
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 35 வயது பெண். திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. அந்த குறை தவிர, வேறு எந்த குறையும் எங்களுக்கு இல்லை. சந்தோஷமாக இருந்த வாழ்வில் இப்போது, புயல் வீச ஆரம்பித்து விட்டது.
என் கணவருக்கு ஒரு தம்பி உண்டு. அவருக்கு திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இன்றி இருப்பதை பார்த்து, 'தம்பி குடும்பத்தை, நம் வீட்டு மாடியிலேயே தங்க வைக்கலாம். அவர்கள் குழந்தைகளை நாமே வளர்ப்போம்...' என, கணவரிடம் கூறி, எங்கள் வீட்டு மாடியில் தங்க வைக்க ஏற்பாடு செய்தேன்.
குழந்தைகளுடன் வாழ்க்கை, சந்தோஷமாக போனது. எல்லாம் சிறிது நாட்கள் தான்.
தம்பியும், அவரது மனைவியும், என் கணவரிடமிருந்து அவ்வப்போது பணம் வாங்க ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக, வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் என் கணவர் மூலமாக வாங்கி சேர்த்தனர். என் கணவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்து விட்டார், அவரது தம்பி.
வேலை முடிந்து, நேராக வீட்டுக்கு வரும் கணவர், இப்போதெல்லாம், காலதாமதமாக வருகிறார். என்னிடம் சண்டையே போடாதவர், இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், கோபமாக சண்டை போடுகிறார்.
தம்பியும், அவர் மனைவியும் என்னிடம் பேசுவதில்லை. குழந்தைகளையும் விடுவதில்லை.
என் கணவரை, முழுவதுமாக, தங்கள் கைக்குள் கொண்டு வந்து, வீட்டையும் எழுதி வாங்கிக் கொள்வரோ என, பயமாக இருக்கிறது.
கணவரின் நண்பர்களும், 'இப்போதெல்லாம் சரியாக வேலைக்கு வருவதில்லை. என்ன ஆச்சு?' என, எனக்கு போன் செய்து விசாரிக்கின்றனர்.
என் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. என் பெற்றோர் வெளியூரில் இருக்கும், என் அண்ணன் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கல்லுாரியில் முதலாமாண்டு படித்த போதே திருமணமானதில், படிப்பை தொடர முடியவில்லை. இனி படிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. நான் என்ன செய்யட்டும் அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அ ன்பு மகளுக்கு —
பிறந்த வீட்டு உறவுகளையும், புகுந்த வீட்டு உறவுகளையும் பேணுவதில், சாணக்கியத்தனம் தேவை.
உறவுகளின் விரல் பிடித்து நடக்கலாம். ஆனால், உறவுகளை உப்புமூட்டை துாக்கி சுமப்பதோ, தலையில் வைத்து கரகாடுவதோ, தோளில் உட்கார வைத்து திருவிழாவை சுற்றி காட்டும் அப்பா ஆவதோ கூடாது.
சில உறவுகளின் நெருக்கம், வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் கட்டிக்கொள்வது போல. சில உறவுகளின் நெருக்கம், விக்கிரமாதித்தனை தொற்றிக் கொள்ளும் வேதாளம் போல.
அடுத்து, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* முதலில், கணவரிடம் மனம் விட்டு பேசு. 'கெட்ட சகவாசமும், குடியும் தொடர்ந்தால், சொந்த வீட்டை இழப்போம். குடிக்காமல் ஒரு வாரம் இருங்கள். நீங்களும் தெளிவாக இருந்து, உங்கள் தம்பியும் தெளிவாக இருக்கும் சமயத்தில், தம்பி குடும்பத்தை காலி பண்ணச் சொல்வோம். வீட்டை காலி பண்ண, மூன்று மாதம் அவகாசம் கொடுப்போம். மூன்று மாதத்திற்குள் உங்கள் தம்பி வீட்டை காலி பண்ணாவிட்டால், காவல்நிலையத்தில் புகார் செய்வோம்...' எனக் கூறு
* நீங்கள் இருக்கும் வீடு, உன் மாமனார் கட்டியதா அல்லது கணவர் சொந்த சம்பாத்தியத்தில் கட்டியதா? இந்த வீட்டை கட்டும் போது, கொளுந்தனார் எதாவது பெரும்தொகை கடனாய் கொடுத்தாரா? மாமனார் கட்டிய வீடு என்றால், வீட்டின் பாதி பங்கு கொளுந்தனாருக்கு உரியது தானே? பல கேள்விகளுக்கு உன் கடிதத்தில் பதில் இல்லை
* கணவருக்கும், உன் தம்பி மனைவிக்கும் திருமண பந்தம் மீறிய உறவிருக்கிறதா... ஏதேனும் இருந்தால், துரிதமாக செயல்பட்டு. அந்த கள்ள உறவை கத்தரித்து விடு
* நீயும், கணவரும் முழு உடல்பரிசோதனை செய்து கொண்டீர்களா? எவ்வித மருத்துவப் பிரச்னை இருந்தாலும் தகுந்த மருத்துவம் பெற்று, குழந்தை கருத்தரிக்கலாம். செயற்கை கருத்தரிப்பு இப்போது, 90 சதவீதம் பலனளிக்கிறது
* கணவர் தினம் வேலைக்கு செல்வதை கண்கொத்தி பாம்பாய் கண்காணி. குடித்து விட்டு வந்தால், கணவரை வீட்டுக்கு வெளியே தள்ளி கதவை மூடு
* நீயும், கணவரும், தம்பி குடும்பத்துடன் நேரடியாக பேசுங்கள். 'உங்களை நல்ல எண்ணத்துடன் எங்கள் மாடியில் குடியேற்றினோம். சில விரும்பத் தகாத நிகழ்வுகள், நம் இணக்கத்தை சிதைத்து விட்டன. உடைந்தது உடைந்தது தான் மீண்டும் ஒட்டாது. மாடியை காலி பண்ணி கொடுத்து விடுங்கள். முட்டி மோதிக் கொண்டு விலக வேண்டாம். கைகுலுக்கி விடைபெறுவோம்...' என, பேசுங்கள்
* உன் கணவரின் தம்பி குடும்பம் தொடர்ந்து முரண்டு பண்ணினால், இருதரப்பு பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து பேசி, மாடியை காலி பண்ண வை.
அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து, தம்பி குடும்பம் மாடியை காலி பண்ணும் வரை ஓயாதே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

