
பா - கே
அலுவலகம்...
சமீபத்தில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தின் காட்சிகள், 'டிவி'யில் ஒளிப்பரப்பானதை, கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தோம். கருகிய உடல்கள் மீட்கப்பட்ட காட்சிகளைப் பார்க்க முடியாமல், அங்கிருந்து எழுந்து சென்றேன்.
மீண்டும் மீண்டும் விமான விபத்து காட்சிகளே கண்களுக்குள் வர, அலுவலக வாசலிலேயே நின்று விட்டேன். என்னை பின் தொடர்ந்து வந்த, லென்ஸ் மாமாவும் சோகமாக இருந்தார்.
'வா மணி... கொஞ்சம் துாரம் நடந்து சென்று வரலாம்...' என, அழைத்தார், மாமா.
பதில் கூறாமல் அவருடன் கிளம்பினேன், நான்.
முன்பொரு முறை, நானும், லென்ஸ் மாமாவும் லண்டனுக்கு சென்றபோது, லண்டன், 'ஹீத்ரு' விமான நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்த நண்பர் ஒருவர், வீட்டில் தங்கியிருந்தோம்.
அப்போது, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும், விமான பைலட்டுகளுக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் பற்றி, எங்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தபடி நடந்தோம்.
விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளும், பைலட்டுகளும் சாதாரண வார்த்தைகளில் தகவல்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். சங்கேத வார்த்தைகள் தான் பயன்படுத்துவர் என, கூறியிருந்தார், நண்பர். அப்படிப்பட்ட ஒரு வார்த்தை தான், 'மே டே' என்பது.
இப்போது நடந்த ஆமதாபாத் விமான விபத்திலும், 'மே டே' என்ற வார்த்தை பயன்படுத்தியது தான், பிரதானமாக இருந்துள்ளது. எவ்வளவு மன உளைச்சலில் இந்த வார்த்தையை சொல்லியிருப்பர் என, நினைத்தாலே, 'பகீர்' என்கிறது.
'மே டே' வார்த்தை பிரயோகம் போல், வேறு சில, சங்கேத வார்த்தைகள் பற்றியும் கூறியிருந்ததாக சொன்னேன் அல்லவா! அதுபற்றி பார்ப்போம்:
பைலட்டுகள் பேசும் சங்கேத வார்த்தையான, 'மே டே' எனக் கூறினால், கதை முடிந்தது என, அர்த்தம்.
எந்த நாட்டை சேர்ந்த, பைலட்டுகளாக இருந்தாலும், இதுபோன்ற பல சங்கேத வார்த்தைகளை தெரிந்து வைத்திருப்பது, மிகவும் அவசியம். பைலட்டுகளும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், ஒருபோதும் வார்த்தைகளை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, பொதுவான சங்கேத வார்த்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எதிர்பாரா விபத்துகளை தவிர்ப்பது தான், இதன் அடிப்படை நோக்கம். ஏனெனில், பைலட்டுகளும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டால், பயங்கரமான விபத்துகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
வார்த்தைகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த காலங்களில் மோசமான விமான விபத்துகள் பல அரங்கேறியுள்ளன.
எனவே தான், பைலட்டுகளும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், சங்கேத வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன.
மே டே (Mayday): விமான பயணங்களின் போது, நீங்கள் ஒருபோதும் கேட்கவே கூடாத வார்த்தை, இது தான். இன்ஜின் முழுமையான செயலிழப்பு மற்றும் உயிருக்கே ஆபத்தான, மிகவும் அவசர சூழல்களில், பைலட்டுகள் இந்த வார்த்தையை பயன்படுத்துவர். 'மெய்டஸ்' என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து, 'மே டே' என்ற வார்த்தை உருவானது.
உயிருக்கு ஆபத்தான அவசர சூழல் என்றால், ரேடியோ கால் துவங்கும்போது, பைலட்டுகள் இந்த வார்த்தையை கண்டிப்பாக, மூன்று முறை கூற வேண்டும்.
பேன் - பேன் (Pan - pan): இதுவும் அவசர சூழ்நிலையை தெரிவிக்கும் வார்த்தை தான். எனினும், 'மே டே' அளவிற்கான அவசர சூழல் கிடையாது. அதற்கு பின் நிலையில் உள்ள, அவசர சூழல் என, சொல்லலாம். உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது போன்ற சமயங்களில், பைலட்டுகள் இந்த வார்த்தையை பயன்படுத்துவர்.
'பேனே' என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து, பேன் - -பேன் என்ற வார்த்தை உருவானது. இதற்கு, செயலிழப்பு என்று பொருள். இந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பேன்--பேன், பேன்--பேன், பேன்--பேன் என, பைலட்டுகள் மூன்று முறை கூறுவர். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் புரிந்து கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
வில்கோ (Wilco): 'வில் கம்ப்ளை' என்பதன் சுருக்கம் தான், 'வில்கோ!' எங்களுக்கு தகவல் கிடைத்து விட்டது. அதற்கு இணங்குகிறோம் என்பது தான், இதற்கு அர்த்தம். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்தவுடன், அதை செய்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு விமானங்களின் பைலட்டுகள், 'வில்கோ' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்டாண்ட்பை (Standby): தயவு செய்து காத்திருங்கள் என்பது தான், இதன் அர்த்தம். பொதுவாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளோ அல்லது பைலட்டுகளோ, 'மெசேஜ்'களுக்கு எதிர்வினையாற்ற முடியாத அளவிற்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில், 'ஸ்டாண்ட்பை' வார்த்தையை பயன்படுத்துவர்.
டெட்ஹெட் (Deadhead): விமான ஊழியர்களில் யாராவது ஒருவர், பயணிகளின் இருக்கையில் அமர்ந்து, பயணம் செய்து கொண்டிருந்தால், அதை குறிப்பதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
பைலட்டுகளும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் இதுபோல் ஏராளமான சங்கேத வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.
- இப்படி நண்பர் கூறியிருந்ததை, லென்ஸ் மாமாவிடம் நினைவுபடுத்தியதில் ஆமோதித்தார்.
'எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், என்ன பயன்? எல்லாம் முடிந்த பின், எரிப்பொருள் கலப்படம், இன்ஜின் கோளாறு என்று பேசுகின்றனர்...' என, தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார், மாமா.
ப
மூன்று நாடுகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
'எங்கள் நாட்டில் ஒரு திருட்டு நடந்தால், 15 நாட்களுக்குள்ளே அதை கண்டுபிடித்து விடுவோம்...' என்றார், ஒருநாட்டு போலீஸ்காரர்.
'நாங்கள் உங்களை விட வேகம். ஒரு வாரத்திலேயே கண்டுபிடித்து விடுவோம்...' என்றார், இன்னொரு நாட்டுக்காரர்.
'நாங்கள் உங்களை விட வேகம். திருட்டு நடக்கிறதுக்கு முந்தியே எங்களுக்கு தெரிந்து விடும். ஏனெனில், திருடர்கள் எங்களை கலந்து பேசிட்டுத்தான் திருடப் போவாங்க...' என்றார், மூன்றாவது நாட்டுக்காரர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!