என்ன வேலை செய்கிறார்?'' எனக் கேட்டேன்.
''கராஜ். லாரி ரிப்பர் பராமரிப்பு வேலை. அவருக்கு படிப்பெல்லாம் கிடையாது.''
அதிர்ச்சியாகவும், மிகவும் வருத்தமாகவும் இருந்தது.
''குடும்ப சூழ்நிலை தாழ்ந்தது தான். இன்ஜினியரிங் படிக்க வந்தது, நீ பள்ளி இறுதியில் நல்ல மார்க் வாங்கியதால் தானே?'' என்றேன்.
வெறுமே தலை அசைத்தான்.
''படித்து முன்னேறுவதில் உனக்கு ஏன் ஆர்வமில்லை?'' என்றேன்.
''எனக்கு இந்த, 'கோர்ஸ்' பிடிக்கவில்லை. நான், 'கம்ப்யூட்டர் கோர்ஸ்' படிக்க விரும்பினேன். ஆனால், என் மார்க்குக்கு இதைத்தான் கொடுத்தனர்,'' என்றான்.
இந்தியாவில் படிப்பும், பட்டங்களும் பெரும்பாலும் பகட்டுக்காகவே. வேறு எந்த நாட்டிலாவது மாணவ செல்வங்கள், தான் படிக்க விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்பதற்காக, தற்கொலை செய்து கொள்கின்றனரா? எனக்கு தெரிந்து கிடையாது.
இவன் இப்படி தன் எதிர்ப்பையும், கோபத்தையும் பழி வாங்குவது போல் காட்டுகிறானோ என்ற சந்தேகம், எனக்குள் எழுந்தது.
''அவர்கள் குடிக்கின்றனர் என்றால், அவர்கள் உழைத்து சம்பாதித்த காசில் குடிக்கின்றனர். நீ, அவர்களிடம் இருந்து பணம் வாங்கி, அதில் குடிக்கிறாயே... அது கேவலமில்லை? சரி, உன் இஷ்டம்.
''நான் உனக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன். என் பாடத்தை எப்படியாவது தாண்டி விடு. அவ்வளவு தான் சொல்வேன். உன் கையெழுத்தும் படு மோசம். பிரம்ம லிபி மாதிரி இருக்கிறது,'' என்றேன்.
திடீரென்று சகஜமாகி, ''பிரம்ம லிபி என்றால் என்ன?'' எனக் கேட்டான்.
''நம்மை படைத்து பூலோகத்துக்கு அனுப்பி வச்ச, பிரம்மாவின் கையெழுத்து இப்படித்தான் எவருக்கும் புரியாமல் இருக்குமாம்,'' என்றேன்.
இதைக் கேட்டதும் அவன் முகத்தில் சிறிதாக ஓர் புன்னகை தோன்றியது.
''நீங்க வேடிக்கையா பேசறீங்க, சார். மத்த சார் மாதிரி இல்லை,'' என்றான்.
எனக்கு நற்சான்றிதழா? நானும் புன்னகை செய்தேன்.
''அந்த பிரம்மாவை, எனக்கு நல்ல முறையில் எழுத வைக்கிறேன் பாருங்க, சார்,'' என, விடை பெற்று சென்றான்.
அ டுத்த, இரண்டு ஆண்டுகளில் எப்படியோ சமாளித்து, படிப்பை முடித்து விட்டான். அதன்பின் ஒருநாள் என்னை பார்க்க வந்தான். ஒரு பாக்கெட் ஸ்வீட்டுடன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
''என்ன விசேஷம்? உனக்கு வேலை கிடைத்து விட்டதா?'' என்றேன்.
''ஆமாம். ஆனால், நான் படித்த இந்த படிப்புக்கு இல்லை. நான் உங்களிடம் பேசிய பின், 'பார்ட்டைம் கம்ப்யூட்டர் கோர்ஸ்' சேர்ந்து படித்து வந்தேன். அதன் மூலம் எனக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது,'' என்றான், புன்னகையுடன்.
நான் வியப்புடன் அவனை பார்த்தேன், இது எனக்கு தெரியாத முகம்.
''கெட்டிக்காரன் தான் நீ. குட் லக்,'' என்றேன்.
''வேலை, பெங்களூரில், சார். நான் நீங்க சொன்ன, பிரம்மாவின் எழுத்தை மாற்றி எழுதப் போறேன்,'' என்றான்.
''செய்,'' என்றேன், சிரித்தபடி.
இ து நடந்து, 10 ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில், 'லிங்க் டு- இன்' என்ற வலைத்தளத்தை எதேச்சையாக பார்த்த போது, அதில் அவன் புகைப்படமும், மிகப்பெரிய சர்வதேச கணினித்துறை நிறுவனத்தின் தலைமை பதவியில் அவன், லண்டனில் இருப்பதாக போட்டிருந்தது. என்னால் வியப்பை அடக்கவே முடியவில்லை.
ஆர்வம் காரணமாக, 'நீ எங்கள் நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்த, பிரசாத் தானா?' என, கேள்வி அனுப்பினேன்.
