
நகரின் மையத்திலிருந்த அந்த கல்யாண மண்டபத்தின் முன், 'சந்தோஷ் வெட்ஸ் சந்தியா' பெயர் பலகை மின்னியது. அழகான சந்தோஷும், தேவதை கணக்காய் இருந்த சந்தியாவும், ஜோடியாய் நிற்க, கீழே நண்பர்களின் புகைப்படங்கள்.
மண்டபத்தின் உள்ளே சந்தோஷும், சந்தியாவும் உட்கார்ந்திருந்தனர்; போட்டோவில் பார்த்ததை விட, இன்னும் அழகாக இருந்தனர்.
நகரின், இரண்டு ஜவுளி கடைகளையும், நாலு டிபார்ட்மென்ட் ஸ்டோர்களையும் வைத்திருக்கும் பணக்கார, 'பார்ட்டி' பரந்தாமனின் ஒரே மகள், சந்தியா.
சொர்க்கத்தின் உச்சியில் இருந்தான், மாப்பிள்ளை சந்தோஷ். வருங்கால மனைவியின் அழகை பார்த்து, பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
'என்ன மச்சான், ரொம்ப சந்தோஷமா இருக்க போல...' திடீர் குரல், அவனை பூமிக்கு அழைத்து வந்தது.
அவனது கல்லுாரி கால தோழன், கணேஷ். இப்போதும் தொடரும் நட்பு.
''வாடா, இவ்வளவு, 'லேட்'டாவா வருவே?''
''சாரி மச்சான், கிளம்பறப்ப திடீர் வேலை. அதான் முகூர்த்தத்துக்கு முன்னாடி வந்துட்டேன்ல?''
''உனக்கு எப்பவும் வேலை தான்.''
''ஆமா, எங்க நம்ம மற்ற நண்பர்கள் எல்லாம்?''
ஐந்து பேர் கொண்ட குரூப் அது.
''எல்லாம் உள்ளே தான் இருக்காங்க,'' அவன் சொல்லும்போதே, அனைவரும் வெளியில் வந்தனர்.
''அப்புறம் மச்சான், நம் குரூப்லயே, சம்சார சாகரத்துல இதுவரைக்கும் விழாம, நீ மட்டும்தான் இருந்த. இப்ப நீயும் விழுந்துட்ட,'' என்றான், ஒருவன்.
''விழலடா, ஸ்டெடியா நிக்கிறான். புடிச்சது என்ன சாதாரண இடமா, புளியங்கொம்பால்ல புடிச்சிருக்கான்.''
''அதானே, அவன் முகத்த பார்த்தியாடா... எவ்வளவு சந்தோஷமா இருக்கான்,'' இன்னொருவன் சொன்னான்.
''அதெல்லாமில்ல, சும்மா இருங்கடா,'' என்று சந்தோஷ் சொன்னாலும், சந்தோஷத்தை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.
சந்தோஷ் அருகே நெருங்கிய கணேஷ், யாருக்கும் கேட்காத ரகசிய குரலில், 'சந்தோஷ், கல்யாணத்துக்கு, ப்ரீத்தா வருவாளா?' என்றான்.
ப்ரீத்தா என்றதும் சந்தோஷின் முகம் மாறியது. இதுவரை சந்தோஷமாக இருந்த அவன் முகம் பேயறைந்தது போலானது.
''சே சே, அவள் வர மாட்டா. என் மேல செம கடுப்புல இருக்கா.''
''அவளுக்கு பத்திரிகை கொடுத்தியா?''
''இல்லப்பா, அவளுக்கு எதுக்கு தரப் போறேன்.''
''அப்ப உனக்கு கல்யாணம் நடக்கறது அவளுக்கு தெரியாதுன்னு சொல்லு.''
''அப்படி சொல்ல முடியாது, எப்படியும் தெரிஞ்சிருக்கும். அவள் வேலை செய்யிற கம்பெனியில என் நண்பர்கள் வேலை செய்யிறாங்க. அவங்க மூலமா தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கலாம்.''
முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்ததால், அதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது.
சந்தோஷின் மனதில், ப்ரீத்தாவின் நினைவுகள் வந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தது.
