
வி.பிருந்தா, சென்னை: காரை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
கிட்டத்தட்ட, 50 ஆயிரம் கி.மீ., ஓடி விட்டால், 'போதும்... வேறு கார் வாங்கித் தருகிறேன்...' என்பார், பொறுப்பாசிரியர். அப்படி வந்தவை தான், நான் பயன்படுத்தும் கார்கள்!
லேட்டஸ்ட்டாக, 'லெக்சஸ்' கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்!
சுப. சின்னவெள்ளை, கோவை புதுார்: அரசியல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அந்துமணி, அரசியல் பற்றி முழு விளக்கம் அளிப்பது எப்படி?
காலையில் வெளியாகும் அனைத்து நாளிதழ்கள்; மாலையில் வெளியாகும், மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு, மக்கள் குரல் உட்பட, அனைத்து நாளிதழ்களையும் படிப்பேன். அதனால், அரசியல் குறித்து, முழு விளக்கம் அளிக்க முடிகிறது!
மு.நாகூர், சுந்தரமுடையான்: கடந்த, 2023 - 24 பள்ளிக் கல்வி ஆண்டின், சிறந்த செயல்திறன் தரக் குறியீட்டில், பஞ்சாப், குஜராத், ஒடிசா, டில்லி மற்றும் சண்டிகர் மாநிலங்கள், முன்னிலை வகிப்பதாகவும், தமிழகம், 16வது இடத்தில் இருப்பதாகவும், மத்திய அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி...
நம் ஆட்சியாளர்கள், தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர்; மத்திய அரசோடு மோதல்போக்கையே கடைபிடிக்கின்றனர்.
இதில், தமிழகம், இந்திய பொருளாதார வளர்ச்சி இன்ஜினாக இருப்பதாக, பெருமிதம் வேறு!
எல்.என்.சிவகுமார், புழுதிவாக்கம், சென்னை: மேட்டூர் அணை, கல்லணை ஆகியவற்றை, உரிய நேரத்தில் திறந்து விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமைப்படுகிறாரே...
மேட்டூர் அணையை திறந்து விட்டது, 'ஓகே!' இரண்டு நாளில், தனி விமானம் மூலம் சென்று, மேட்டூரிலிருந்து கல்லணைக்கு வரும் தண்ணீரை மீண்டும் திறந்து விட்டது, நல்ல தமாஷ்!
விட்டால், கதவணை, வாய்க்கால்கள் திறப்பிற்கு கூட செல்வார் போலிருக்கிறது!
* பெ.பொன்ராஜ பாண்டி, மதுரை: 'பெண்களை மதிக்க, ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்...' என, அமைச்சர் கீதா ஜீவன் கூறுகிறாரே...
கரெக்ட்! சரியான அறிவுரை கூறியுள்ளார். பெற்றோர் மற்றும் பெண்களை மதிக்க, ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்; வீட்டில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும், சொல்லித் தர வேண்டும்!
* வி.ரெங்கநாதன், பொள்ளாச்சி: தேர்தல் சமயத்தில் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை, மக்கள் போகப் போக மறந்து விடுகின்றனரே...
அதுதானே எல்லா கட்சிகளுக்கும் வசதியாகி விடுகிறது. மக்கள் விழிப்புணர்வோடு கேள்வி கேட்க ஆரம்பித்தால் தான், மாற்றம் ஏற்படும்; அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்படுவர்!
வி.பார்த்தசாரதி, சென்னை: இறந்து பல ஆண்டுகள் ஆகியும் கூட, மக்கள் இன்னும் எம்.ஜி.ஆரைக் கொண்டாடுகின்றனரே... ஏன்?
எம்.ஜி.ஆர்., ஒரு வள்ளல். அவரால் நேரடியாக உதவி பெற்ற பலர், தமிழக மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் வகையில் தொண்டாற்றி வருகின்றனர்!
ஜெ.மாணிக்க வாசகம், இடைப்பாடி, சேலம்: பச்சிளம் குழந்தைகளைக் கூட, மொபைல் போனுக்கு பெற்றோர் அடிமையாக்கி விடுகின்றனரே...
பல இளம் பெற்றோருக்கு, இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை மொபைல் போன் மற்றும் 'டிவி' பக்கமே கொண்டு செல்வதில்லை. இது நல்ல விஷயமே!