
பா - கே
அலுவலக மதிய உணவு இடைவேளைக்கு பின், ஊழியர்கள் சிலர், நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தனர். சிலர், மொபைல் போனை பார்த்துக் கொண்டிருக்க, இன்னும் சிலர், காதில், 'ஹெட்போன்' மாட்டி, பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். எதையோ கொறித்தபடி, அண்ணாந்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
ஞானானந்தம் பகுதிக்கு, ஆன்மிக கட்டுரைகள் எழுதும், பி.என்.பி., எதையோ மாங்கு மாங்கு என்று எழுதிக் கொண்டிருந்தார்.
'ஐயா, பெரியவரே... ரொம்ப மும்முரமாக என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர். எவ்வளவோ எழுதுகிறீர், ஏதாவது ஒரு கதையை எடுத்து விடுமே, கேட்போம்...' என்றார், லென்ஸ் மாமா.
'ஓய், லென்சு, 'திண்ணை' நாராயணன் இல்லாததால், என்னை வம்புக்கு இழுக்குறீரோ...' என்றவர், சொல்லாவிட்டால் விட மாட்டார் என்று நினைத்தாரோ என்னவோ, கதை சொல்ல ஆரம்பித்தார், பி.என்.பி.,
குதிரையில், நகர் வலம் போன அரசனும், சேவகன் ஒருவனும் ரொம்ப துாரம் சென்று விட்டனர். அரசனுக்கு தாகம் எடுத்தது.
தண்ணீர் எங்கு கிடைக்கும் என, பார்த்தனர். பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லை.
கொஞ்ச துாரத்தில், வேலியில் ஒரு வெள்ளரிப்பழம் தெரிந்தது.
'அதோ, ஒரு வெள்ளரிப் பழம் தெரியுது. அதையாவது பறித்து சாப்பிடலாம்...' என்றான், அரசன்.
'இதோ பறித்து வருகிறேன்....' என்று புறப்பட்டான், சேவகன்.
'அது வெள்ளரிப்பழம் இல்லை...' என்று, ஒரு குரல்.
'யார் அது?' என, திரும்பிப் பார்த்தனர், இருவரும்.
அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தான், பார்வையில்லாத பிச்சைக்காரன். அவன் தான் அப்படிக் குரல் கொடுத்தது.
'இவனுக்கோ பார்வை இல்லை. அது வெள்ளரிப் பழமா, இல்லையா என்பது இவனுக்கு எப்படி தெரியும்?' என, நினைத்த அரசன், 'நீ போய் பறிச்சுக்கிட்டு வா, இவன் ஏதோ தெரியாம சொல்றான்...' என்றான்.
சேவகன் போய் பறித்து வந்தான். அதை சாப்பிட்ட அரசன், கீழே துப்பினான்; ஒரே கசப்பு.
பிச்சைக்காரனிடம், 'இது, வெள்ளரிப் பழம் இல்லை என்பது உனக்கு எப்படி தெரிந்துது?' என, ஆச்சரியமுடன் கேட்டான், அரசன்.
'ஐயா, இது நாலு பேர் வந்து செல்லும் இடம். அது வெள்ளரிப் பழமாக இருந்திருந்தால், வந்தவர்கள் இவ்வளவு காலம் அதை விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அதனால் தான், அது வெள்ளரிப் பழமாக இருக்க முடியாதுன்னு நினைத்தேன்...' என்றான், பிச்சைக்காரன்.
அடுத்தபடியாக தண்ணீருக்கு என்ன செய்யலாம் என, யோசித்தான், அரசன்.
'அரசே, இங்கேயிருந்து நாலு பக்கமும் சாலை போகுது. நான், இப்படியே கிழக்கே போற இந்த பாதை வழியா போய் பார்க்கிறேன். அங்கே ஏதாவது நீர் நிலைகள் இருக்கும்; தண்ணீர் எடுத்து வரேன்...' என்று கூறி புறப்பட்டான், சேவகன்.
'ஐயா, கிழக்கே போனீங்கன்னா, தண்ணீர் கிடைக்காது. தெற்கே போற பாதையில் போனால் தண்ணீர் கிடைக்கும்...' என்றான், பார்வையில்லாத பிச்சைக்காரன்.
அவன் சொன்னபடியே, தெற்கே கொஞ்ச துாரம் போனதும், பெரிய குளம் தென்பட்டது.
'இது எப்படி தெரியும் உனக்கு?' என்று கேட்டான், அரசன்.
'ஐயா, என் உடம்புல சட்டை இல்லை. தெற்கே இருந்து வரும் காற்று, குளிர்ச்சியாக இருந்தது. அதனால், அந்த பக்கம் நீர் நிலை இருக்கும்ன்னு நினைத்தேன்...' என்றான்.
