
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 36 வயது பெண். கணவர் வயது: 39. காவல்துறை பணியில் உள்ளார். எங்களுக்கு இரு குழந்தைகள். மகன், 8ம் வகுப்பும், மகள், 6ம் வகுப்பும் படிக்கின்றனர். எங்களது நடுத்தர குடும்பம். நான், பி.ஏ., படித்துள்ளேன். இல்லத்தரசி.
என் கணவர் மிகவும் நேர்மையானவர். சம்பளம் தவிர, வேறு உபரி வருமானம் ஏதுமில்லை.
எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவரும் போலீஸ் இன்ஸ்பெக்டராகத்தான் உள்ளார். அவருக்கு, இரு ஆண் குழந்தைகள். சொந்த வீடு, கார் என, வசதியாக உள்ளார். அவர் குடும்பத்தினர் அனைவரும், விதவிதமான உயர்தர ஆடைகள் அணிவர். அக்குழந்தைகளை பார்த்து, என் பிள்ளைகள் ஏங்குவர்.
ஆடம்பர வசதி இல்லாவிட்டாலும், எங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து, சந்தோஷமாகத்தான் வைத்துக் கொள்கிறார், கணவர். எங்களுடையது வாடகை வீடு தான்.
ஒரே துறையில் பணிபுரிந்தாலும், என் கணவரால் ஏன், அந்த அளவுக்கு சம்பாதிக்க முடியவில்லை என, அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
'யாரிடமும், லஞ்சம் கேட்காமல், அவர்களாக கொடுப்பதை வாங்கிக் கொள்வதில் என்ன தவறு...' எனக் கேட்டு, அடிக்கடி கணவரிடம் சண்டை போடுவேன். 'ஊரோடு ஒத்துப் போகணும். பிழைக்கத் தெரியாமல் இருக்கிறாரே...' என, அவரது நண்பர்களும் கூறுவர்.
இது எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார், கணவர். எதிர் வீட்டினரை பார்க்க, பார்க்க ஏக்கமும், இயலாமையும் என்னை அலைக்கழிக்கிறது.
வேறு எங்காவது வீடு மாற்றி சென்று விடலாம் என்றாலும், 'இதுபோல் குறைந்த வாடகைக்கு வீடு அமையாது. காலம் இப்படியே இருக்காது. பதவி உயர்வு ஏதாவது கிடைத்து, நானும் முன்னுக்கு வந்து விடுவேன்...' என, தத்துவம் பேசுகிறார், கணவர்.
தினம் தினம், எதிர் வீட்டினரை எதிர்கொள்ளும் போது, மன உளைச்சல் தான் அதிகமாகிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி அம்மா?
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
லஞ்ச ஊழலில் இந்தியா, உலகின் 180 நாடுகளில், 96வது ராங்க்கில் இருக்கிறது.
லஞ்சம் என்ற வார்த்தைக்குள் அபகரிப்பு, உறவினர் சலுகை, மிரட்டி பணம் பறித்தல், ரகசியப் பணம், பணமோசடி, ஏமாற்றுப் பொறி, ஆதாயமுரண் போன்ற நெகடிவ் குற்றங்களும் அடங்கியுள்ளன.
* முதலில் நீ சரி செய்ய வேண்டியது உன் மனதை. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. வாழும் வாழ்க்கையில் முழு திருப்தி கொள். இருப்பதில், பொருளாதார தன்னிறைவு கொள். யாருடனும் உன்னை ஒப்பீடு செய்யாதே. பொறாமை மனதின் புற்றுநோய். உன்னிடம், 10 ரூபாய் இருந்தால், எட்டு ரூபாய்க்குள் வாழப்பார். 15 ரூபாய்க்கு வாழ்ந்து, 5 ரூபாய் கடனாளி ஆகாதே
* நீ எங்கு போனாலும், லஞ்சத்தில் திளைத்து ஆடம்பரமாய் வாழும் எதிர்வீட்டார் போன்றோர் இருக்கவே செய்வர். அதிக வாடகை கொடுத்தாலும் பரவாயில்லை. தற்காலிக நிம்மதிக்காக வீட்டை மாற்று. கணவரை, காவல்துறையில் வேறொரு இடத்துக்கு பணிமாற்றம் கேட்டு பெற சொல்
* நீயும் எதாவது வேலைக்கு போ
* மாதம், 10 ஆயிரம் ரூபாய் சேமித்து, தபால் அலுவலக சிறுசேமிப்பு கணக்கில் போடு. குறிப்பிட்ட பணம் சேர்ந்ததும், புறநகரில், ஆனால், சில ஆண்டுகளில் நன்கு, 'டெவலப்' ஆகக் கூடிய இடத்தில் ஒரு மனை வாங்கு. வீட்டுக்கடன் போட்டு, சின்னதாக வீடு கட்டு
* பணியில் நேர்மையாக இருக்கும் சந்தோஷம், வேறு எதிலும் கிட்டாது. அந்த சந்தோஷத்தை கணவருடன் சேர்ந்து நீயும் அனுபவி
* கணவருடன் சண்டை போட்டு வீட்டை நரகம் ஆக்காதே. மகிழ்ச்சி வெளியில் இருந்து கிடைக்கும் பொருள் அல்ல; நமக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது
லஞ்சம் ஒரு பிச்சை. திருவோடை துாக்கி எறி மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

