
''நாலு மணிக்கெல்லாம் வந்துடு. நான் போன் பண்ண மாட்டேன்...'' என, காலையில் கையில் சிற்றுண்டியை கொடுத்தபோது கூறினாள், அம்மா சரஸ்வதி. அதை வேண்டுமென்றே காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் நகர்ந்தான், பார்த்திபன்.
வேறு வழியல்லாமல், 4:00 மணிக்கு வந்து சேர்ந்தான், பார்த்திபன். முகத்தில் எந்த உற்சாகமும் இல்லை. எரிச்சலும், கோபமும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவனால், அம்மாவிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அம்மாவும், அவனைப் போல் தான் உடைந்துப் போயிருக்கிறாள்.
பார்த்திபன் தளர்வாய் வந்து சேர்ந்தபோது, அம்மா வழக்கம் போல், பட்டு சேலை மற்றும் நகைகள் அணிந்து, பளிச்சென அமர்ந்திருந் தாள். அத்தனை வலியிலும் அவனுக்கு சிரிப்பு வந்தது.
'எப்படி அம்மா இந்த வயதிலும் கொஞ்சம் கூட, சோர்வு இல்லாமல் ஒவ்வொரு முறையும் இப்படி தயாராகி விடுகிறாள்?' என, நினைத்துக் கொண்டான், பார்த்திபன்.
''சீக்கிரமா டிரஸ் மாத்திக்கிட்டு வா...'' என்றாள், சரஸ்வதி.
எடுத்துப் போக வேண்டிய பழம், பூ ஆகியவற்றை பையில் எடுத்து வைத்து, பார்த்திபனை ஒருமுறை தலை முதல் கால்வரை பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டாள்.
''பார்த்தி.''
''ம்.''
''இந்த தடவை, நீ விவாகரத்து ஆனவன்னு நான் சொல்லப் போறதில்லை.''
''பின்னே, கல்யாணமே ஆகாதவன். சுத்த பிரம்மச்சாரின்னு சொல்லப் போறீயா?'' என்று கூறி சிரித்தான்.
அந்த சிரிப்பு அவளை அவமானப்படுத்தி இருக்க வேண்டும்.
''போதும்டா, போதும். என் புள்ளை, விவாகரத்து ஆனவன்னு சொல்லி சொல்லி, நான் பட்டதெல்லாம் போதும். விவாகரத்து ஆனவங்க எல்லாம், இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதா?
''ஒரு மனுஷன் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஆயிரம் கேள்வி. ஆயிரம் விசாரணை? ஏன் விவாகரத்து செய்தான். எதுக்கு செய்தான் அப்படி இப்படின்னு? ச்சை...''
பார்த்திபனுக்கும், ஆனந்திக்கும் ஒத்து வரவில்லை. அழகும், ஆசையும் மட்டுமே வாழ்க்கையை வழி நடத்திப் போவதில்லை என்பதை நிரூபித்துவிட்ட முந்தைய வாழ்க்கை. முழுவதுமாக அவள் மேல் அவனால், குற்றம் சொல்ல முடியாது. அவளுடைய கனவுகள், சிந்தனைகள். இரு குடும்பத்துக்குமான எதிர்ப்பார்ப்புகள். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்படித்தான் போய்விட்டாள், ஆனந்தி. விட்டுக் கொடுத்து போயிருந்தாலும், அது விட்டேற்றியான வாழ்க்கையாகத்தான் இருக்கும் என சமாதானப்படுத்தி, அடுத்த பயணத்தை நோக்கி செல்ல வைத்தது இருவரையும்.
'முதல் திருமணம் ஏன், விவாகரத்தில் முடிந்தது? பையன் குடிகாரனா இருந்திருப்பான். தினமும் குடிச்சுட்டு வந்தா, எவ தான் இருப்பா? வேற பொண்ணுங்க கூட தொடர்போ என்னமோ?' பெண் பார்க்க போன இடத்திலெல்லாம் எதிர்கொண்ட கேள்விகள் இவை.
எல்லாவற்றையும் விட அவனையும், அம்மாவையும் தாக்கிய பெரிய ஆயுதம்.
