
மாடி வீட்டிற்கு புதிதாக குடி வந்திருந்தனர், சவிதா குடும்பத்தினர்.
'மாடிப்படி அடிக்கடி ஏறி, இறங்க முடியாது, சிரமம் தான். வேறு வழியில்லை. வாடகைக்கு வீடு கிடைத்ததே பெரிய விஷயம்...' நினைத்தவளாய், மனதில் இருக்கும் கவலையை ஒதுக்கி வைத்து, வேலைகளை பார்க்க துவங்கினாள், பார்வதி.
வீட்டின் உரிமையாளர் கீழே இருக்கிறார். மிலிட்டரியில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர். இருவர் மட்டுமே இருக்கின்றனர். வந்து ஒரு வாரமே ஆனதால், இன்னும் அவர்களுடன் பழகவில்லை.
அதுமட்டும் இல்லாமல் மனதில் பாரமாக அழுத்தும் வேதனையில், யாரிடமும் முகம் கொடுத்து பேசக் கூடப் பிடிக்கவில்லை.
இதற்கெல்லாம் காரணம், அவர்கள் அருமை பெருமையாக சீராட்டி வளர்த்த ஒரே மகள் சவிதா தான். சென்ற ஆண்டு, அவள் கல்யாணம் நல்லபடியாக நடந்தது. மாப்பிள்ளைக்கு ஐ.டி., கம்பெனியில் வேலை. அவளுக்கு பொருத்தமாக அழகாகவே இருந்தார்.
மகள் கல்யாணம் முடிந்த சந்தோஷம், பத்து மாதம் கூட நிலைக்கவில்லை. கணவனுடன் ஒத்துப் போக முடியாமல் சண்டையும், சச்சரவுமாக பொழுதைக் கழித்தவள், ஒரேயடியாக பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள்.
மூன்று மாதமாக, அம்மா வீட்டில் இருப்பதை, அக்கம்பக்கத்தில் உள்ளோர் ஜாடைமாடையாகப் பேச, பிறகு நேரடியாகவே கேட்கத் துவங்கினர்.
பிடிவாதக்காரியான மகளை சமாதானப்படுத்தி அனுப்பவும் முடியவில்லை. மகளுக்கு மேல் பிடிவாதமாக இருக்கும் மருமகனிடம் பேசவும் முடியாமல், பெற்றவர்கள் வேதனையில் துவண்டு போயினர்.
'இப்ப உனக்கு என்ன பிரச்னை, நீ கல்யாணம் பண்ணி கொடுத்துட்ட காரணத்திற்காக, பிடிக்காத வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. அக்கம்பக்கத்தினர் கேட்பதற்கெல்லாம் கவலைப்பட முடியாது.
'பேசாமல் வீட்டை மாத்துவோம். போற இடத்தில், உன் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சொல்லு. என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு...'
கொஞ்சம் கூட தன் எதிர்கால வாழ்க்கையை பற்றி நினைத்து பார்க்காமல், மாப்பிள்ளையிடம் பிரச்னை செய்து, வீட்டிற்கு வந்திருக்கும் மகளை என்ன சொல்வது. இவள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ என, பெற்றவர்களின் கவலை அதிகமானது.
வேலைக்கு கிளம்பிய மகள் முன் வந்தார், அப்பா.
''சவிதா, மதியத்திற்கு மேல் அம்மாவை அழைச்சுக்கிட்டு டாக்டர்கிட்ட போயிட்டு வரேன். ஒரு வாரமாக தலைசுத்தல் அதிகமாக இருக்குன்னு சொல்றா. 'செக்கப்' பண்ணிட்டு வர்றோம். நீ வேலை முடிச்சு வந்தா, கீழ் வீட்டில் சாவி கொடுத்துட்டு போறோம், வாங்கிக்க. எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரியாது.''
''சரிப்பா, நீங்க சாவியை கீழ் வீட்டில் கொடுத்துட்டு போங்க, வாங்கிக்கிறேன். அம்மாவுக்கு ஏதாவது, 'டெஸ்ட்' செய்யணும்ன்னு சொன்னாலும், எல்லாத்தையும் பார்த்துட்டு வந்துடுங்க. 'ப்ரஷர்' அதிகமாயிடுச்சோ, என்னமோ தெரியலை.''
இதுக்கு காரணமே உன் கவலை தான் என்பதை, வெளியே சொல்ல முடியாமல், அங்கிருந்து நகர்ந்தார்.
மாலை -
வெளி கேட்டை திறந்து உள்ளே வந்தவள், வாசலில் உட்கார்ந்திருப்பவரை பார்த்து, ''அங்கிள், சாவி கொடுத்துட்டு போயிருக்காரா, அப்பா,'' எனக் கேட்டாள்.
''ஆமாம்மா, உள்ளே வாயேன். நீங்க, குடி வந்து ஒரு மாசம் ஆகப்போகுது. இன்னும் உன்கிட்ட பேசக் கூட இல்லை. வாம்மா, வந்து உட்காரு, காபி குடிச்சுட்டு போகலாம்,'' என்றார்.