ப்ரீத்தா, அவன் முன்னாள் காதலி. மூன்று ஆண்டு, உயிருக்குயிராய் காதலித்தனர்.
கம்பெனி ஒன்றில், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில், அக்கவுன்ட்ஸ் மேனேஜராக இருந்தான், சந்தோஷ்.
சப்ளையர் கம்பெனி ஒன்றில், அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்டாக இருந்தாள், ப்ரீத்தா.
கம்பெனி வேலை விஷயமாக போய் வந்ததில் பழக்கம். ஒருமுறை இருவரின் அக்கவுன்ட்ஸ் ஸ்டேட்மென்டும், 'டேலி' ஆகவில்லை.
அந்த கம்பெனியின் அக்கவுன்ட்ஸ் மேனேஜர் மாதவன், இவனை ப்ரீத்தாவிடம் தான் அனுப்பினான்.
'எங்க அக்கவுன்ட்ஸ் செக் ஷன் ப்ரீத்தாகிட்ட ஜாயின் பண்ணி விடறேன். உங்களுக்கு அவங்க தெளிவா விளக்குவாங்க. உங்க கம்பெனி ஸ்டேட்மென்ட் தான் தப்பு...' என்றான், மாதவன்.
அதே போல், ப்ரீத்தாவிடம் ஜாயின் பண்ணி விட, அவள், இவனுக்கு அழகாக விளக்கினாள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லி, எந்த இடத்தில் அவன் தவறு செய்துள்ளான் என்றதும், பிரமித்துப் போனான்.
தவறு சந்தோஷிடம் தான்.
'ஆமா மேடம், உங்க ஸ்டேட்மென்ட் சரி. நாங்க தான் தப்பு பண்ணி இருக்கோம்...' என்று அவளை பார்த்து சொன்னான்.
அப்போது தான் அவளை முழுதாய் பார்த்தவன், பிரமித்தான். தேவதை போல் அப்படி ஒரு அழகு. அவன் மனதை என்னமோ செய்தது.
அவன் பார்வையை தாங்க முடியாமல், அவள் தலையை குனிந்து கொண்டாள்.
தொடர்ந்த கம்பெனி சந்திப்புகளில் அவள் நம்பர் வாங்கி, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்'கில் பேச துவங்கி, நட்பு, காதலானது.
ப்ரீத்தாவுக்கு அம்மா மட்டும் தான். நடுத்தர குடும்பம்.
அவர்களின் காதல் செழித்தோங்கிய போது தான், நண்பனின் திருமணம் ஒன்றில் சந்தோஷை பார்த்தாள், சந்தியா. சந்தோஷை காதலிக்க துவங்கி, அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என, பிடிவாதம் பிடித்தாள். சந்தோஷ் வீட்டுக்கே, அவள் அப்பா வந்து விட்டார்.
பணக்கார சம்பந்தம் வந்ததால், நடுத்தர ப்ரீத்தாவையும், அவள் காதலையும் மறந்தான், சந்தோஷ். கொஞ்சம், கொஞ்சமாக அவளை புறக்கணித்தவன், ஒரு கட்டத்தில், 'இது ஒத்து வராது, ப்ரீத்தா. எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. நாம பிரிஞ்சுடலாம்...' என்றான்.
அடுத்த மாதமே, சந்தியாவுடனான கல்யாணம் நிச்சயமாகி, இதோ கல்யாணத்தில் நிற்கிறது.
வந்தவர்களிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த, சந்தோஷ், தற்செயலாக மண்டபத்தின் வாசற்படி பக்கம் பார்த்தான்; தலையில் இடி விழுந்தவன் போல், அதிர்ந்து போனான்.
கையில் பரிசுடன் வந்து கொண்டிருந்தாள், அவன் முன்னாள் காதலி, ப்ரீத்தா.
