sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 14, 2025

Google News

PUBLISHED ON : செப் 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

அலுவலகம். தன் கேபினில் இருந்த சிறிய, 'நோட்டீஸ் போர்டில்' மயிலிறகு ஒன்றை செருகி வைத்திருந்தார், உதவி ஆசிரியை ஒருவர். இதை பார்த்த லென்ஸ் மாமா, 'கிருஷ்ண ஜெயந்தி தான் முடிஞ்சிடுச்சே... வீட்ல இருந்த மயிலிறகை எடுத்து வந்து இங்கே வைச்சுட்டீங்களா?' என்றார், நக்கலாக. மாமா மீது, அக்னி பார்வையை வீசிய உ.ஆ., 'உமக்கு எப்பவும் கிண்டல் தான். நம்ம ஆபிசுல தான் பல்லி தொந்தரவு அதிகமாச்சே. போர்டுக்கு பின்னாலிருந்து அவ்வப்போது, தலையை நீட்டி பயமுறுத்துது. மயிலிறகு வைச்சா, பல்லி வராதுன்னு சொன்னாங்க. அதுக்காகத்தான்...' என்றார். 'இதென்ன புது தகவலா இருக்கே?' என்றேன், நான். 'மயிலிறகை பற்றி தெரியாதவங்க சொல்ற கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. முன்பு ஒருமுறை, 'பாரஸ்ட் ரேஞ்சர்' ஆன, நண்பர் ஒருவர், ஈரோடு, அந்தியூர் காட்டுக்கு அழைத்து சென்றிருந்தார். அங்கு, வெள்ளை மயில், கலர் மயில் எல்லாம் ஏராளமாக இருந்தது. நான் கூட விதவிதமாக புகைப்படம் எடுத்து வந்தேனே... நினைவிருக்கிறதா மணி...' என்றார், மாமா. 'ஏன் ஞாபகமில்லாமல்... டில்லியில் நடந்த, 'கான்பிரன்ஸ்' ஒன்றுக்கு என்னை மட்டும் ஆசிரியர் போக சொல்லிட்டாரே என்ற கடுப்பில், நீரே அந்த நண்பரை வரவழைத்து அங்கு சென்று வந்தீரே...' என்றேன், நான். 'சரி, சரி... இப்ப எதுக்கு பழைய கதையெல்லாம். மயில் பற்றி, நண்பர் கூறியதை சொல்லட்டுமா, வேண்டாமா?' என்றார், மாமா. 'சொல்ல வந்ததை சொல்லிடுங்க...' என்றதும், கூற ஆரம்பித்தார், மாமா: மயில், நம் தேசிய பறவை, முருகனின் வாகனம் என்பதெல்லாம் நமக்கு தெரியும். மயில், தோகை விரித்து ஆடும்போது, அதை ரசித்து பார்க்காதவர் யாரும் இருக்க முடியாது.

ஆண் மயிலுக்கு மட்டும் தான், அழகான தோகை உண்டு. பெண் மயிலுக்கு தோகை இருக்காது. மயிலின் தோகை, 3 முதல் 4 அடி நீளமுள்ளது. மயிலிறகில் சூரிய ஒளிபட்டால், பல வண்ணங்கள் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கும். இதற்கு காரணம், மயில் இறகில் உள்ள, 'மெட்டாலிக் பசை' என்ற பொருள் தான்.

பொதுவாக, மயிலுக்கு ஆங்கிலத்தில், 'பீகாக்' என, சொல்வோம். தமிழில் நாம், ஆண் மயில், பெண் மயில்ன்னு சொன்னாக் கூட, ஆங்கிலத்தில் ஆண் மயிலுக்கு, 'பீகாக்' பெண் மயிலுக்கு, 'பீஹென்'னுன்னு தான் சொல்வாங்க. ஏன் என்றால், அது கோழி இனக் குடும்பத்தை சார்ந்தது. உலகத்துல, 48 வகையான கோழி இனங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான், இந்த மயில் இனம்.

இந்தியாவில் எல்லா மாநிலத்திலேயும் மயில் இனம் இருக்கிறது. காட்டுப் பகுதிகளில் பார்த்தீங்கன்னா மயிலின் நடமாட்டம் அதிகம் காணப்படும்.

