sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 17, 2024

Google News

PUBLISHED ON : நவ 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

சமீபத்தில் காலமான பிரபல தொழிலதிபரான, ரத்தன் டாடா பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார், 'திண்ணை' நாராயணன்.

அதை ஆமோதித்தபடி இருந்த மூத்த செய்தியாளர், 'மறைந்த டாடா, பார்சி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரியுமா? அவரது இறுதி சடங்கை, 'டிவி'யில் பார்க்க முடியலை...' என்றார்.

'யாரும் பார்த்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஏனெனில், பார்சி இனத்தவர்களின் ஈம சடங்கு, வித்தியாசமானது. நம் முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பெரோஸ் கூட, பார்சி இனத்தவர் என்று கேள்விப்பட்டுள்ளேன்...' என்றார், லென்ஸ் மாமா.

'உண்மை தான்...' என்று, தொடர்ந்தார், நாராயணன்:

இந்தியாவில், பார்சி இனத்தவர் மிகவும் சிறுபான்மையினராகவே உள்ளனர். ஆனால், இந்தியாவின் வர்த்தகத்தை ஆட்டிப்படைக்கும் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக திகழ்கின்றனர்.

பிரபல சுதந்திர போராட்ட வீரர் தாதாபாய் நவுரோஜி, மும்பையின் பிரபல ஹோட்டலான தாஜ் ஹோட்டல் உரிமையாளர் ஜாம்ஷெட்ஜி நுசர்வான்ஜி டாடா, இந்தியாவின் முதல் காட்டன் மில் அதிபர் காஸ்வாஜி நானாபாய் தாவர், மேடம் காமா போன்றோர், பார்சி இனத்தை சேர்ந்த பிரபலமானவர்கள்.

மேலும், இயற்பியல் வல்லுனர் ஹோமி பாபா, இந்திய ராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா, தொழில் அதிபர்களான கோத்ரெஜ் மற்றும் வாடியா போன்றோரும் பார்சி இனத்தவரே.

எவருக்கும் அஞ்சாத வீராங்கனையாக, சுதந்திர போராட்ட களத்தில் செயல்பட்டார், மேடம் காமா. இவர் அனுப்பிய துப்பாக்கியை கொண்டு தான், ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார், வாஞ்சிநாதன். பிரபல பத்திரிகையான, 'பாம்பே சமாச்சார்' பார்சிகளுக்கு உரியது.

சென்னையில், கடந்த 1795ம் ஆண்டு காலகட்டத்தில் காலடி வைத்தனர், பார்சி இனத்தவர். இந்தியாவில், இன்று, 300 பார்சி குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. சென்னையில் வாழ்ந்த பார்சி பிரிவைச் சேர்ந்த, பிரோஜ் கிளப்வாலா, தன் மகன் இறந்தபோது சடங்கு செய்வதற்காக அக்னி கோவில் இல்லையே என வருந்தினார்.

பொதுவாக, பார்சி இனத்தவர்கள், நெருப்பை வணங்க கூடியவர்கள். நெருப்பே ஆதி தெய்வம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.

பிரோஜ் கிளப்வாலா, தன் சொந்த பணத்தில், சென்னையில், ஓர் இடம் வாங்கி, அதில் நெருப்புக் கோவில் கட்டி, அதை பார்சி இன மக்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளார். இந்த அக்னி கோவிலில், 100 ஆண்டுகளாக நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்பு கோவில், இது மட்டும் தான்.

பார்சிகளின் உடலை அடக்கம் செய்யும் முறை, மிக விசித்திரமானது. இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்பது, அவர்களின் நம்பிக்கை. ஆகவே, இறந்தவர்களின் உடலை, கழுகுக்கு இரையாக வைத்து விடுவர்.

அப்படி, இறந்த உடலை கொண்டு போய் வைக்கும் கட்டடத்திற்கு, டாக்மா அல்லது டவர் ஆப் சைலன்ஸ் என்று பெயர். இதற்கு பார்சிகள் சொல்லும் விளக்கம், 'இறந்த உடலை புதைப்பதால், மண் மாசுபடுகிறது; எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. இறந்த பிறகு, இந்த பூமியை மாசுபடுத்தக் கூடாது என்ற காரணத்தால், அவற்றை கழுகுக்கு உணவாக தந்து விடுகிறோம்...' என்கின்றனர்.

மும்பையில், இதுபோன்ற, டவர் ஆப் சைலன்ஸ் என்ற, இரண்டு அடுக்கு கட்டடம், மலபார் பகுதியில் இருக்கிறது. இரண்டாம் அடுக்கில் உள்ள படிகளில் ஏறி, 50 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய கோபுரத்தின் உச்சியில், இறந்தவரின் உடலை வைத்து விடுவர். இந்த கோபுரத்தின் உச்சிக்கும், கட்டடத்திற்குள்ளும் வெளியாட்கள் செல்ல அனுமதி கிடையாது.