இவ்வளவு நேரம் மனதிலிருந்த சந்தோஷமும், பரவசமும் தொலைந்து போனது. சந்தோஷின் மனதில் பயமும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. இதயம் படபடப்பாய் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
'இவள் எதுக்கு இங்க வர்றா, பத்திரிகை கூட வைக்கலையே, பிரச்னை பண்ணி கல்யாணத்தை நிறுத்த வருகிறாளா? கையில என்ன, நாங்க மொபைல் போன்ல எடுத்த புகைப்படத்தை எல்லாம் பதிவிறக்கம் செய்து, 'பிரின்ட்' போட்டு எடுத்துட்டு வர்றாளா?' அவன் மனம் பதை பதைப்புடன் யோசிக்க துவங்கியது.
முகம் எங்கும் வியர்வை ஊற்ற, பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க, சிரமப் பட்டான்.
இவன் முக மாற்றத்தை கவனித்து, ''என்ன, உங்க முகம் வாடிப் போயிடுச்சு. இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் முகத்துல இல்ல. ஏதோ பதற்றமா இருக்குற மாதிரி தெரியுது?'' என்றாள், சந்தியா.
''நோ ஐயம் நார்மல்...'' என்று அவன் சொன்னாலும், எங்கே தன் பயம் சந்தியாவுக்கு தெரிந்து விடுமோ என யோசித்தான்.
அவளை கவனித்து விட்டான், கணேஷ்.
''என்னடா சந்தோஷ், இவளுக்கு தான் பத்திரிகை தரலையே. எதுக்குடா வந்தா? மண்டபம் எப்படி தெரியும், நேரத்துக்கு கரெக்டா வந்துருக்காளே,'' என்றான்.
''நான் தான் சொன்னேனே, அவங்க ஆபீஸ்ல இருக்குற என் நண்பர்களுக்கு பத்திரிகை வச்சேன். அவங்க யாராவது சொல்லியிருக்கணும். ஆனா, எதுக்கு வந்தாள்ன்னுதான் தெரியலடா. பயமா இருக்கு. மனசுல இருந்த சந்தோஷம் எல்லாம் போச்சு,'' என்றான்.
''பயப்படாம இரு, எக்காரணம் கொண்டும், சந்தியாவுக்கு தெரிஞ்சுட கூடாது.''
அவனால் நார்மலாய் இருக்க முடியவில்லை.
நலங்கு வைக்க கூப்பிட்டனர். நலங்கு சந்தனம் பூசும்போது, சந்தனம் ஒட்டவே இல்லை. வடிந்த வியர்வையில் எல்லாமே வழிந்தது.
நலங்கு வைத்த பெண் ஒருத்தி, ''என்ன, மாப்பிள்ளைக்கு இப்படி வேர்க்குது?'' என, ஜோக் அடித்தாள்.
''கல்யாணம் ஆகப் போவுதுல்ல. பொண்டாட்டிய நினைச்சு இப்பவே பயப்பட ஆரம்பிச்சுட்டார்,'' இன்னொரு பெண் பதிலுக்கு காமெடி செய்ய, அனைவரும் சிரித்தனர்.
சந்தோஷுக்கு, எதிலும் மனம் ஒட்டவில்லை.
அவன் பயமோ, பதற்றமோ குறையவில்லை. அவன் கண்கள், மண்டபத்தில் சேரில் அமர்ந்திருந்த ப்ரீத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தது.
அடுத்து, புரோகிதர் இருவரையும் பக்கத்தில் உட்கார வைத்து மந்திரம் சொல்ல ஆரம்பிக்க, சரியாக சொல்ல முடியாமல் தடுமாற ஆரம்பித்தான்.
''என்னாச்சு உங்களுக்கு... மந்திரம் கூட சரியா சொல்லாம, சரியா சொல்லுங்கோ,'' என்றார், புரோகிதர்.
அவனை முறைத்த சந்தியா, ''சரியா சொல்லுங்க,'' என்றாள்.
அடுத்து மாலை மாற்றுதல், மற்ற சடங்குகள் எதையும் அவனால் நிம்மதியாய் செய்ய முடியவில்லை. ஒருவித பயம் கலந்த பதற்றத்துடனே இருந்தான்.
எல்லாவற்றையும் முன் வரிசையில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள், ப்ரீத்தா.
