
பா - கே
சினிமா பொன்னையாவுடன் வந்திருந்த, சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
'அது எப்படி சார், நீங்க தயாரிக்கும் படங்களின் வசூல், கையைக் கடிக்காத அளவுக்கு எடுத்துடறீங்களே...' என்றேன்.
'அது, ஒண்ணும் பெரிய விஷயமில்லை. பெண்களுக்காக சில உருக்கமான காட்சிகள், இளைஞர்களுக்குன்னு சில கவர்ச்சி நடனங்கள் மற்றும் அடிதடி காட்சிகள், வயசானவங்களுக்குன்னு சில ஆன்மிகக் காட்சிகள், சிறுவர்களுக்கு சிரிப்பு...
'இப்படி எல்லாமும் சேர்த்து, மசாலா படம் எடுக்கறேன். இது ரொம்ப பெரிசா இல்லேன்னாலும், ஓரளவு லாபம் சம்பாதிச்சு கொடுத்துடும். இது ஒரு உத்தி...' என்றார், தயாரிப்பாளர்.
'சில பத்திரிகை ஆசிரியர்களும், இந்த உத்திகளை கையாளறது உண்டு. இதுக்கு, 'பார்னம் உத்தி' என்று பெயர்...' என்றார், அருகில் இருந்த, 'திண்ணை' நாராயணன்.
'அது என்ன பார்னம் உத்தி?' என்றேன்.
'பீனீயஸ் பார்னம் அப்படின்னு ஒரு அமெரிக்கர், 19ம் நுாற்றாண்டில், அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த, சர்க்கஸ் நிறுவனம் ஒன்றின் அதிபர். இந்த உலகத்துல ஒவ்வொரு நிமிஷமும் ஓர் ஏமாளி பிறந்து கொண்டே இருக்கிறான் என்பது, அவருடைய சித்தாந்தம்.
'ஒவ்வொருத்தரையும், திருப்திப்படுத்துகிற அம்சங்களை கொஞ்சம் கொஞ்சம் கலந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியதே, அவருடைய மகத்தான வெற்றிக்கு காரணம். அதனால, இந்த உத்தியை யார் கடைபிடிச்சாலும் அதுக்கு, 'பார்னம் உத்தி' என்று பெயர் வந்தது.
'ஜோசியம் சொல்றவங்களுக்கு இந்த உத்தி ரொம்பவும் உதவியா இருக்கும். ஒருத்தருடைய கோள் நிலைகள் அல்லது கையெழுத்து அவரது வாழ்க்கையை நிர்ணயிப்பதாக சொன்னா, அதை அவர் நம்பிவிடுவார்.
'ஆனா, அந்த விஷயம் நல்லதா, நேர்மறையானதா இருக்கணும். 'எட்டாம் இடத்திலே குரு, ஒன்பதாம் இடத்துல சனி. நீங்க ஒரு பெரிய மேதையாத்தான் இருக்கணும்...' என்று சொல்வாங்க. கேட்கிறவருக்கு அதை மறுக்க மனசு வராது.
'அப்படி சொல்லும் போது, கூடவே, 'என்ன கொஞ்சம் முன்கோபம் அதிகம். ஆனாலும், அது உடனே மறைஞ்சுடும்...' அப்படின்னு சில அற்ப விஷயங்களை சொன்னாலும், அதையும் அவர் சரிதான்னு ஒப்புக் கொள்வார்.
'பொதுவாக இருக்கக் கூடிய சூழ்நிலையை அடிப்படையாக வைத்து கூறப்படும் ஜோசியத்தால், தன்னுடைய குணாதிசயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் நம்பறது தான் இதற்கு காரணம்.
'இந்த மாசம், பணத்தட்டுப்பாடு கொஞ்சம் இருக்கும்; உடம்புல, ஏதாவது கொஞ்சம், அசவுகரியம் இருக்கும்; வீட்டுக்குள்ளே லேசா மனஸ்தாபம் வரலாம். இதுமாதிரி பொதுப்படையான சிலதை சொன்னாலே போதும். மக்களை நம்ப வச்சுடலாம்.
'இதெல்லாம் நமக்கு மட்டும்தான் ஏற்படுதுன்னு, அவங்க நினைக்கிறது தான் காரணம். இது தான், பார்னம் உத்தி.
'மனிதர்கள், பாராட்டுகளை விரும்பறதும், விமர்சனங்களை வெறுக்கறதும், பார்னம் உத்தியின் அடுத்த கூறு.
'அதனால, ஒருத்தருக்கு ஜோசியம் சொன்னாலும் சரி, அவருடைய ஆளுமையை மதிப்பிடறதாக இருந்தாலும் சரி, அவரை புகழற மாதிரி இருந்தா தான் சரியா இருக்கும். சாதகமான விஷயங்களை அதிகமாகவும், பாதகமான விஷயங்களை நாசூக்காகவும் சொல்லும்போது, நம்பிடுவாங்க.
'ஒருத்தரை, கருமின்னு சொன்னா ஏத்துக்க மாட்டார். அதையே மாத்தி, சிக்கனமானவர் என்று சொன்னா, 'நீங்க சொல்றது சரிதான்...' என்பார்.