ஈமசடங்கு செய்பவர்கள் என்று, தனித்து அடையாளம் கொண்ட சிலரே, இறந்த உடலை கொண்டு செல்லும் பணியை செய்கின்றனர். அவர்கள் வெளியுலகிற்கு வராமல், சமுதாயத்தில் இருந்து விலகி வாழ்கின்றனர். அவர்கள் மட்டுமே இறந்த உடலை கோபுரத்தின் உச்சிக்கு எடுத்து செல்வர்.

பார்சிகளின் இறுதிச் சடங்கில் முக்கியமானது, மரணத்தருவாயில் உள்ளவரின் முன் அமர்ந்து, அவருக்கு புனித நுாலின் பகுதியை படித்துக் காட்டுவது. அதுபோல, மாதுளைச்சாறு ஒரு மிடறு குடிக்க வைப்பதும், சடங்காக நடத்தப்படுகிறது.

இறந்த உடலைக் குளிக்க வைத்து, சலவை செய்த வெள்ளைத் துணியை சுற்றி வைத்து விடுவர். அதை பிறர் தொடுவது, தீட்டாக கருதப்படுகிறது.

இறந்த உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரும் போது, அதை, ஒரு நாய் பார்க்க வேண்டும் என்ற சடங்கும் இருக்கிறது. காரணம், நான்கு முகமுள்ள நாய், மரணத்தின் துாதுவனாக இருப்பதாக நம்புகின்றனர், பார்சி இனத்தவர்.

அதன்பிறகு, டவர் ஆப் சைலன்ஸ் கட்டடத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு, கழுகுகளுக்கு இரையாக வைக்கப்படும். கழுகுகள் தின்றது போக மீதமுள்ளவற்றை சேகரித்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். ஓர் உடல், ஓராண்டு வரை அங்கே கிடக்க அனுமதிக்கப்படும்.

கழுகு இனத்தின் வீழ்ச்சி காரணமாக, தற்போது டவரில் வைக்கப்படும் உடல்கள் அழிவதற்கு, பல காலம் ஆகிறது. இந்தக் குறையை நீக்க, நவீன அறிவியல் முறைப்படி, மிகப்பெரிய சூரியக் கண்ணாடிகளை வைத்து, உடலை அழிக்க முயற்சிகள் நடக்கின்றன. அதுதவிர, சோலார் முறைப்படி உடலை அழிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி இருக்கின்றனர், பார்சிகள்.

- என்று கூறி முடித்தார், நாராயணன்.

மறைந்த, ரத்தன் டாடாவின் உடல், இந்த முறையில் தான் எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன், நான்.



கோவிலுக்கு வந்திருந்தார், சாமியார் ஒருவர். பல்வேறு விஷயங்களைப் பேசிய அவர், நமக்கு ஆபத்து வரும் போது, எப்படி தப்பிப்பது என்பதை சொன்னார்.

'யானை துரத்தினால், வளைந்து வளைந்து ஓடு. நாய் துரத்தினால் ஓடாதே, திரும்பி முறைத்துப் பார். பாம்பு துரத்தினால், நேராய் ஓடு. புலி துரத்தினால், மரத்தின் மீது ஏறு. சிங்கம் துரத்தினால், பிணம் போல் நடி...' என்று கூறினார்.

சாமியாரின் பேச்சைக் கேட்ட ஆசாமி ஒருவருக்கு மனதில் சந்தோஷம். கூடவே ஒரு சந்தேகம்.

அதை சாமியாரிடம் கேட்க எண்ணினான்.

'சாமி, ஒரு சந்தேகம். எப்படி தப்பிப்பதுன்னு தெளிவா சொன்னீங்க. ஒரு முக்கியமான ஆளுகிட்டே இருந்து தப்பிப்பதற்கு வழி சொல்லணும்...' எனக் கேட்டான், அந்த ஆசாமி.

'என்ன கேட்க போகிறாய். கடன் கொடுத்தவங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தானே?' எனக் கேட்டார், சாமியார்.

'அதெல்லாம் நான் ஈசியா சமாளிச்சுக்குவேன், சாமி. ஆனால்...' என்று இழுத்தான்.

'தயங்காம கேளு...' என்றார், சாமியார்.

'மனைவி துரத்தினால் என்ன சாமி செய்வது?' என்று கேட்டான்.

அதிர்ச்சி அடைந்து, சிறிது நேரம் யோசித்து, 'அப்படி துரத்தப்பட்டு தப்பி வந்தவன் தான், நான்...' என்றார், சாமியார்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us