
பா - கே
வேலை நிமித்தம், ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று, அங்கேயே குடும்பத்துடன், 'செட்டில்' ஆகிவிட்ட நண்பர் ஒருவர், அவரது உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக, சமீபத்தில் சென்னை வந்திருந்தார். விழா எல்லாம் முடிந்து, மீண்டும் ஆஸ்திரேலியா கிளம்புவதற்கு முதல் நாள், என்னையும், லென்ஸ் மாமாவையும், கிழக்கு கடற்கரை சாலையில், 'பீச்'சை பார்த்தபடி அமைந்திருந்த, தன், 'கெஸ்ட் ஹவுஸ்'க்கு அழைத்திருந்தார். நாங்கள் சென்றபோது, அரைகால் டவுசரும், டி-ஷர்ட்டும் அணிந்தபடி பால்கனியில் அமர்ந்து, கடலை ரசித்துக் கொண்டிருந்தார்.
எங்களை வரவேற்று, நலம் விசாரித்தார். மாமாவுக்கு பிடித்த, ஸ்காட்லாந்து ஸ்பெஷல், 'ஜெமிக்சன்' என்ற உ.பா., பாட்டில் இரண்டை கொடுத்தார். எனக்கு, இரண்டு, 'டெட்ரா பாக்கெட்'களைக் கொடுத்து (கனமான அட்டையில் தயாரிக்கப்பட்ட குப்பி) 'மணி, இது பதப்படுத்தப்பட்ட உயர்தர திராட்சை ஜூஸ். தினமும் கொஞ்சம் அருந்தினால், முகம் பளபளவென்று ஜொலிக்கும்...' என்றார். சங்கோஜத்துடன் அதை வாங்கி கொண்டு, 'ஆஸ்திரேலியாவில் என்ன விசேஷம்?' என்றேன், நான்.
'நத்திங் ஸ்பெஷல்! ஆனால், சமீபத்தில், என் நண்பர்களுடன், ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று வந்தேன்...' என்றார், நண்பர். 'அதைப்பற்றி சொல்லுங்களேன்...' என்றதும், கூற ஆரம்பித்தார்: ஒயின் தொழிற்சாலையில் பார்த்ததை விட, ஒயின் பற்றி பல சுவையான தகவல்கள் உண்டு. முதலில் அதை கூறி விடுகிறேன்...
தென்னை மற்றும் பனையிலிருந்து கள், முந்திரியிலிருந்து பென்னி, பலவிதமான மரப்பட்டை சாராயம், அரிசியிலிருந்து சாராயம் என, விதவிதமான மது வகைகள் உண்டு.
வெளிநாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற, 'விஸ்கி, பிராந்தி, ரம், பீர், டக்கிலா' போன்ற மதுவகைகள், பார்லி என்ற தானியம் மற்றும் கரும்பு போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
ஒயின் தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் அதிகமாக அருந்தப்படுகிறது. ரஷ்யா, வோட்காவுக்கு புகழ் பெற்றது.
நம்ம ஊரில் எப்படி வேத காலம் முதலே சோமபானம் உருவானதோ, அப்படி, கிறிஸ்து பிறப்பதற்கு, 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஒயின் என்ற திராட்சை ரசம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒயின் தயாரிப்பில், இத்தாலி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஆப்ரிக்கா, ஸ்பெயின் மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
திராட்சை வேளாண்மையும், அதன் தனித்தரமுமே, ஒயின் தயாரிப்பில் முக்கியம். 1,000 ரூபாயிலிருந்து, நீண்ட காலத்துக்கு பதப்படுத்தப்பட்ட, கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒயின் வரை, இதற்கு மிகப்பெரிய வரலாறு உண்டு.
உலகமயமாக்கலுக்கு பின், சீனாவின் வளர்ச்சியின் விளைவாகவும், ஒயின் அருந்துவது ஒரு கவுரவமாகவும், மேல்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாகவும் மாறிப் போனது.
'விஸ்கி, பிராந்தி, பீர், ரம், வோட்கா' போன்ற மது வகைகளை குடிக்காதவர்கள் கூட, ஒயின் குடிப்பது இதில் சேர்த்தியில்லை என, பொதுப்படையான கருத்தாக ஆக்கிவிட்டனர். மாமிசம் சாப்பிட்டால், அசைவம், முட்டை சாப்பிட்டால் அது சைவம் என்பது போல, மது ரகத்தில், ஒயின் சமரசமாகி, அதன் விற்பனையை பல மடங்கு உயர்த்தி விட்டது.
சாதாரண டம்ளர்களில் ஒயின் குடிப்பதில்லை. அதற்கென்று தனித்தனி கண்ணாடிக் கோப்பைகள் உள்ளன.
