sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 17, 2024

Google News

PUBLISHED ON : நவ 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுமையிலும் வசதி வரும்!

அரசு ஊழியராக, வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார், தெரிந்தவர் ஒருவர். மிகவும் நேர்மையானவர்.

வருமானத்திற்கு ஏற்றவாறு சிக்கனமாக குடும்பம் நடத்தி, மகன் மற்றும் மகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். மகனை வங்கிப் பணிக்கும், மகளை மருத்துவத் துறை சார்ந்த பணிக்கும் அனுப்பியுள்ளார்.

அவரது மனைவியும், அவருக்கு ஏற்றார் போல, ஆடம்பரங்களுக்கு ஆசைப்படாத எளிமையானவர்.

சில ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்ற அவரை, அண்மையில் சந்திக்க நேர்ந்தது.

மனைவியோடு காரில் வந்து இறங்கினார். அவரோடு பேசிய போது, ஊரில் பெரிய வீடு கட்டி, வசதியாக வாழ்வதாக கூறினார்.

பணிக்காலத்தில் மறைமுகமாக லஞ்சம் வாங்கி சேர்த்து வைத்ததை, தற்போது சொகுசு வாழ்க்கை வாழ பயன்படுத்தி கொள்கிறாரோ என, நினைத்தேன்.

அதை உணர்ந்தவராக, அவரே அதுபற்றி கூறினார்...

'தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வைத்து, நியாயமான கட்டணத்தில், என் வீட்டிலேயே, அரசு தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். வங்கிக் கடன் பெற்று, அனுபவமுள்ள தொழிலாளர்களை வைத்து, சலுான் கடைகள் மற்றும் சலவையகங்களும் நடத்தி வருகிறேன்.

'பணி ஓய்வு பெற்றாலும், உழைப்புக்கு ஓய்வு தராததால், நேர்மையான அரசு ஊழியராக இருக்கும் போது எதிர்பார்க்காத வசதியை, இப்போது கவுரவமாக அனுபவிக்கிறோம்...' என்றார்.

முயற்சி செய்தால், முதுமையிலும் வசதி வரும் என்பதற்கு உதாரணமாக திகழும் அவரை, தவறாக எண்ணியதற்கு மன்னிப்பு கேட்டு, மனதாரப் பாராட்டினேன்!

— இந்திராணி ஆறுமுகம், கடலுார்.

யோகா ஆசிரியரின் வித்தியாசமான முயற்சி!

தனியார் பள்ளியில், உடற்பயிற்சி மற்றும் யோகா ஆசிரியராக இருக்கும் நண்பரை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன்.

அவரிடம் நலம் விசாரித்து, விபரம் கேட்டேன்.

'விடுமுறை நாட்களில் குடியிருப்பில் இருக்கும் முதியவர்களுக்கு, உடற்பயிற்சி மற்றும் யோகா சொல்லி தருகிறேன். இதற்காக அடிதளத்தில், 'பார்க்கிங்' பகுதியில் பிரத்யேக இடம் ஒதுக்கி தரப்பட்டு உள்ளது.

'மொத்தம், 30 பேர், இதில் கலந்து கொள்கின்றனர். இரண்டு மாதமாக இதை செய்து வருகிறேன். மேலும், அறையில் அடைந்து கிடந்த தங்களுக்கு, இந்த பயிற்சி புதிய மாற்றத்தை தந்து, தங்களை புத்துணர்வாக வைத்திருப்பதாக கூறுகின்றனர், முதியவர்கள்.

'பயிற்சியில், இரண்டு கைகளையும் தட்டும் பயிற்சி மற்றும் அனைவரும் சேர்ந்து ஒன்றாக வாய்விட்டு சிரிக்கும் பயிற்சி, இதில், 'ஹைலைட்'டாக இருக்கிறது. அனைவரது மன இறுக்கத்தையும் போக்கி மனதை இலகுவாக்க கூடிய பயிற்சி, இது.

'தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில், குடும்பத்தை ஓட்ட முடியாமல் தவித்த எனக்கு, இந்த யோசனை தோன்றி, அதை அபார்ட்மென்ட்வாசிகளிடம் கூறி செயல்படுத்த ஆரம்பித்தேன்.

'பயிற்சி அளிப்பதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்தேன். ஆனால், 'இந்த கூட்டு பயிற்சியால், எங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆகவே, நாங்கள் தரும் பணத்தை மகிழ்வாக வாங்கி கொள்ளுங்கள்...' எனக் கூறி, கூடுதல் பணம் தருகின்றனர்.

'ஒரு மாற்று சிந்தனை, என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதை எண்ணி மனம் மகிழ்கிறேன்...' என்றார், நண்பர்.

— பி.என்.பத்மநாபன், கோவை.

பாட்டி என்கிற பொக்கிஷம்!

எங்கள் தெருவில் வயதான பாட்டி ஒருவர் இருக்கிறார். இங்குள்ள அனைவருக்கும் அவர் தான் கை வைத்தியர். குழந்தை ஓயாமல் அழுதால், பால் குடிக்க மறுத்தால், சுளுக்கு, வயிற்று பொருமல் என்று எதுவாக இருந்தாலும், பாட்டியிடம் வந்து கேட்பர்.

சுக்கு, மிளகு, இஞ்சி மற்றும் சீரகம் வைத்து, எந்த பக்குவத்தில், எப்படி தயார் செய்ய வேண்டும் என கூறுவார். அதன்படி செய்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பருவமடைந்த பெண்ணுக்கு உளுந்தங்களி, புட்டு செய்வது எப்படி என்று விளக்கம் தருவார். திருமண நிச்சயதார்த்தம், சீமந்தம், உபநயனம், திருமணத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும்.பிராமணர்கள் மரணத்திற்கு பின், 13 நாள் காரியத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என, எல்லா விஷயங்களையும் கூறுவார், சரியாக இருக்கும்.

அதனால், அந்த பாட்டியிடம் ஆலோசனை கேட்க, நிறைய பெண்கள் வருவர்.

பாட்டி என்ற பொக்கிஷம் - 'ஓல்ட் இஸ் கோல்ட்' தான்!

— ஆர்.ஜெயலட்சுமி, நெல்லை.






      Dinamalar
      Follow us