'அந்த காலம் மாதிரி அந்த விஷயத்துல பொண்ணுங்களை இப்பவெல்லாம் எவனும் ஏமாத்த முடியாது. பொண்ணுங்களெல்லாம் படிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்குதுக. இவனுக்கு ஆண்மை இல்லையோ என்னமோ? அதான் போடான்னு போயிட்டாளோ என்னமோ...'
அடி. மிகப்பெரிய அடி இது தான். சுருண்டு புழுவாய் போனான், பார்த்திபன்.
நல்ல வேளை, ஆனந்தியுடன் ஒரு குழந்தை இல்லாமல் போனது. இல்லாவிட்டால், அந்த குழந்தை தாய் அங்கே, தந்தை இங்கே என, அல்லாடியிருக்கும் என, சமாதானப்படுத்திக் கொண்டது மனம். இப்பொழுது, தன் ஆண்மையை நிரூபிக்க, ஒரு குழந்தை இந்த சமுதாயத்திற்கு வேண்டியிருக்கிறது என்ற உண்மை சுட்டபோது உயிரே போனதைப் போலானது.
வாழ்க்கை என்பது பரீட்சை தான். முதல் பரீட்சையில் தோல்வி என்றால், இரண்டாவது பரீட்சைக்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது.
அங்கெல்லாம் அவனுக்கு சத்திய சோதனை. குடிக்காதவன், கொண்டு வா என கொடுமை படுத்தாதவன், கழட்டி விட்ட மனைவியைத் தவிர, வேறு பெண் தொடர்பு இல்லாதவன் என, நிரூபிக்க வேண்டியிருந்தது.
உச்சபட்ச அவமானமாக, ஆண்மை உள்ளவன் என்பதை நிரூபிக்க, மருத்துவ சான்றிதழ் கேட்டனர், ஒரு குடும்பத்தில்.
அசிங்கப்பட்டாலும், அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தைக் கேட்கும் போது, பாவமாக இருந்தது. அந்த பெண்ணிற்கு முதல் கல்யாணம் இப்படித்தான் தோல்வியில் முடிந்து வீட்டுக்கு திரும்பி இருந்தாள். அதனால், ஆண்மை உள்ளவனா என முதலிலேயே சோதனை, என்ன உலகம்?
வெறுத்துப் போனான், பார்த்திபன்.
'அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் இப்படியே இருந்துடறேன்...' என, பல சமயம் மன்றாடினான்.
இந்த கேள்விகளை எல்லாம் தவிர்க்கவே, தன் மகனை விவாகரத்து ஆனவன் என்பதை மறைக்க முடிவு செய்துவிட்டாள், சரஸ்வதி. முதல் மனைவி இறந்து விட்டாள் என சொல்லப் போகிறாளாம். குபீரென சிரிப்பு வந்தது.
''அம்மா, நீ இப்படியெல்லாம் பொய் சொல்றதா இருந்தா நான் வரலை,'' என்றான், கோபமாக பார்த்திபன்.
''உண்மையை சொல்லி நாம பட்ட பாடு போதாதா?''
''பொண்டாட்டி செத்ததா சொன்னா மட்டும் விசாரிக்காம விட்டுடுவாங்களா? எப்படி செத்தா, இயற்கையா செத்தாளா, இல்ல தற்கொலை பண்ணிக்கிட்டாளான்னு கேள்வி வராதா? அப்புறம், 'டெத் சர்டிபிகேட்' கொடுத்தாதான், சம்மதிப்போம்னு சொல்லுவாங்க?
''அம்மா, என்னை நம்பி, எனக்கு கழுத்தை நீட்ட, எவளாவது ஒருத்தி கிடைக்காமலா போவா? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அப்படி ஒருத்தி வந்தா கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்...'' என்று, முடிவாக சொன்னான், பார்த்திபன்.
அப்படித்தான் வந்தாள், பனிமலர்.
பெயருக்கு ஏற்ற மாதிரி, பனிமலரைப் போல், கண்களுக்கு குளுமையாக இருந்தாள். அமைதியும், பேச்சில் இழையோடும் மென்மையும், யாரையும் கவர்ந்து விடும்.
