sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (16)

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (16)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (16)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (16)


PUBLISHED ON : நவ 17, 2024

Google News

PUBLISHED ON : நவ 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹர்ஷாவுக்கும், எனக்குமான மண வாழ்க்கை சந்தோஷமாக போனது. திங்கள் முதல் வெள்ளி வரை நடிப்பேன். சனி, ஞாயிறுகளில் பெங்களூரு வந்து விடுவேன். சில சமயங்களில், சென்னை வந்து விடுவார், ஹர்ஷா. சுமூகமாக போய் கொண்டிருந்தது வாழ்க்கை.

திருமணமாகி சில நாட்களுக்கு பின், வீட்டில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தோம். அப்போது, சில இயக்குனர்கள் வந்தனர். வாழ்த்த வந்திருக்கின்றனர் என நினைத்தேன்.

சம்பிரதாயமாக வாழ்த்தியவர்கள், 'எப்போது இருந்து கால்ஷீட்?' என்றனர்.

திருமணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. இவர்கள், 'கால்ஷீட்'டுக்கு வந்து நிற்கின்றனரே... கணவர் என்ன நினைப்பாரோ என, நினைத்தேன்.

திருமணம் ஆன பின், சினிமாவில் நடிக்க வேண்டாம் என்பது, அம்மாவின் எண்ணம்.

கணவர் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியாமல், பாதியிலிருந்த படங்களை முடித்து கொடுத்து விட நினைத்தேன்.

அவர்கள் தேதி கேட்ட போது, நான் ஒன்றும் பேசவில்லை.

ஹர்ஷாவிடம், 'சார், எல்லா கலைஞர்களும் தயாராக இருக்கின்றனர். நீங்கள் பெரிய மனது பண்ணி, சரோஜாதேவியை நடிக்க அனுப்பி வைத்தீர்களானால், வேலை சுலபமாகும்...' என்றார், இயக்குனர்களில் ஒருவர்.

என்னை பார்த்து, 'ஒப்புக்கொள்' என்ற மாதிரி, தலை அசைத்தார், ஹர்ஷா.

திருமணமாகி எல்லாரும், 'ஹனிமூன்' கனவில் இருக்கும்போது, இவர், படப்பிடிப்புக்கு, சம்மதிக்கிறாரே! தயங்கியபடி, 'நிஜமாகவே படப்பிடிப்புக்கு போகணுமா...' என்றேன்.

'முதலில் கடமை. உனக்காக அத்தனை பேர் காத்திருக்கும் போது, நீ முதலில் போய் வா. அவர்களுக்கு நஷ்டமாகி விடும்...' என்றார்.

இம்மாதிரி கணவர் கிடைக்க, நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ என நினைத்தேன். அவரது குணம், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளும் மனம் இவற்றை பார்த்து, எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு முடித்து திரும்பினேன்.

ஹர்ஷா எப்போதாவது, 'ஹனிமூன்' பற்றி பேச்செடுப்பார் என்று எதிர்பார்த்தேன்.

'திருமணம் முடிந்ததும், கணவன் - மனைவி இருவரையும் தம்பதி சமேதராய் நான்கைந்து கோவில்களுக்கு அழைத்து வருகிறேன் என வேண்டி இருக்கிறேன். அங்கெல்லாம் போய் வந்து விடலாம்...' என்றார், அம்மா.

'அதுக்கென்ன போகலாம்...' என்றார், ஹர்ஷா.

ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை, பழனி, சுசீந்திரம் மற்றும் திருச்செந்துார் ஆகிய கோவில்களுக்கு சென்று வந்தோம்.

இடையில் எனக்கு காய்ச்சல் வந்தது. பயணம் அதிகமாக அதிகமாக காய்ச்சலும் அதிகமானது. உடனே, சென்னை திரும்பி, நர்சிங் ஹோமில், 'அட்மிட்' ஆனேன்.

ஹர்ஷாவின் மனைவியாகவும், நடிகையாகவும் இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கவில்லை. எந்த பிரச்னையும் இல்லாமல் உருண்டோடியது வாழ்க்கை.

கல்யாணம் ஆன புதிதில், இன்டர்நேஷனல் ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட போயிருந்தோம். அப்போது, ஆராதனா ஹிந்தி படம் வெளியாகி, ராஜ்கபூர், திலீப்குமார் ஆகியோர் அங்கு வந்திருந்தனர்.

என் கணவரிடம், 'திருமணத்திற்கு பின், நான் சாய்ராபானுவை நடிப்பதற்கு அனுப்பி வைத்தேன். நீங்களும், சரோஜாதேவியை நடிக்க அனுப்பி வையுங்கள். நடிப்பதிலிருந்து நிறுத்தி விடாதீர்கள்...' என்றார், திலீப்குமார்.