ஒரு வழியாய் தாலி கட்டிய பின்தான், அப்பாடா என்றிருந்தது, சந்தோஷுக்கு.
எல்லாரும் பரிசு பொருட்களை கொடுத்து, சாப்பிட போக, நிதானமாய் வந்தாள், ப்ரீத்தா. எடுத்து வந்த பரிசு பொருளை அவனிடம் கொடுத்து, இருவரையும் கை கொடுத்து வாழ்த்தினாள்.
''உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். காத்திருக்கிறேன். முடிச்சுட்டு வாங்க,'' என்று சொல்லி, கீழிறங்கி போய் விட்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து, ப்ரீத்தா முன் நின்றிருந்தான், சந்தோஷ். கைகளை கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
''நான் வருவேன்னு நீ எதிர்பார்க்கலே இல்ல? அதிர்ச்சியா இருக்கும். உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே. நீ கூப்பிடாத கல்யாணத்துக்கு வந்ததுக்கு காரணம் இருக்கு, சந்தோஷ்.
''சும்மா இருந்த எனக்குள்ள காதல் ஆசையை துாண்டி விட்டு, காதல்ங்கிற பேர்ல என்னை ஏமாத்தின உன்னை, தண்டிக்க நினைச்சேன்; அதுக்குதான் வந்தேன்.
''உன்னை என்னால எப்படி தண்டிக்க முடியும்ன்னு யோசிக்கிறியா? இதோ, இந்த ரெண்டு மணி நேரமா அனுபவிச்சுட்டு இருந்தியே நரக வேதனை, அதான் உனக்கு நான் கொடுத்த தண்டனை. கல்யாணம்ங்கிறது ஒருமுறை வர்றது. மணமேடையில் எவ்வளவு சந்தோஷமா இருக்கணும்?
''ஆனா, இந்த நிமிஷம் வரைக்கும் உன்னால சந்தோஷமா, நிம்மதியா இருக்க முடியல. கட்டிக்கப் போற பொண்ணுகிட்ட உண்மையை சொல்லி, கல்யாணத்தை நிறுத்திடுவாளோங்கிற பயத்துலயும், பதற்றத்துலயும் அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்தை இழந்துட்டு, நரகத்துல இருந்த மாதிரி இருந்தேல்ல, அதான் நான் உனக்கு கொடுத்த தண்டனை.
''என்னால இந்த கல்யாணத்தை நிறுத்தி, உன்னை என் கழுத்துல தாலி கட்ட வைக்க முடியும். ஆனா, செய்யல. ஏன் தெரியுமா, உன்கிட்ட உண்மை இல்லை; உண்மையான காதல் இல்லை. என்னை வேணாம்ன்னு புறக்கணிச்ச நீ, எனக்கு எப்பவுமே வேணாம்.
''காதல் நாடகமாடி என்னை ஏமாத்தின நீ, என்ன பொறுத்தவரை செத்துட்ட. ஆனா, நான் உன்னை உண்மையா காதலிச்சேன். உண்மையா காதலிப்பவர்களுக்கு, தான் காதலிச்சவரின் சந்தோஷம் தான் முக்கியம்.
''எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்ன்னு நினைப்பாங்க. தன்னோட காதலன், காதலிய விட்டுக் கொடுப்பாங்க. நான் அப்படிதான் உன்னை அவளுக்கு விட்டுத் தர்றேன். பொய்யா காதலிக்கிறவங்க தான் தன்னோட சுயநலத்துக்காக காதலுக்கு துரோகம் பண்ணிட்டு, உன்னை மாதிரி ஓடி போவாங்க.
''கடைசியா ஒண்ணு சொல்ல ஆசைப்படறேன். இதோ, இவளுக்காச்சும் உண்மையா இரு. இவளை விட பணக்கார பொண்ணு கிடைச்சா, இவளையும் விட்டுட்டு போயிடாத,'' என்று சொல்லி, கம்பீரமாய் மண்டபத்தை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள், ப்ரீத்தா.
அவளின் பேச்சு, செருப்படி வாங்கியது போலிருந்தது சந்தோஷுக்கு.
கே. ஆனந்தன்