அன்போடு அழைப்பவரிடம், மறுப்பு சொல்ல முடியாமல், வீட்டிற்குள் சென்றாள்.
அவர் உள்ளே போக, வீட்டைச் சுற்றி கண்களை ஓட விட்டாள். சுத்தமாக இருந்தது.
இரண்டு, 'கப்'பில் காபியுடன் வந்தார். அவளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அருகில் உட்கார்ந்தார்.
''அங்கிள், வீட்டில் ஆன்ட்டி இல்லையா?''
''வீட்டில் தான் இருக்கா. ஆனால், அவளுடைய நடமாட்டம் எல்லாம் முடிஞ்சுடுச்சு.''
புருவத்தை உயர்த்தி அவரைப் பார்த்தாள், சவிதா.
''நான் ராணுவத்தில் வேலை பார்த்தேன். வருஷத்துக்கு, 10 நாள் விடுமுறை கிடைக்கும். ஊருக்கு வரும் என் மேல் அன்பையும், பாசத்தையும் கொட்டுவா. எனக்கு தேவையானதைப் பார்த்து பார்த்து செய்வாள்.
''நானும் என்னால் முடிஞ்ச வரை அவளை சந்தோஷப்படுத்துவேன். அவளுக்கு பிடிச்ச இடங்களுக்கு அழைச்சுட்டு போய், பிடிச்சதை வாங்கிக் கொடுப்பேன். இப்படிதான் எங்க இல்லற வாழ்க்கை நடந்தது.
''ஒருமுறை, நான் வரும் சமயம், என்னை வரவேற்க காரில் வந்தவள், விபத்துக்குள்ளாகி, சுய நினைவை இழந்துட்டா... எவ்வளவோ வைத்தியம் பார்த்தேன். எதுவும் பலனளிக்கவில்லை.
''எட்டு வருஷமாக படுக்கையில் தான், அவள் வாழ்க்கை. எந்த உணர்வும் இல்லாமல், தன்னைச் சுற்றி நடப்பதை கூட தெரிஞ்சுக்க முடியாமல், உயிருள்ள ஜடமா இருக்கா.''
''நீங்க, சொல்றதைக் கேட்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கு, அங்கிள். கடவுள் உங்களுக்கு இப்படியொரு கஷ்டத்தைக் கொடுத்துட்டாரே.''
''இல்லம்மா, நான் இதை கஷ்டமா நினைக்கலை. நாங்க, இரண்டு பேரும் இத்தனை வருஷத்தில் ஒன்னா தாம்பத்தியம் நடத்தியது, எண்ணிப் பார்த்தா, நாள் கணக்கில் தான் இருக்கும். எங்களுக்குள் ஏற்பட்ட பந்தபாசத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாதும்மா...
''அவள் உயிரோடு இருக்கும் வரை, என் மனைவியாக தான் வாழ்ந்துட்டு இருக்கா. ஒரு கணவனா, அவளை பாதுகாப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது. இது, அவள் என் மேல் வச்சிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் தருகிற மரியாதை. இதை நான் சுமையாகவே நினைக்கலை.''
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள், சவிதா.
''அப்பா சொன்னார், உன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்ன்னு. கவலைப்படாத, அங்கிருந்தாலும் அவர் மனசு முழுக்க, உன்கிட்டதான் இருக்கும். கணவன் - மனைவி உறவுங்கிறது சாதாரணமானது இல்லை.
''அவங்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பும், பாசமும் எங்கிருந்தாலும் அவங்களை இணைச்சு வச்சுடும். கடவுள் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை நிறை குறைகளோடு ஏத்துக்கிட்டு, வாழப் பழகிக்கணும்.''
வீடு திரும்பினர், சவிதாவின் பெற்றோர்.
''பிரஷர் தான் அதிகம் இருக்குன்னு மாத்திரை எழுதிக் கொடுத்திருக்கார், டாக்டர். ஓய்வு எடுத்தால் சரியாகிடும்,'' என்று, அப்பா சொல்ல, அமைதியாக உட்கார்ந்திருந்தாள், அம்மா.
இருவரையும் பார்த்தபடி, ''அப்பா, அவர், 8:00 மணிக்கு மேல் வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காரு. நான் தான் வரச் சொன்னேன். இரண்டு பேரும் மனசு விட்டு பேசலாம்ன்னு இருக்கோம். இரவு சாப்பாட்டை வெளியே, 'ஆர்டர்' பண்ணிடவா?'' என்றாள்.
மனதில் உற்சாகம் பொங்க, ''எதுக்கு, மாப்பிள்ளைக்கு வெளியே சாப்பாடு சொல்லணும்... நான் நிமிஷத்துல செய்துடுவேன்,'' என்று பரபரப்பாக எழுந்தாள், பார்வதி.
''அம்மா, உனக்கு உடம்பு சரியில்லை. ஓய்வெடு,'' என்றாள், சவிதா.
''இல்லம்மா, அவள் போகட்டும். இனி, அவள் உடம்பு தன்னால சரியாகிடும்,'' என்ற, அப்பா, மனதில் நிம்மதி படர, அன்போடு மகளை பார்த்தார்.
பரிமளா ராஜேந்திரன்