'பெண்கள் திருமணத்திற்கு முன், என்ன வேலையில் ஈடுபட்டிருந்தனரோ, அந்த வேலையை அதன் பிறகும் தொடர வேண்டும். இதுதான் என் பாலிசி. எக்காரணத்தாலும் அவர்களுடைய பணிகள் பாதிக்கப்பட கூடாது...' என்றார், ஹர்ஷா.

ஒப்புக்கொண்ட படங்களை முடித்து கொடுத்த பின், 'ஹனிமூன்' செல்ல முடிவெடுத்தோம்.

'உனக்கு உங்கம்மாவை விட்டு இருக்க முடியாது. அவரும் வரட்டும்...' என்றார், ஹர்ஷா.

ஒரு வழியாக, காஷ்மீருக்கு, 'ஹனிமூன்' கிளம்பினோம்.

காஷ்மீரில் எனக்கு ஒரு சால்வை வாங்கி பரிசளித்தார், அம்மா. அவரின் நினைவாக இன்னமும் அதை பத்திரமாக வைத்துள்ளேன். காஷ்மீரிலிருந்து டில்லி வந்து, 'ஷாப்பிங்' முடித்து, பெங்களூரு திரும்பினோம்.

'நீ, ஒரு நடிகை. உன்னை வீட்டிற்குள் பூட்டி வைக்க எனக்கு இஷ்டமில்லை. நீ சாதிக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. உன் கலை பயணம் இன்னமும் தொடர வேண்டும்...' என்றார், ஹர்ஷா.

அவர் சொன்னபடி, பணமா பாசமா மற்றும் தாமரை நெஞ்சம் போன்ற வெற்றிப் படங்கள், திருமணத்திற்கு பின் வந்தன.

என் கணவர் மட்டுமில்லை, அவரது அம்மாவும், என்னை, தன் மகள் போல் பார்த்துக் கொண்டனர். வீட்டு வேலை எதையும் என் மீது சுமத்தியதில்லை.

படப்பிடிப்புக்கு போகும்போது, யாரும் என்னை எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. எதுவாய் இருந்தாலும், படப்பிடிப்பு முடித்து வந்த பிறகு தான் சொல்ல வேண்டும் என்பதில் கவனமாய் இருந்தார், ஹர்ஷா.

இயக்குனர்கள் வரும்போது, 'நீங்கள் இருங்கள்...' என்பேன், ஹர்ஷாவிடம்.

வெளிப்புற படப்பிடிப்புகள் ஞாயிற்று கிழமைகளில் நடக்கும்போது, தலையை மட்டும் காட்டி விட்டு போய் விடுவார்.

ஒருநாள், என்னை உட்கார வைத்து, வங்கியில் உள்ள இருப்பு தொகை, கட்ட வேண்டிய வரிகள், கட்டியிருக்கும் வரிகள் அனைத்தையும் சொன்னார். பொருளாதாரம் மட்டுமல்ல, வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் சொல்லித் தந்தவர், ஹர்ஷா.

ரஷ்யாவில் நடைபெற்ற, சர்வதேச திரைப்பட விழாவுக்கு, வைஜெயந்தி மாலா, அவரது கணவர் பாலி மற்றும் என் கணவர் ஹர்ஷாவுடன், நானும் புறப்பட்டேன்.

ஹர்ஷா ஏற்கனவே ரஷ்யா சென்று வந்திருப்பதால், தான் சென்று வந்த இடங்களை எல்லாம் என்னையும் அழைத்து போய் காட்ட ஆசைப்பட்டார்.

பாலும் பழமும் படத்தில், நான், டி.பி., நோயாளியாக இருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்று குணமாகி வருகிற மாதிரியான காட்சி இருக்கும். படப்பிடிப்பின் போது அதை நீக்கி விட்டனர். எனவே, 'உனக்கு, நிஜமான சுவிட்சர்லாந்தை காட்டுகிறேன்...' என்று சொல்லி அங்கும் அழைத்து சென்றார், ஹர்ஷா.

அப்போது தான் நான், முதன் முதலாக, ஐரோப்பிய நாடுகளுக்கு போனேன். அங்கிருந்து நேராக பிரான்ஸ், இங்கிலாந்து, எகிப்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று, சுற்றிப் பார்த்து வந்தோம்.

தாய்நாட்டிற்கு திரும்பி வந்ததும், பத்மஸ்ரீ விருதுக்காக என்னை தேர்வு செய்யப்பட்ட சந்தோஷ செய்தி கிடைத்தது. சென்னையில் படப்பிடிப்பில் இருந்த போது, 'உடனடியாக புறப்பட்டு பெங்களூரு வா...' என்றனர்.

தொடரும்

நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்

எஸ். விஜயன்







      Dinamalar
      Follow us