
பா - கே
மெரீனா பீச், வழக்கமான பீச் நண்பர்களுடன், அக்கால சினிமா நிருபர் ஒருவர் இணைந்திருந்தார். சமீபத்தில் நடந்த கரூர் அசம்பாவிதத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர், பீச் நண்பர்கள். 'நடிகர்களை நேரில் பார்க்க மக்கள் கூடுவது புதுசா என்ன? எம்.ஜி.ஆருக்கு வராத கூட்டமாப்பா. எம்.ஜி.ஆர்., எவ்வளவு சாதுர்யமா, அக்கூட்டத்தை, கட்டுப்படுத்துவார் தெரியுமா?' என்றார், சி.நிருபர். 'மேடையில் இருப்பவரால், எப்படி கூட்டத்தை சமாளிக்க முடிந்தது?' என்றேன், நான். சொல்ல ஆரம்பித்தார், சி.நிருபர்: அந்தக் காலத்தில், தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தாலும், எம்.ஜி.ஆரை பார்க்க, ஒருநாள் முன்னதாகவே, கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து கூடிவிடுவர், ஏராளமான மக்கள்.
எம்.ஜி.ஆர்., மேடைக்கு வரும்போது, மக்கள், ஆவலுடன் அலைமோதி முன்னேறி வருவர். ஆனாலும், அவர்களை நெறிபடுத்த, எம்.ஜி.ஆர்., கையாண்ட நுணுக்கமான தந்திரங்கள் தான் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருந்தது.
இப்போதுள்ள நடிகர்கள், தங்கள் பாதுகாப்புக்காக, 'ஜிம் பாய்ஸ்' வைத்திருப்பது போல், எம்.ஜி.ஆர்., தன்னுடன், 'ஸ்டன்ட்' நடிகர்களை வைத்திருந்தார். அவர்கள், அழகாக, கூட்டத்தை ஒழுங்குபடுத்தி விடுவர்.
தான் கலந்து கொள்ளும் கூட்டத்தில், பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இருந்தால், கூட்டம் முடிந்ததும், 'முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேறட்டும். ஆண்கள் அப்படியே அவரவர் இடத்தில் நிற்கவும். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல இருக்கிறேன்...' என்று மைக்கில் அறிவிப்பார்.
அவ்வளவுதான், ஆண்கள் அப்படியே சிலை போல் நின்று விடுவர். பெண்களும், குழந்தைகளும் வெளியேறியதும், 'உங்களிடம் சொல்ல எதுவும் இல்லை. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்காமல் இருக்கத்தான் அப்படி சொன்னேன்...' என்று கூறி, கூடியிருந்தவர்களைப் பார்த்து கும்பிடுவார். மக்களும் அமைதியாக கலைந்து செல்வர்.
இதுபோல் தான், அவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், புதிய புதிய யுக்திகளை கையாள்வார்...' என்று கூறினார், சி.நிருபர்.
இதைக் கேட்டதும், 'கச்சேரி'யில் மும்முரமாக இருந்த லென்ஸ் மாமா, 'விஜயகாந்தும் கூட்டத்தை பிரமாதமாக சமாளிப்பார். அவர் கலந்து கொண்ட, ஒரு கூட்டத்திற்கு சென்ற போது, நானே நேரிடையாக பார்த்துள்ளேன்...' என்றார். எல்லாரும் அவரது முகத்தையே பார்க்க, திக்கி, திக்கி சொல்ல ஆரம்பித்தார்: மேடையில், விஜயகாந்த் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அவரது பார்வை நாலாபுறமும் சுற்றி சுழலும். கூட்டத்தில் யாராவது முண்டியடித்து முன்னேறினாலோ அல்லது கூச்சல் போட்டாலோ, உடனே, மைக்கிலேயே, அவனை நோக்கி கை நீட்டி, சகட்டுமேனிக்கு திட்டி, தன் தொண்டர்களிடம், அவனை பிடித்து, வெளியே அனுப்பும்படி கூறுவார். சமயத்தில், இவரே வேட்டியை மடித்து கட்டி, நாக்கை துருத்தியபடி மேடையை விட்டு கீழிறங்கி, கலாட்டா செய்தவனை ஓங்கி ஒரு குத்து விடுவார். அப்புறம் கூட்டம் கட்டுக்குள் வந்து விடும்.