சிவப்பு, வெள்ளை மற்றும், 'போர்ட் ஒயின்' என, ஒவ்வொரு ஒயின் வகைக்கும் தனித்தனி அளவுள்ள கோப்பைகள் உள்ளன. ஒயின் பாட்டிலை திறப்பதே தனிக்கலை. அதற்கென்று தனி திறப்பான் உண்டு. கொஞ்சம் ஏமாந்தால் திறக்கும் போது, மரத்தாலான கார்க், பாட்டிலுக்குள் விழுந்து விடும்.
அடுத்து, கோப்பை நிறைய, ஒயினை ஊற்றக் கூடாது. சிறிய அளவுக்கு கோப்பையில் ஊற்ற வேண்டும். கோப்பையை இரு விரல்களால் கிடுக்கி எடுக்க வேண்டும். கண்ணாடிக் கோப்பைகளை எப்படி பிடிக்க வேண்டும் என்பதற்கு, தனி விதி உண்டு.
டீ கிளாஸை ஆட்டுவது மாதிரி, இரண்டு முறை கோப்பையை சுழற்ற வேண்டும். பின்னர், மெதுவாக, ஒயினை முகர்ந்து பார்த்து, கொஞ்சம் வாயில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை வாயில் வைத்து, நாவால் துழாவி, விழுங்கி ஒரு நிமிடம் கழித்து ஓ.கே., என, சொன்ன பின்னரே, மேற்கொண்டு நம் கோப்பையில் ஒயின் ஊற்றுவர். சரியில்லை என, சொன்னால், வேறு தரமான பாட்டில் ஒயின் வரும்.
ஒருமுறை, தனியாக உணவுண்ணும் போது, ஒயின் குடிக்க வேண்டி வந்தது. பெரிய, 'எக்ஸ்பர்ட்' மாதிரி நானும், கோப்பையை ஆட்டி முகர்ந்து, வாயில் வைத்து துழாவி, ஏதோ சரியில்லை என்பது மாதிரி முகத்தை வைத்துக் கொண்டேன்.
'கிளைமாக்ஸ்' காட்சியில் பரபரப்பாக கண்கொட்டாமல் பார்க்கும் ஒரு சினிமா ரசிகனை போல், 'வெயிட்டர்' என் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தார். ஓ.கே., என, சொன்னதும், 'வெயிட்டருக்கு' திருப்தி. அதே சமயம், ஒயினை பற்றி நன்றாக தெரிந்த நண்பர்களோடு இருந்தால், உண்மையிலேயே நல்ல ஒயினை குடித்த திருப்தி கிடைக்கும்.
இதைவிட இன்னொன்று முக்கியம்... மீன் சாப்பிடும் போது வெள்ளை ஒயின், மாமிசம் சாப்பிடும் போது சிவப்பு ஒயின் என்ற வரைமுறைகள் உண்டு. என்னவோ, போனோமா இரண்டு, மூன்று கிளாஸ் அடிச்சோமா, மீன், கோழி, மட்டன் என்று மானாவாரிக்கு வெட்டினோமா என, இருக்க முடியாது. ஒயின் குடிப்பதில் இவ்வளவு சட்ட திட்டங்கள் உள்ளதை நினைத்தாலே, நம்மை போதையில் ஆழ்த்தி விடும்.
ஒயின் தயாரிக்கும் இடங்களை, 'ஒயினரி' என்கின்றனர். நானும், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியாவில் சிட்னி, அமெரிக்காவில் கலிபோர்னியா போன்ற இடங்களில் உள்ள, ஒயினரிகளுக்கு சென்று வந்த அனுபவங்கள் ஏராளமாக உள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவில், சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து நாபா பள்ளத்தாக்குக்கு செல்லும் ரயில் பயணமும், அங்குள்ள பல வகையான, ஒயினரிகளின் அனுபவங்களைப் பற்றி பல புத்தகங்கள் எழுதலாம்.
ஒயினரிகளில் என்ன சிறப்பென்றால், கட்டணம் கட்டி இவ்வளவு ஒயின் வகையைச் சுவைக்கிறோம் என, முன் கூட்டியே சொல்லி விட வேண்டும். ஒரு சில நாடுகளில், 'ஒயின் டேஸ்டிங், பியர் டேஸ்டிங், விஸ்கி டேஸ்டிங்' இலவசம். ஆனால், சில நாடுகளில் கட்டணம் உண்டு.
- இப்படி சொல்லி முடித்தார், நண்பர். வெகு ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'மேரா தோஸ்த்... அடுத்த முறை இதுபோன்ற, ஒயினரிகளுக்கு போவதாக இருந்தால், என்னையும் கூட்டிட்டு போப்பா...' என்றார். 'மணியும், நீங்களும் வெளிநாட்டு, 'டூர்' போய் ரொம்ப வருஷமாச்சே... ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள். ஜமாய்த்து விடுவோம்...' என்றார், நண்பர். 'மணி, பொறுப்பாசிரியர்...' என, ஆரம்பிப்பதற்குள், நான் முந்திக்கொண்டு, 'மாமா, நீங்களே, 'பர்மிஷன்' வாங்கி விடுங்கள்...' என்றதும், கடுப்பானார், லென்ஸ் மாமா.