மயில் குரல் எழுப்புவதை, அகவல் என, சொல்வோம். அது, அகவுவது பெரும்பாலும், 'நான் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன். இதோ, இந்த மரக்கிளையில் நான் காத்திருக்கிறேன். நீ வரலாம்...' என, பெண் மயிலுக்கு தகவல் சொல்ல தான் அகவும், ஆண்மயில். அதை புரிந்து கொண்டு, பெண் மயிலும், ஆண் மயில் இருக்கும் இடத்துக்கு செல்லுமாம்.

மழை மேகத்தை கண்டால் மயில் ஆடும் என்பதில் உண்மை இல்லை. மழை பெய்கிற சூழ்நிலையை பார்க்கும் போது தான், அந்த ஆண் மயிலுக்கு, இனக்கவர்ச்சி உணர்வு வருமாம். பெண் மயிலை அங்கே வரவழைப்பதற்கு, அது செய்யற சாகசம், தோகை விரித்து ஆடுவது.

கோழி மாதிரியே மயிலும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். மூணு அல்லது ஐந்து முட்டைகளுக்கு மேல் இடாது. பூமியில், புதர் மறைவில் முட்டையிட்டு, 25 நாள் உட்கார்ந்து அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.

மயிலுக்கு பாம்பு எதிரி என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால், மயிலுக்கு எந்த ஒரு மிருகமோ, பறவையோ எதிரி கிடையாது. பாம்புக்கு இது எதிரின்னு ஏன் சொன்னாங்கன்னா, பாம்பைக் கண்டால், பயப்படாமல் அதை கொத்துகிற வல்லமை மயிலுக்கு உண்டு.

புத்தகம் அல்லது நோட்டுக்குள் மயில் இறகுகளை வைத்து, அது குட்டிப் போடும். அப்படி குட்டிப் போட்டா படிப்பு நல்லா வரும்ன்னு நாம் சின்ன வயசுல நினைத்திருந்தோம். அதுக்கு எந்த வகையான ஆதாரமும் இல்லை.

இது போன்று தான், மயிலிறகை சுவரில் பதித்து வைத்தால், பல்லி வராது என்பதும். மின்விசிறி காற்றில் மயிலிறகு அசைய, அதை பார்த்து, பல்லி பயந்து, விலகி ஓடிவிடும், அவ்வளவே!

மயில், நம் தேசிய பறவை என்பதால், மயில் இறந்து விட்டால், அதன் உடல் மீது தேசிய கொடியை போர்த்தி, மரியாதையாக அடக்கம் செய்வது வழக்கம். காட்டில் வாழும் மயில் இறந்திருந்தால் எப்படி தெரியும் என, கேட்காதீங்க.

மக்கள் வாழும் பகுதியில் வசிக்கும் மயில்களுக்கு இது பொருந்தும். அப்படி ஒரு மயில் இறந்துவிட்டால், உடனடியாக காவல் துறைக்கோ, வனதுறையினருக்கோ தெரிவிப்பது அவசியம்.

- எனக் கூறி முடித்தார், லென்ஸ் மாமா. இவ்வளவும் கேட்டுக் கொண்டிருந்த உ.ஆ., தன் கேபினில் செருகி வைத்த மயிலிறகை எடுப்பதா, வேண்டாமா என, யோசிப்பது, அதையே உற்று பார்த்ததிலிருந்து தெரிந்தது. 'பல்லி வராமல் இருக்க மருந்து அடிக்க சொல்லலாம். அழகுக்காக வேண்டுமானால் அந்த மயிலிறகு அப்படியே இருக்கட்டும்...' என, சமாதானப்படுத்தினேன், நான்.



ஜெ யி த்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?

* சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது

* வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது

* வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது

* அடைவதற்கு என, ஒரு லட்சியம் இருக்கிறது

* அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது

* வாய்ப்பு எங்கே எங்கே என, தேடுகிற தாகம் இருக்கிறது

* வாய்ப்பு வரவில்லை என்றால், அதை உருவாக்கும் திறமை இருக்கிறது

* உணவு, உறக்கம் இவற்றை கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது

* தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது

* அடிமேல் அடிபட்டாலும், அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது

* தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்ற தேடல் இருக்கிறது

* தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது தகுதிகளை கூட்டிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது

* சூழ்நிலைக்கு தகுந்தபடி அனுசரித்து போகும் அடக்கம் இருக்கிறது

* விமர்சனத்தை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் இருக்கிறது

* அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் மூளை இருக்கிறது

* குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது

* நேற்றை விட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என, அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது

* அத்தனைக்கும் அடிப்படையாய், அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us