இவரும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவார், என்றார், மாமா.
'இன்று, தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், மக்கள் இது போன்ற நெரிசல் மிகுந்த இடங்களுக்கு போகாமல் இருப்பது நல்லது...' என்றார், சினிமா நிருபர். அதை ஆமோதித்தபடி, அங்கிருந்து கிளம்பினோம்.
ப
எழுத்தாளர், ராணி மைந்தன் எழுதிய, 'வந்த பாதை - ஒரு பார்வை!' நுாலில் படித்தது: ஜப்பான் நாட்டில் குளியல் போடுவது சற்று சிக்கலான, நமக்கு பழக்கமில்லாத அனுபவம்.
ஜப்பானியர்கள், பெரும்பாலும் இரவில் தான் குளிப்பர். ஒருநாள் இரவு 10:00 மணி அளவில் முகம் கழுவிக்கொண்டு வந்து படுக்கலாம் என்று, ஹோட்டலின் பொது, 'வாஷ்ரூமை' திறந்து உள்ளே போன நான், அதே வேகத்தில் கதவை மூடிவிட்டு திரும்பினேன். உள்ளே நிறைய ஜப்பானிய ஆண்கள் நிர்வாணமாக குளித்து கொண்டிருந்தனர்.
குளியலறையில் ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல், 10 பேர் குளிக்கும் அளவுக்கு பெரிய தொட்டி. அதில், வெதுவெதுப்பான நீர் நிரம்பியிருந்தது. தொட்டிக்குப் பக்கத்தில் அறையின் உள் சுவரையொட்டி ஆங்காங்கே ஓர் அடி உயரம் கொண்ட முக்காலிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் உட்கார்ந்து பார்த்தால் எதிரே முகம் தெரியும் அளவுக்கு கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. கண்ணாடிகளுக்கு கீழேயே குழாய்கள். பிளாஸ்டிக் பக்கெட்டுகள். நின்று குளிக்க இன்னொரு, 'ஷவர்' அமைப்பு.
உடைகளைக் கழற்றி அதற்கென வைக்கப்பட்டிருக்கும், 'டிரஸ் லாக்கர்'களில் வைத்துவிட்டு, குளியலறைக்குள் செல்கின்றனர். முக்காலிகளில் அமர்ந்து கொள்வர். குழாயைத் திருப்பி பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தண்ணீர் நிரப்பி, உட்கார்ந்து கொண்டே, சோப் போட்டு குளிப்பர். அப்படி குளிக்கும் போது அழுக்கு நீரோ, சோப்பு நுரை நீரோ அருகிலுள்ள பெரிய குளியல் தொட்டிக்குள், கொஞ்சமும் சிதறாதபடி ரொம்பவும் கவனமாக இருப்பர்.
அப்படி குளித்து முடித்ததும், அப்படியே எழுந்து போய் குளியல் தொட்டிக்குள் இறங்கி, கழுத்தளவு நீரில் படுத்துக் கொள்கின்றனர் அல்லது உட்கார்ந்து கொள்கின்றனர். குளிப்பவர்களுக்கு இடையில் தடுப்பு ஏதும் கிடையாது. அந்த வெதுவெதுப்பான நீரில் விரும்பிய நேரம் படுத்து கிடக்கின்றனர். ஒரு மணி நேரம் தாண்டியும் படுத்திருப்பவர்கள் பலர். நீரின் வெதுவெதுப்பு நரம்புகளுக்கு புத்துணர்வை அளிப்பதால் சோம்பலும், சோர்வும், 'குட்பை' சொல்லி போய் விடும் என்கின்றனர்.
ஜப்பானியர்களுக்கு, குளியல் என்பது உடலின் அழுக்கு, வியர்வை போக்கும் ஒரு சடங்கு மட்டும் அல்ல. 'ரிலாக்சேஷன்' தருகிற ஒரு பயிற்சியும் கூட.
ஆனால், இந்த மாதிரியான குளியல் நமக்கு கொஞ்சமும் சரிப்பட்டு வராது.
- இப்படி எழுதியிருக்கிறார், எனக்கும் இதுபோன்ற குளியல் முறையில் உடன்பாடு இல்லை. உங்களுக்கு...

