
பா - கே
அலுவலகம்...
'வர வர செய்திதாள்களை பிரிக்கவே தயக்கமா இருக்கு. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை என, ரத்த பூமியாக மாறி வருகிறது, நம் தமிழக தலைநகர் சென்னை. எப்ப, எங்கே, யாரை போட்டு தள்ளுவாங்களோன்னு பயமாக இருக்கிறது. நிலைமை இப்படியே போனால், நாம் கூட சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளும் நிலை வந்துவிடுமோ என்று தோன்றுகிறது...' என்றார், 'திண்ணை' நாராயணன்.
அருகிலிருந்த மூத்த செய்தியாளர், இதைக் கேட்டதும், 'நீர் சொல்வது உண்மை தான். துப்பாக்கி என்றதும், சமீபத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தேர்தல் பிரசாரத்தின் போது சுடப்பட்ட செய்தியை கேள்விப்பட்டோம், அல்லவா! நல்ல வேளையாக, குண்டு அவரது வலது காதை உரசியபடி சென்றதால் உயிர் பிழைத்தார்.
'சுட்டவர் பயன்படுத்தியது. 'செமி ஆட்டோமேடிக்' துப்பாக்கி.
'அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பள்ளிக் குழந்தைகளிடம் கூட பரவியுள்ளது. அடிக்கடி பள்ளிகளில் கூட துப்பாக்கி மூலம், சுட்டுக்கொல்வது சகஜமாகி வருகிறது.
'தற்போதைய, அமெரிக்க அதிபர் பைடன், இதற்கான கடுமையான சட்டங்களை கொண்டுவரவில்லை என, பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
'உண்மையில் இன்றைய அதிபரின் மகன், ரகசியமாக ஒரு துப்பாக்கியை வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 'அவர், தன் சுய பாதுகாப்புக்காக வாங்கியுள்ளார்...' என, வழக்கை முடித்துவிட்டது, நீதிமன்றம்.
'அமெரிக்காவில், 2023ம் ஆண்டு கணக்குப்படி, 42 சதவிகித குடும்பத்தினர் துப்பாக்கி, 'லைசென்ஸ்' வாங்கி வைத்துள்ளனர்.
துப்பாக்கி கலாச்சாரத்தால், 2023ல் மட்டும், 4,563 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
'இந்நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி, 'லைசென்ஸ் கேட்டு, பதிவு செய்வது ஒவ்வொரு ஆண்டும் கூடி வருகிறது. 2010ல், 8.3 லட்சமாக இருந்தது, 2023ல், 35.7 லட்சமாக உயர்ந்துள்ளது.
'அமெரிக்காவின், மொத்த மக்கள் தொகையில், 58 சதவீதம் பேர், துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க, மேலும், கடுமையான சட்டங்கள் தேவை என கூறியுள்ளனர். 26 சதவீதம் பேர், இப்போதுள்ள நிலைமையே தொடர்ந்தால் போதும் என்கின்றனர்.
'முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 'நான் ஆட்சிக்கு வந்தால், எந்த துப்பாக்கியை பயன்படுத்தி என்னை சுட்டார்களோ, அந்த துப்பாக்கி தயாரிக்கும் கம்பெனிக்கு தடை விதிக்கப்படும்...' என கூறியுள்ளார். இதற்கிடையே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவமும்
அரங்கேறியுள்ளது.
'டொனால்டு டிரம்ப் சுடப்பட்ட உடனே, சீனாவில் ஆன்-லைன் வர்த்தகத்தில், விதவிதமான டீஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்தன. இவை, 750 ரூபாய் முதல் 1,600 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப் பட்டிருந்தன.
'அதில், ஷூட்டிங் மேக்ஸ் மி ஸ்ட்ராங்கர் ஷூட்டிங் செய்வதால் மேலும் என்னை வலுவுடையவனாக்குகிறது!' என்ற வாசகங்களுடன், மார்க்கெட்டில் சக்கைப் போடு போடுகின்றன.
'மேலும், 'புல்லட் ப்ரூப்' மற்றும் 'லெஜன்ட்ஸ் நெவர் டை' போன்ற வாசகங்களுடனும், டீஷர்ட்டுகள் ரெடி...' என்று கூறினார், மூத்த செய்தியாளர்.
தீமையிலும் ஒரு நல்லது என்று இதைத்தான் சொல்கிறார்களோ!
ப
பிரபல எழுத்தாளர், பிலோ இருதயநாத் எழுதிய, 'இமயமலைவாசிகள்' என்ற கட்டுரையில் திபெத்தியரிடையே நுாதன பழக்கங்கள் பற்றி விவரித்துள்ளார். அது:
திபெத்தியர்கள் பயன்படுத்துவர். குளிர் பிரதேச பகுதியில், சீக்கிரம் சூடு பிடிக்க, அலுமினிய பாத்திரங்கள் தான், 'பெஸ்ட்' என்கின்றனர்.
