
விக்ரம் மோகன், அரியலுார்: நம் நாட்டில் இயற்கையை ரசிக்க, உங்களுக்கு பிடித்த இடம் எது அந்து?
திருநெல்வேலி, மணிமுத்தாறு அணை, மாலை நேரத்தில், மேற்கு நோக்கி, காரை ஏற்றமாக நிறுத்தி, சூரியன், அக்னி பிழம்பாக, வானத்தில் பல நிறங்களை இறைத்து மறைவதைக் காண, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்!
* எல்.சுரேஷ், மதுரை: எது வரப்பிரசாதம்?
தன்னலமற்றவர்களின் வசத்தில் பணமிருந்தால் அது ஒரு வரப்பிரசாதம்... சுயநலக்காரர்களின் கைகளில் பணமிருந்தால் அது ஒரு சாபக்கேடு!
* ஏ.கே.சஞ்ஜீவிநாதன், கோபி, ஈரோடு: அரசு விளம்பரம், 'தினமலர்' நாளிதழில், மெல்ல எட்டிப் பார்க்கிறதே... மாற்றமா?
மாற்றம் நல்லது தானே!
சி.சந்திரபாலன், நெல்லை: அந்துமணிக்கு, பதவி உயர்வே கிடையாதா... கடைசி வரை, ஆபீஸ் பாய் வேலை தானா?
உங்களின் இந்தக் கடிதத்தை, பொறுப்பாசிரியரிடம் கொடுத்து விட்டேன்!
த.சிந்தாமணி, வெண்கரும்பூர், கடலுார்: உங்களின் மீதமுள்ள டிரஸ்சை யாருக்குக் கொடுப்பீர்கள்?
என் டாக்டருக்கு, 10; மற்றவை, நண்பர்களுக்கு!
எஸ்.மனோகரன், ராமநாதபுரம்: 'தினமும், தினமலர் - வாரமலர் இதழ், அந்துமணிக்கு கடிதம் எழுதி, அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்...' என்று, என் மனைவி கோபித்துக் கொள்கிறாரே...
நீங்களும், உங்களைப் போன்ற வாசகர்களும் என் முதலாளிகளாச்சே! அப்படியெனில், உங்கள் கடிதங்களைப் படிப்பது, அன்பில் தானே... தொந்தரவு எங்கே வந்தது?
டி.எஸ்.வி.ஸ்ரீராம், புதுச்சேரி: தங்கள் உடையில், 'சென்ட்' அடித்துக் கொள்ளும் பழக்கம் உண்டா?
'ப்ரூட்' அடித்துக் கொள்வேன்; அக்குளில், 'பாடி ஸ்பிரே' மற்றும் சட்டையில், 'சென்ட்!'
ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்: கிட்டத்தட்ட, 50 ஆண்டு திராவிட ஆட்சிக் காலத்தில், தமிழகம் எதில் முன்னேறியுள்ளது?
மது அருந்துவோருக்கு, மிகவும் பிடித்த மாநிலமாக மாறியுள்ளது!