sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 08, 2024

Google News

PUBLISHED ON : செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

'ஜப்பான் உட்பட பல நாடுகளில், இந்தியாவில் சில மாநிலங்களில், அதீத மழை பொழிவால் ஏகப்பட்ட உயிர்களும், பொருட்களும் சேதமாகி விட்டதே... பெரும்பான்மையான நிலபரப்பு கடலுக்குள் மூழ்கி விடுமோ...' என்றார், கலவரமாக உ.ஆசிரியர் ஒருவர்.

'அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடந்து விடாது. மாயன் காலண்டர்படி, 2000ம் ஆண்டில், உலகம் அழிந்து விடும் என்றனர்.

'அடுத்து, புவி வெப்பமடைவதால் பனிக்கட்டிகள் உருகி, பல பகுதிகள் கடலில் மூழ்கி விடும் என்றனர்; 'கொரோனா'வில் அழியும் என்றனர். இதுவரை அப்படி எதாவது நடந்ததா? இப்ப எதற்கு இந்த தேவையில்லாத ஆராய்ச்சி எல்லாம்...' என்று, கடுகடுத்தார், லென்ஸ் மாமா.

'உலகம் எப்படி அழியும் என்ற கேள்வி சமீபகாலமாக, சாமானியர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவருக்குமே உள்ளது. இதற்கான பதில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர். இதுபற்றி விரிவான கட்டுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். அது என்னென்னா...' என்று கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்:

அணு ஆயுதப் போரால் பூமி அழிந்து விடும் என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், 'கோவிட்' போன்ற வைரஸ் தொற்றால் உலகம் அழிந்து விடும் என்கின்றனர். ஆனால், அண்மைக் காலங்களில், இன்னொரு கருத்தும் உலா வரத் துவங்கியுள்ளது.

மேற்கூறிய இரண்டு வழிகளிலும், உலக அழிவு இல்லை. பூஞ்சையால் தான் உலகம் அழியும். குறிப்பாக, உலகிலுள்ள மற்ற உயிரினங்களை விட, மனிதர்களின் அழிவு அபரிமிதமானதாக இருக்கும் என்கிறார், நுண்ணுயிரியலாளர், ஆர்டுரோ காஸடேவால்.

'லாஸ்ட் ஆப் அஸ்' என்ற, 'டிவி' தொடர் ஒன்றில், பூஞ்சை பாதிப்பு குறித்து காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. அதேபோல், 'அபோகாலிப்டிக்' என்ற பிரபல தொடரில் மிகப்பெரிய பூஞ்சைத் தொற்று நோய், மனித குலத்தின் பெரும்பகுதியை அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதை, கற்பனையாக உருவாக்கியிருப்பர்.

பூஞ்சை வைரஸ், 'கார்டிசெப்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள், 'ஜாம்பி' போன்ற உயிரினங்களாக மாறுவர்.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் என்ற பொது சுகாதாரப் பள்ளியில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆன, ஆர்டுரோ காஸடேவால், 67 வகையான பூஞ்சைகள், மனித குலத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.

இவரது ஆய்வு குறித்து, அண்மையில் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. அதில், பூஞ்சையால் ஏற்படும் அழிவுகள் குறித்த முக்கிய விஷயங்களை, இவர் விவரித்துள்ளார்.

தற்போது, ஒரு நபரை, 'ஜாம்பி'யாக மாற்றக்கூடிய ஒரு பூஞ்சை பற்றி உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், புதிய மற்றும் ஆபத்தான பூஞ்சை நோய் கிருமிகளை, சரியான நேரத்தில் நாம் பார்ப்போம் என்பதில் சந்தேகமில்லை என, எச்சரித்துள்ளார்.

கால நிலை மாற்றத்தின் விளைவாக, பூஞ்சைகள், மனித குலத்தின் மீது, புதிய நோய்களை கட்டவிழ்த்து விடும். சில பூஞ்சைகள், முன்னோடியில்லாத வழிகளில், இன்னும் பல மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும், புதிய நோய்களை ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பனிக் கண்டத்தில், எரிபொருள் படிவத்திற்காக, ஆயிரக்கணக்கான அடி ஆழத்திற்கு துளையிட்டு வருவதாக, ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர், விஞ்ஞானிகள். இதனால், உறைந்த நிலையில் இருக்கும் பல ஆபத்தான வைரஸ்கள் வெளி வரலாம் என, அஞ்சப்படுகிறது.

இதில், 'ஜாம்பி' வகை பூஞ்சைகளும் இருக்கலாம். இவ்வகை பூஞ்சையின் தோற்றம், பண்டைய போலியோ வகை நோய்களின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும் என, சந்தேகிக்கின்றனர், விஞ்ஞானிகள்.

- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.

'இதெல்லாம் நடக்க, பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். இப்பவே ஏன் அதுபற்றி யோசிக்கணும். எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கான வழி இருக்கிறதா என்று யோசிக்கலாம்...' என்றார், லென்ஸ் மாமா.



எப்போதும் ஜெயிக்க, 25 டிப்ஸ்:

1.மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2.ஆரோக்கியம் தராத உணவு வகைகள், எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3.உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4.வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில், எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்.

5.முடிந்தவரை கடன்களை கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6.விடியும் முன் எழுந்து விடுங்கள். ஒரு நாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7. குறிப்பாக, 30 வயதை கடக்கும் போதே, மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாக குறைத்து விடுங்கள்; முடிந்தால் தவிர்த்து விடவும்.

8.எக்காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்காதீர்.

9.நிற்கும்போது, நேராக நில்லுங்கள்; பேசுகையில், கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10.புன்னகை முகமும், இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாக இருக்கட்டும்.

11.வாரம், மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்தவரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது, அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.அரட்டை பேச்சுக்களையும், அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்.

15.மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள்.

16.உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள், முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17.குடும்பம் என்ற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18.மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும், தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19.மற்றவர்களை பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத்திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21.உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ, நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22.உங்கள் திறமைகளை நீங்களே விபரித்துக் கொண்டிருக்காமல், உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23.மேடை மற்றும் கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24.தண்ணீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25.உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும், பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us