நாம் அவர்கள் வீட்டிற்கு சென்றால், முதலில் ஒரு தட்டில் மிட்டாய்களை வைத்து வரவேற்பர். மிட்டாய்களில் ஒன்றிரண்டை எடுத்து சாப்பிட்டால் தான் பேசவே ஆரம்பிப்பர்.
திபெத்திய சம்பிரதாயப்படி, மூக்கு கண்ணாடிக்கு அனுமதி இல்லை. ஆனால், இன்று பலர் கண்ணாடி பயன்படுத்த துவங்கி, இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைத்து விட்டனர்.
மற்றொரு நுாதன பழக்கம் வயதாவதற்குள், ஐந்தாறு முறையாவது தங்கள் பெயரை மாற்றி வைத்து கொள்வர்.
தலாய்லாமா இவர்களை காண, கர்நாடகாவின், 'பையில் குப்பே'க்கு வந்தபோது, பலர் மொட்டையடித்து, புது பெயர் சூட்டிக் கொண்டனர்.
அடிபட்ட அல்லது நோய்வாய்பட்ட குழந்தைகளுக்கு, புதுப் பெயர் சூட்டி விடுவர். இவர்களை தேடி வரும் எமன், 'நாம் தேடி வந்தது இவன் இல்லை... என -முடிவு செய்து, நேரம் கடந்ததால் சென்று விடுவானாம்; அத்துடன் திரும்ப வரமாட்டானாம். எப்படி நம்பிக்கை ?
பெண்களில் பலர், கைகளில் வெள்ளிக் காப்பு அணிந்திருப்பர்.
இவர்களுடைய கலாசாரத்தின்படி, பெண்ணின் வயது, ஆணின் வயதை விட கூடுதலாக இருக்கும்படிதான் திருமணம் செய்வர்.
தமிழ்நாட்டில் சில பிரிவினரிடம், திருமணத்திற்கு முன் காசி யாத்திரை நடக்கும். 'திருமணமே வேண்டாம்...' என, குடையுடன் காசியை நோக்கி செல்வார், மாப்பிள்ளை.
பெண்ணை பெற்றவர், 'அவரை வேண்டவே வேண்டாம். என் மகளை மணந்து, நிம்மதியாய் வாழலாம் வாருங்கள்...' என, திரும்ப அழைத்து வருவார். அப்போது, மாலை மாற்றல் நடக்கும்.
திபெத்திலும் இந்த வழக்கம் உண்டு. மணமகன் குதிரையில் ஏறி, மணமகள் வீடு சென்று, 'இறங்க மாட்டேன்...' என கூறுவார். மணமகளை பெற்ற தந்தை, அவரிடம் பேசி, இறக்கி அழைத்துச் செல்ல வேண்டும்.
அடுத்து, நம்மூரில் மாலை மாற்றல் நடப்பது போல், திபெத்தில் மணிகள் கோர்க்கப்பட்ட மாலைகளை ஒருவருக்கு ஒருவர் அணிவிப்பர். பிறகு திருமணம் நடைபெறும்.
திபெத்திய திருமணங்களிலும் தாலி உண்டு.
திபெத்தியர்கள், நம்மிடம் எதையாவது கொடுக்க விரும்பினால், அதை தங்கள் நாக்கை வெளியே நீட்டியபடி கொடுப்பர். அதை வாங்குபவரும், நாக்கை நீட்டிக் காட்டி பிறகு பெற வேண்டும். இது, அன்பின் பிரதிபலிப்பாம்.
குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு, திபெத்தின் எருமை வாலை தனியாக எடுத்து, சுத்தம் செய்து, அதில் சூப் செய்து தருவது வழக்கம்.
பிரசவித்து, 5 -10 நாட்கள் ஆன பின், நெய்யை கொதிக்க வைத்து, அதனுடன் சில மூலிகை பொருட்களை கலந்து, மது போன்ற பானத்தை செய்து தருவராம்.
ஒரே சமயத்தில் மயானத்தில், ஆண் பெண் பிணம் என, இரண்டும் வந்து விட்டால், முதலில் பெண் பிணத்தை துண்டு துண்டாக வெட்டி, அதை கழுகு மற்றும் வேறு சில பறவைகளுக்கு போட்டுவிடுவர். அதை சாப்பிட்டு முடித்ததும் தான் ஆண் பிணத்தை வெட்டி, பறவைகளுக்கு சாப்பிட போடுவராம்.
இந்த முறையை மாற்றி, முதலில் ஆண் பிணத்தை பறவைகளுக்கு போட்டால், பறவைகள் சாப்பிடும். ஆனால், அடுத்து வரும் பெண் பிணத்தை சாப்பிடாமல் சென்று விடுமாம்.
இதை தவிர்க்க, தற்போது இரண்டையுமே புதைக்கவோ, எரிக்கவோ செய்கின்றனர்.

