
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: 'சென்னையில், 20 செ.மீ., மழை பெய்தாலும், அதை தாங்கும் திறன், மாநகராட்சிக்கு உள்ளது...' என, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறி இருக்கிறாரே...
படகுகள், கிரேன்கள், தண்ணீர் இரைக்க மின் மோட்டார்கள், மத்திய பாதுகாப்பு படை அனைத்தும் தயார் என்பதை, இவ்வாறு கூறுகிறார்! சரியான தமாஷ் அமைச்சர்!
எம்.ராஜேந்திரன், திருச்சி: வெளிநாட்டினர் கூட, இந்தியாவுக்கு, குறிப்பாக சென்னைக்கு வந்து, நோய்க்கான சிகிச்சை எடுத்துச் செல்கின்றனரே...
நம் நாட்டில், மருத்துவத்துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளதே, இதற்கு காரணம். நம் மருத்துவமனைகளில், உலகத் தரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நாடுகளை விட, கட்டணங்களும் மிகக் குறைவு. இதனால், பலரும் நம் நாட்டு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்!
வி.ஆதித்த நிமலன், கடலுார்: தமிழகத்தை சேர்ந்த, சி.பி.ராதாகிருஷ்ணன், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து...
நம் தமிழக மண்ணின் மைந்தர், சி.பி.ராதாகிருஷ்ணன். பா.ஜ., கட்சியிலும் நல்ல பதவிகளில் இருந்துள்ளார். எம்.பி.,யாகவும், ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். அவர், துணை ஜனாதிபதி ஆனது நமக்கெல்லாம் பெருமை!
தேவா, திண்டுக்கல்: 'திருடுவது என், 'ஹாபி!' திருடாமல் என்னால் இருக்க முடியாது...' என, தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி பாரதி கூறியுள்ளாரே...
பணம், புகழ், வசதிகள் வந்த போதிலும், திருடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, சிலர் திருடுவர். இது, ஒருவிதமான மனநோய். மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். பிரபல, பழம்பெரும் ஹிந்தி நடிகை ஒருவருக்குக் கூட இந்த நோய் உண்டு!
சோ. ராமு, திண்டுக்கல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை என்றதும், நேபாள நாட்டில் வன்முறை வெடித்து விட்டதே...
வன்முறைக்கு முக்கிய காரணம், சீனா! இமயமலை அடிவாரத்தில் உள்ள நேபாளத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று முயற்சித்தது சீனா. அது நடக்காததால் நேபாள இளைஞர்களை துாண்டி விட்டு, இப்படி ஒரு கலவரத்தை நடத்தியுள்ளது!
* எம்.முகுந்த், கோவை: 'தேர்தல் நாள் வரையிலும், பசி, துாக்கம், ஓய்வை மறந்து, தொண்டர்கள் உழைப்பை கொடுங்கள்...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின். தேர்தலில் வென்ற பிறகு, வாக்குறுதிகளை மறந்து, கட்சியினரின் வருமானத்தை மட்டுமே பார்க்கவா?
மிகச் சரியாக சொன்னீர்கள். அதுதானே அவர்களது நோக்கம்! 'மக்கள் சேவை மகேசன் சேவை' என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கெல்லாம் தம் முன்னேற்றமே குறிக்கோள்!
எம்.சம்சு, துாத்துக்குடி: 'கனவுகள் எல்லாம் மெய்ப்படுவதில்லை...' என, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியுள்ளாரே...
அது அவரது பிரச்னை போலும்; கனவுகள் எதுவும் பலிக்கவில்லையோ என்னவோ!
* மு.நாகூர், ராமநாதபுரம்: 'வெளிநாட்டினர் முதலீடு செய்ய, முதலில் தேர்வு செய்வது தமிழ்நாட்டைத் தான்...' என, துணை முதல்வர் உதயநிதி, பெருமையுடன் கூறியுள்ளாரே?
உதயநிதி சொல்வது முற்றிலும் உண்மையே! வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முதலில் நம் மாநிலத்தை தான் தேர்வு செய்கின்றனர்; ஆனால், இங்குள்ள, 'கட்டிங் டிமாண்டை' தாக்கு பிடிக்க முடியாமல், வேறு மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர்!