மறுநாள் அதில் ஓர், 'ஸ்மைலி' முகத்துடன், 'ஆமாம்...' என, பதில் வந்தது. தொடர்ந்து, 'இந்தியா வரும் போது உங்களை பார்க்கிறேன்...' என்ற ஓர் வரியும் இருந்தது.
ஆனால், வரவில்லை. வந்து பார்க்கவும் இல்லை. அவசியமென்ன? அவன் நினைத்ததை அவன் சாதித்து விட்டான்.
அ டுத்து, மற்றோர் கதை. மனோகர் என்ற அந்த மாணவன், மிக புத்திசாலி. தங்க பதக்கத்துடன் பட்டப்படிப்பை முடித்தான். தொடர்ந்து, 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்' என்ற மிகச்சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து, மேல்படிப்பு மற்றும் டாக்டர் பட்டம் பெற்றான். அவனும் படித்து முடித்து சென்ற பின் அதிக தொடர்பு இல்லை. எங்காவது வெளிநாடு போயிருப்பான் என, நினைத்துக் கொண்டேன்.
சில மாதங்களுக்கு முன், நண்பர்களுடன் புதுச்சேரி சென்றேன். அப்போது, நான் வழக்கமாக உபயோகிக்கும் சோப்பு மறந்து விட்டு போனதால், ஹோட்டலுக்கு சற்று தொலைவில் இருந்த ஓர் மளிகை கடைக்கு சென்றேன்.
அங்கு கல்லாவில் அமர்ந்திருந்த ஆளை பார்த்ததும், எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவன் முகம், மனோகரின் முகம் போல் தோன்றியது.
அதற்குள் அவனே என்னை அடையாளம் கண்டு, ''சார், வணக்கம். என்னை தெரிகிறதா? உங்கள் மாணவன், மனோகர்,'' என்றான் சிரித்தபடி.
''மனோகரா? நீ, பி.எச்.டி., பண்ணவில்லை?'' எனக் கேட்டேன்.
புன்னகையுடன், ''ஆமாம், பண்ணினேன். ஐ.ஐ.எஸ்.சி.இல்,'' என்றான்.
''நீ ஏன் தொடர்ந்து படிக்க வெளிநாடு எங்கும் போகவில்லை. உனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்குமே?'' என, வியப்புடன் கேட்டேன்.
''இல்லை சார். குடும்ப சூழ்நிலை இடம் தரவில்லை. தவிர, எனக்கும் என் குடும்பத்தை விட்டு பிரிந்து அவ்வளவு துாரம் சென்று வாழவோ, சம்பாதிக்கவோ ஆர்வம் இல்லை. இது, அப்பாவோட கடை. நானும், என் தம்பியும் பார்த்துக் கொள்கிறோம்,'' என்றான் புன்னகையுடன்.
''உனக்கு வருத்தமில்லையா, மனோகர். உன் படிப்பை விட்டு விட்டு, கடையில் உட்கார்ந்து வியாபாரம் பண்ண? அவ்வளவு நன்றாக படித்து பட்டம் வாங்கினாயே?''
தோள்களை குலுக்கினான்.
''நிஜம் சொல்ல வேண்டும் என்றால், இல்லை. படிக்கும் போது கவனமாக பொறுப்புடன் படிக்க வேண்டியது, ஓர் கடமை. அதை நான் செய்தேன். படித்த பிறகு, என் குடும்பம் தவிர உற்றோரை கவனித்து, அவர்களுடன் வாழ வேண்டும் என்பதை, மற்றோர் கடமையாக நினைத்துக் கொண்டேன். அவ்வளவு தான்.''
'உருப்படுவானா?' என, நினைத்தவன் இன்று, எங்கோ ஓர் உயரத்தில் இருக்கிறான். நிஜமாக உழைத்து உருப்பட்டவன், ஏதோ ஓர் சின்ன ஊரில் மளிகை கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்கிறான். ஆனால், இருவருமே மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
எப்படி? படிப்போ, பணமோ, உயர்வோ, தாழ்வோ சமூகம் சார்ந்ததா இல்லை. தனி மனித தீர்மானமா? இல்லை, விதியா?
லண்டனில் பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதும், புதுச்சேரியில் ஓர் மளிகை கடையை நடத்திக் கொண்டு இருப்பதும், ஒன்றா என்று கேட்கலாம்.
எது உயர்வு, எது தாழ்வு? எது மகிழ்ச்சி, எது துக்கம்? எது சாதனை, எது தோல்வி?
பெரும்பாலானவர்களின் வாழ்க்கை அவரவர்களின் தேர்வா அல்லது திணிப்பா? விளக்கப்படாத தத்துவங்களும், யதார்த்தங்களும், முரண்களும் உலகில் நிறைய இருக்கின்றன.
எனக்கு இதற்கான விடை கிடைக்கவில்லை. மகிழ்ச்சியோ, துக்கமோ, வெற்றியோ, தோல்வியோ அவரவர் மனதை பொறுத்த விஷயம் என்றே தோன்றுகிறது.
'பிரம்ம லிபி' நமக்கு புரியாது என, சொன்னேன் அல்லவா? அதை மாற்றி காட்டுவேன் எனச் சொல்லி சென்ற பிரசாத்தும், இப்போது, மனோகரும் என்னை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது.
தேவ விரதன்

