
ஜி.பி.அஜித், மாடம்பாக்கம், சென்னை: 'புரூட் சென்ட்' பயன்படுத்துவதாகச் சொல்லி இருந்தீர்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் நண்பர்கள், வேறு, 'பிராண்ட்' பரிசளித்தால், அதை என்ன செய்வீர்கள்? 
நண்பர்களுக்குக் கொடுத்து விடுவேன்! 
வெ.நாராயணன், சென்னை: ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு குறித்து... 
நல்ல மாற்றம். அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டே இதை செய்திருந்தால், மக்கள் பயன் அடைந்திருப்பர்!
எஸ்.கே.மகேந்திர வர்மன், திண்டுக்கல்: த.வெ.க.,வின் மதுரை மாநாட்டில், அதன் தலைவர் விஜய் பேசியது பற்றி, தங்களின் கருத்து என்ன? 
தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் என்ன செய்யப் போகிறார் என்பதை பற்றி, ஒரு வரி கூட பேசவில்லை, விஜய். மற்ற கட்சிகளை குறை கூறுவதற்கும், நையாண்டி செய்வதற்குமே, ஒரு மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்! 
வெ.சென்னப்பன், நீலகிரி: சிவகங்கை அருகே, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெற்ற மனுக்கள், ஆற்றில் மிதந்துள்ளனவே... 
அதற்கு அவர்களது கட்சியினரும், அதிகாரிகளும், பிரபல மரியாதை ராமன் கதையில் வருவது போல், 'இரும்பை எலி தின்று விட்டது; குழந்தையை பருந்து துாக்கிக் கொண்டு போய் விட்டது' என்பது போல், 'ஆபீசில் புகுந்து திருடிட்டாங்க...' என, கதை கூறுகின்றனர்!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: ஹலோ, டீ வாங்கி வரும் ஆபீஸ் பையன் ஸாரே... டீ, காபி விலை உயர்ந்து விட்டதே... பொறுப்பாசிரியரிடம் அதிகப்படியாக பணம் கேட்டு போராடுவீரா...
பொறுப்பாசிரியர், எனக்கு தான் பதவி உயர்வு கொடுத்து விட்டாரே! டீ, காபி வாங்கும் பொறுப்பு, இன்னொரு அலுவலக உதவியாளருடையது. எனவே, எனக்கு அந்த பிரச்னை இல்லை; பொறுப்பாசிரியரிடம், அந்த உதவியாளர் கேட்டுக் கொள்வார்! 
* கே.காசி, வந்தவாசி: அமெரிக்க அதிபருக்கு, இந்தியா மீது ஏன் இவ்வளவு வன்மம்? 
இந்தியா வல்லரசாக உருவாவதை, அதிபர் டிரம்ப்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த பொறாமையின் வெளிப்பாடு தான் அவரின் வன்மம்! 
* சி.ரகுமுருகன், விழுப்புரம்: 'சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத் துடிப்பு...' என, முதல்வர் ஸ்டாலின் சொல்வது, கொஞ்சம் ஓவர் அல்லவா? 
சென்னையின் இன்றைய ரோடுகளின் நிலைமையையும், ஒரு சிறிய மழைக்கே நீர் தேங்கி நிற்கும் அவலத்தையும், குப்பை கூளங்களையும் பார்த்தால், 'இதய நோய்' வந்தது போல் உள்ளது; அதன் துடிப்பு தான் கேட்பதில்லை! 
ப.சோமசுந்தரம், சென்னை: கேரள மாநிலம், வடசேரி அரசு பள்ளியில் பயிலும், 10ம் வகுப்பு மாணவர்கள், தெரு நாய்களை விரட்டும், 'எலக்ட்ரானிக் சர்க்யூட்' மந்திரக்கோல் தயாரிப்பதை கவனித்தீர்களா? 
இந்திய அரசு, அந்த மாணவர்களை ஊக்குவித்து, அந்த மந்திரக்கோலை நாடு முழுவதும் சந்தைப்படுத்த யோசித்தால், அனைவருக்கும் உதவியாக இருக்கும்! 
ஜெ.ரவிக்குமார், காங்கேயம்: தங்கம் விலை, லட்சத்தைத் தொட்டு விடும் போல் தெரிகிறதே... 
ஆமாம். சாமானியர்களுக்கு, தங்கம் என்பது எட்டாக்கனி ஆகிவிடும் போலிருக்கிறது! வங்கி சேமிப்பு, நிலம் மற்றும் வீடு வாங்குவது போன்ற, வேறு மாற்று சேமிப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டும். திருமணங்களுக்கும் இதுபோன்ற சேமிப்புகளையே சீர்வரிசையாக கொடுத்து விடலாம்!                