'இப்படிப்பட்ட ஒரு ஆள், அரண்மனையில இருந்தால், ரொம்ப உபயோகப்படுவான்...' என நினைத்து, அவனை குதிரையில் ஏற்றி, அரண்மனைக்கு அழைத்து சென்றான், அரசன்.
தினமும் ஒரு பொட்டலம் சாம்பார் சாதம் அவனுக்கு கொடுக்கும்படி உத்தரவு போட்டான், அரசன்.
ஒருநாள், வைர வியாபாரி ஒருவன், அரண்மனைக்கு வந்தான். அவன் கொண்டு வந்த வைரத்தை வாங்கி இவனிடம் தந்து, சோதிக்கச் சொன்னான், அரசன். இவன் வாங்கி, கையாலே சோதித்துப் பார்த்து, இரண்டு பிரிவாக பிரித்து வைத்தான்.
'இடதுபக்கம் இருக்கிறது எல்லாம், வைரம். வலது பக்கம் இருப்பது கண்ணாடிக்கல்...' என்று கூறினான்.
'எப்படி கண்டுபிடித்தாய்?' என கேட்டான், அரசன்.
'ஒவ்வொரு கல்லையும் எடுத்து, கையில் சிறிது நேரம் மூடி வைத்து பார்த்தேன். நம் உடம்பு சூடு கல்லில் ஏறி இருந்தால், அது வைரம். அப்படி இல்லையெனில், அது கண்ணாடி. இப்படித்தான், அதைக் கண்டுபிடித்தேன்...' என்றான்.
அரசனுக்கு ஆச்சரியம்.
'சரி, இன்று முதல் இவனுக்கு தினமும், ஒரு பொட்டலம் தயிர் சாதமும் கொடுங்க...' என்று உத்தரவு போட்டான், அரசன்.
அப்படியே நடந்தது.
ஒரு நாள் அவனிடம், 'என்னை எல்லாரும் பிச்சைக்கார ராஜா என்கின்றனரே, ஏன்?' என்று கேட்டான், அரசன்.
'அது உண்மை தான். நீ, நிஜமாகவே அப்படித்தான் இருக்கணும்...' என்றான்.
'எப்படி சொல்ற?' என்றான், அரசன்.
'நீ, ராஜ வம்சமாக இருந்திருந்தால், ஆரம்பத்தில் அது வெள்ளரிப் பழம் இல்லை என சொன்னபோதே, என் திறமையை பாராட்டி, உன் கழுத்திலிருந்து மணி மாலையை கழற்றி, பரிசாக கொடுத்திருப்பாய்.
'அது மட்டுமில்லை. ஒரு பொட்டலம் சாம்பார் சாதம், ஒரு பொட்டலம் தயிர் சாதம். இப்படி எந்த ராஜாவும் கொடுக்க மாட்டாங்க...' என்றான்.
அதன்பின், 'ஐயா, நான் பரம்பரை ராஜா இல்லை. உன்னை மாதிரி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவன் தான். முன்பு இருந்த ராஜாவுக்கு ஆண் வாரிசு இல்லாததால், இந்த நாட்டு வழக்கப்படி, அரண்மனை யானை என் கழுத்தில் மாலை போட்டது.
'அதனால், ராஜாவாக ஆயிட்டேன். அவ்வளவு தான்...' என்று உண்மையை கூறினான், அரசன்.
-இப்படி பி.என்.பி., கூறி முடித்ததும், கை தட்டி பாராட்டி, 'அருமையான கதை ஓய்...' என்று சிலாகித்தார், மாமா.
'நம்மூரில், இது மாதிரியான ராஜாக்கள் இருந்தனரா?' என்றேன்.
'ராஜாக்கள் இருந்தனரா என்று தெரியாது. ஆனால், இப்போதுள்ள அரசியல்வாதிகள் பலர் இப்படித்தான் இருக்கின்றனர்...' என்றார், லென்ஸ் மாமா.
ப
கணவரை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் வந்தார், ஒரு பாட்டி.
'டாக்டர், இவரைக் கொஞ்சம் கவனித்து பாருங்கள். யாரையாவது எதிரில் பார்த்துவிட்டால், உடனே பேச ஆரம்பித்து விடுகிறார்...' என்று, கூறினார்.
'அது ஒண்ணும் தப்பில்லையே. தனிமையைத் தவிர்க்க யாரையாவது எதிரில் பார்த்தால் கொஞ்சம் பேசி இருப்பார்...' என்றார், டாக்டர்.
'அப்படி இல்லை டாக்டர். யாராவது மனுஷாளை எதிரில் பார்த்துப் பேசினால் பரவாயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடியை எதிரில் பார்த்தால் கூட, உடனே பேச ஆரம்பித்து விடுகிறார். அதனால் தான், உங்களிடம் அழைத்து வந்தேன்...' என்றார், அந்த பாட்டி.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.