'நீங்க பெரிய செலவாளி தான். ஆனாலும், நல்ல விஷயங்களுக்கு தான் செலவழிப்பீங்கன்னு சொல்லணும். இந்த பார்னம் உத்தியை கடைபிடிச்சு இன்னைக்கு வெற்றிகரமாக காலம் தள்ளுறவங்க நிறைய பேர் இருக்காங்க...' என்று முடித்தார், நாராயணன்.
ப
புத்தகம் ஒன்றில் படித்தது:
ஏராளமான சொத்து உள்ளவர்கள், தங்கள் காலத்துக்கு பின், அந்த சொத்துக்களை, சொந்தங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என, உயில் எழுதி வைப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சில, வேடிக்கையான மனிதர்கள், எப்படியெல்லாம் விசித்திரமாக உயில் எழுதி வைத்துள்ளனர் என்பது பற்றிய தொகுப்பு தான் இது:
உயிலை பொதுவாக, பேப்பரில் தானே எழுதி வைப்பர்?
மெக்சிகோ நாட்டில், மோனேகி என்பவர், தன் மார்பில், உயிலை பச்சை குத்திக்கிட்டாராம். யாராலும் அழிக்க முடியாது என்பது, அவரது நினைப்பு.
ஒருநாள் திடீரென்று அவர் இறந்து போனார். பிணத்தை புதைத்து தானே ஆக வேண்டும்.
புதைத்தால், மார்பில் எழுதியிருக்கிற உயிலும் அழிஞ்சுடும் என்பதால், 'பிணத்தை புதைக்கக் கூடாது...' என, ஆட்சேபனை செய்தனர், உறவினர்கள்.
சில நாள் வரை உடலை புதைக்காமல், பக்குவம் செய்து வைத்திருந்தனர்.
வழக்கு கோர்ட்டுக்கு போக, பச்சை குத்தியிருந்த உயிலை நகல் எடுத்து கொண்டார், நீதிபதி. அதன் பின், அந்த உடம்பை புதைத்து விட்டனர்.
இன்னொரு வேடிக்கையான ஆசாமி, ஜோசையா ட்விஸ், தான் இறந்த பிறகு, சவ ஊர்வலத்தில், 'பாண்ட்' வாசிப்பவர்களுக்கு தலைக்கு, 40 டாலர் கொடுக்கணும்; ஊர்வலத்தில் வருபவர்களுக்கு, 20 டாலர் செலவில், நிலக்கடலையும், வெல்லமும் வாங்கிக் கொடுக்கணும்; தன்னுடைய ஆறு பிள்ளைகளுக்கும், தலைக்கு, இரண்டு டாலர் மட்டுமே கொடுக்க வேண்டும் என, எழுதி வைத்தார்.
இதைவிட வேடிக்கையான இன்னொரு சம்பவம். பிரான்ஸ் நாட்டில், தன்னுடைய, 90 வயதில் உயில் எழுதி வைத்து, செத்துப் போனார், ஒரு அம்மா.
'உயிலை எடுத்து வாசிங்க கேட்போம்...' என்றனர், உறவினர்கள்.
'என் நீண்ட ஆயுளுக்கு, என்னோட குடும்ப டாக்டருக்கு, நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். என் அறையில் ஒரு மரப்பெட்டி வச்சிருக்கேன். அந்த பெட்டியில் இருக்கிறது பூராவும் அவருக்கு தான் சொந்தம். அந்த மரப் பெட்டியின் சாவி, என் படுக்கைக்கு அடியில் இருக்கு...' என, உயிலில் எழுதியிருந்ததை வாசித்து முடித்தார், வக்கீல்.
உறவினர்களின் முகம் அஷ்டகோணலானது. 'என்ன இது, இந்த கிழவி, பெட்டியில் இருக்கறது பூரா டாக்டருக்குன்னு எழுதி வச்சுட்டுது...' என எரிச்சல்.
உடனே, அந்த டாக்டருக்கு தகவல் சொல்லி அனுப்பினர். அவரும் வந்து சேர்ந்தார்.
அனைவர் முன்னிலையிலும், அந்த பெட்டியை திறந்தனர். அதில், 20 ஆண்டுகளாக, அந்த அம்மாவுக்கு டாக்டர் கொடுத்த மருந்து, மாத்திரை, மருந்து சீட்டு எல்லாம் பத்திரமாக இருந்தது.
இதுக்கு என்ன அர்த்தம்?
குடும்ப டாக்டர் கொடுத்த மருந்து, மாத்திரையை சாப்பிடாமல் இருந்ததால் தான் அந்த அம்மா, 90 வயது வரைக்கும் இருந்ததாகவும், அதுவே, தன்னோட நீண்ட ஆயுளுக்கு காரணமாகிறது.
இதை தான், அந்த உயிலில் சொல்லி இருந்தது; கில்லாடி கிழவி!
சொத்துக்களை, தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு அல்லது பூனைகளுக்கு சேர, உயில் எழுதி வைக்கும், 'அச்சு பிச்சு'களும் நிறைய பேர் உள்ளனர். ஆனால், இவர்கள் நம்மூரில் அதிகம் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.