'பெண்ணிற்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது...' என்று, பனிமலரின் தந்தை, ஜெயதேவன் சொன்னபோது, ஆனந்தபட முடியாமல், அதிர்ச்சி தான் பார்த்திபனை ஆட்கொண்டது. இத்தனை நாளாக பிடிபடாத வாழ்க்கையின் நுால் நுனி, கைக்கு கிடைத்துவிட்டதே என, நிம்மதி பெற முடியவில்லை.
அவனை விலக்கிய விசாரணைகள், மனதில் துாறல் விழுந்ததும், மண்ணை கிளறிக் கொண்டு கிளம்பும் காளான்களாய் கேள்விகள் முளைத்தன.
நல்ல வசதி. ஒரே பெண். அழகும் படிப்பும் குறைவில்லாமல் இருந்தது. அதுவே, அவனுக்குள் பெரிய பெரிய சந்தேகங்களை உண்டாக்கியது.
''அம்மா, அந்த பொண்ணு அவ அப்பாவுக்கு ஒரே பொண்ணு. நல்ல வசதி. படிச்சிருக்கா. வேலைக்குப் போறா. கைநிறைய சம்பாதிக்கறா. ரொம்ப சுதந்திரமா இருக்கா. அவளை... அவ அப்பா ஏன் ரெண்டாந்தாரமா எனக்கு கொடுக்கணும்?
''ஏற்கனவே, அவளுக்கு கல்யாணமும் ஆகலை. விவாகரத்தோ, புருஷன் செத்தோ போகலை. அப்படியிருக்கும் போது, ஏன், இரண்டாம் தாரமா அவர் தரணும்?''
''இருக்கலாம்ப்பா. ஏதாவது காரணம் இருக்கலாம். சில பொண்ணுங்களோட ஜாதகம் கூட அப்படி இருக்கலாம். முதல் தாரமா போகாதுன்னு இருக்கலாம். அப்படி இருந்தா, எவ்வளவு பணம் இருந்து வசதி இருந்து என்ன பயன்? இரண்டாம் தாரமா தான் வாழ்க்கை அமையும். அதையெல்லாம் நினைச்சு அவ அப்பா முடிவுப் பண்ணி இருக்கலாம்.''
அவனால், இதை நம்ப முடியவில்லை.
''அம்மா, இந்த ஜாதகம், ஜோசியம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.''
''உனக்கு நம்பிக்கை இல்லைன்னா என்ன? அவருக்கு நம்பிக்கை இருக்கலாம் இல்லையா? நமக்கு என்ன? தேவை இல்லாம எதையாவது கிண்டி கிளறி, கடைசியில நம்ம மேலயே அவங்களுக்கு சந்தேகம் வந்துடப் போவுது?
''நம்மைப் பொறுத்தவரை, நல்லது தானே நடந்திருக்கு. என்ன காரணமாவது இருந்துட்டுப் போவுது. நமக்கென்ன? எதையும் போட்டு குழப்பிக்காம அடுத்த வேலையைப் பார்ப்போம்...'' என, தீர்மானமாக சொல்லிவிட்டாள், சரஸ்வதி.
'உண்மையை அறியாமல் வாழ்க்கை சாத்தியம் இல்லை. காதல் தோல்வி என்று ஏதாவது இருக்கலாம். அதனால், மனம் வெறுத்துக் கூட, இந்த வாழ்க்கைக்கு சம்மதித்திருக்கலாம். இல்லையேல், உடல் ரீதியாக ஏதாவது குறைபாடு?
'இரண்டாம் கல்யாணம் என்றால், அந்தளவிற்கு பிரச்னை வராது என, நினைத்திருக்கலாமோ... பெண் கிடைக்காமல் அலைந்தவன், இதையெல்லாம் பெரிதாக நினைக்க மாட்டான் என கணக்கிட்டிருக்கலாமோ? எது எப்படியோ உண்மையைத் தெரிந்துக் கொள்ளாமல் திருமணத்திற்கு சம்மதிக்கப் போவதில்லை...' என, முடிவு செய்தான்.
சந்திக்க விரும்புவதாக, பனிமலருக்கு போன் செய்தான், பார்த்திபன்; சந்திக்கும் இடத்தை குறிப்பிட்டு அவளே வந்து சேர்ந்தாள்.
இரண்டு காபிக்கு மட்டும் சொல்லிவிட்டு அவளை ஆழமாகப் பார்த்தான்.
இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டியவாறு அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள், பனிமலர்.
காபி வந்ததும், அவனும் விஷயத்திற்கு வந்தான். தயக்கமாய் ஆரம்பித்தவன், தடதடவென கேட்கத் துவங்கிவிட்டான்.
''உங்களுக்கு ஜாதகத்துல நம்பிக்கை இருக்கா?''
அவள் குழப்பமாக சிரித்தாள்.
''ஏன் கேட்கறீங்க?''
''கல்யாணம் ஆகி, விவாகரத்து ஆன என்னை கல்யாணம் பண்ணிக்க முன் வந்திருக்கீங்களே... ஜாதகத்துல உங்களுக்கு முதல் தாரமா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு இருக்கா?''
இப்பொழுது அவள் வாய்விட்டு சிரித்தாள்.
''உங்களுக்கு இப்படி யாராவது சொன்னாங்களா?''
''இல்லை, நானாகத்தான் கேட்கிறேன்.''
''அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. அப்படியே இருந்தாலும் எனக்கு, இந்த ஜாதகத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை. அடுத்து, வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?''
அவள் கேட்டது கேலியாக இருந்தாலும், அவனால் அடுத்த சந்தேகத்தை கேட்காமலிருக்க முடியவில்லை.
''பொதுவா, பொண்ணுங்க இரண்டாம் தாரமா ஒரு வாழ்க்கையை விரும்பறதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை, பொருளாதார பிரச்னை என, ஏதாவது ஒரு காரணத்தால தான் விதியோட தலையில போட்டுட்டு கல்யாணம் பண்ணிப்பாங்க.
''ஆனா, உங்ககிட்ட எந்த குறையும் இல்லை. நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், அப்பாவுக்கு ஒரே பொண்ணு. வசதி எல்லாம் இருந்தும், நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது குழப்பமா இருக்கு. காதல் தோல்வி ஏதாவது...'' இப்போது, அவனும் சிரித்தான்.
''உங்க கேள்வி நியாயமானது தான். நான், உங்களை கல்யாணம் பண்ணிக்க காரணம் இருக்கு. என்னோட ஜாதகம், காதல் தோல்வி இதெல்லாம் காரணம் இல்லை. எங்கப்பா தான் காரணம். சின்ன வயதுலேயே எங்கம்மா செத்துட்டாங்க.
''இன்னொருத்தி தன் வாழ்க்கையில வந்தா, என்னோட வளர்ச்சி நல்லா இருக்காதுன்னு அப்பா முடிவு செய்து, தனக்கு இன்னொரு வாழ்க்கையை அவர் தேடிக்கவே இல்லை. ஆரம்பத்துல, அவரோட உணர்வுகள் எனக்குப் புரியாவிட்டாலும், காலம் போக போக அவர் தனிமையில இருக்கறதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.
''அப்ப, அப்பாவை நான் கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். 'இத்தனை வயசுக்கு மேல எதுக்கு கல்யாணம்...' என, மறுத்துட்டார், அப்பா. ஆனா, அவரோட தனிமை எனக்குள்ள பெரிய குற்ற உணர்வை உண்டாக்கிடுச்சு.
''நான் தான் அவரை கடைசி வரை பார்த்துக்கணும். ஆனா, வர்றவன் அவரை புரிஞ்சுக்கணுமே! அவர் காலம் பூரா தனிமையில வாழ நேர்ந்தா, அவரோட நிலைமை எப்படி இருக்கும்? மனைவி இல்லாம அவர் பட்ட கஷ்டம், தனிமை உணர்வு எல்லாத்தையும், அதையெல்லாம் அனுபவிச்ச ஒருத்தரால தான், அவரோட புரிஞ்சுக்க முடியும்.
''நான் மட்டும் அவருக்கு மகளா இருந்தா போதாது. வர்றவனும் ஒரு மகனா இருக்கணும். நீங்க அவரை சரியா புரிஞ்சுப்பீங்கன்னு தோணுச்சு. அதனால தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். என்னோட எண்ணங்கள் சரியா?'' பனிமலர் ஆர்வமாக கேட்க, ஆச்சரியமாக அவளைப் பார்த்தபடி ஆமோதித்தான், பார்த்திபன்.
ஆர். சுமதி