
எம்.பி.முருகேஷ், ஈரோடு: தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும், சீமானை போல், தனித்து நின்று போட்டியிடும் காலம் வருமா?
வாய்ப்பே இல்லை. ஒருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது; தேர்தலுக்குப் பின், மீண்டும் கூட்டணியையே நாடுவர். ஆனால், ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டால் தான், அவர்களின் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியும்!
டி.எல்.குமார், விழுப்புரம்: பீஹார் தேர்தலை முன்வைத்து, 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை...' என்று அறிவித்துள்ளாரே, லாலு மகன் தேஜஸ்வி யாதவ்...
நம்மூர் அரசியல்வாதிகள், 'அடித்து' விடுவது போல், அவரும், 'அடித்து' விட்டிருக்கிறார். சாத்தியமில்லாத வாக்குறுதி என்று, அவருக்கும் தெரியும்; மக்களுக்கும் புரியும்!
* எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்: 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்...' என்று, முதல்வர் ஸ்டாலினும், அவரது சகாக்களும் வாய்ப்பந்தல் போட்டுவந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், 26 குழந்தைகள், வட மாநிலங்களில் இறந்து, மிகப்பெரிய தலைகுனிவு தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளதே?
அதுமட்டுமா... கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள், லஞ்சம், ஊழல் என, தமிழகமே தலைகுனிந்து போயுள்ளதே! இன்னும் வேறு என்ன பாக்கி இருக்கிறது?
எஸ்.தியாகராஜன், மகாபலிபுரம்: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, அரசு பள்ளியில் நடத்தியதுடன், 'மாணவர்களின் வகுப்புகள் தடைபடுமே?' என்று கேட்டதற்கு, 'ஒருநாள் தடைபட்டால், ஒன்றும் ஆகிவிடாது...' என, அமைச்சர் துரைமுருகன், பொறுப்பற்ற முறையில் பதில் கூறி இருக்கிறாரே...
மாணவர்களின் எதிர்காலம் குறித்த இந்த அரசின், 'அக்கறை'யை துரைமுருகன், இந்த ஒரு பதில் மூலம் விளக்கி விட்டாரே!
சா.சொக்கலிங்கம் ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை மாவட்டம்: 'ராகுலுக்கு நோபல் பரிசு வேண்டும்...' என, காங்., செய்தி தொடர்பாளர், சுரேந்திர ராஜ்புத் கூறுகிறாரே?
'இந்த ஆண்டின் மிகச் சிறந்த காமெடி...' என, சிரித்து மகிழ்வோம், சொக்கலிங்க ஆதித்தன்!
என்.ஜெயம், மேல்புவனகிரி: ஆம்னி பஸ் கட்டணம், 4 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதே... 'கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...' என, போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரித்துள்ளாரே...
ஒவ்வொரு பண்டிகை காலம் வரும்போதும், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் அடாவடி செயலும், அதை கண்டிப்பதாக, ஒவ்வொரு அரசும் சப்பைக்கட்டு கட்டுவது வாடிக்கை தானே! மக்களோ, எப்படியாவது சொந்த ஊர் சென்று விட வேண்டும் என்ற உந்துதலில், இந்த, 'அட்ராசிட்டி'யை பொறுத்துக் கொள்கின்றனர்!
* ஆர்.ஜெயபாரதி, சாத்துார்: 'ஒன்பதாம் வகுப்புக்கு முன்பிருந்தே, பாலியல் கல்வியை வழங்க வேண்டும்...' என்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்கு, மத்திய - மாநில அரசுகள் செவிசாய்க்குமா?
எல்லா அரசும் செவிசாய்க்கத்தான் வேண்டும். பள்ளிகளில் சிறுவயது முதலே, பாலியல் சீண்டல் பற்றிய விழிப்புணர்வை மாணவ-மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டும். பெற்றோரும், குழந்தைகளுக்கு எது சரி, எது தவறான தொடுதல் என்பதை கற்பிக்க வேண்டும்!
பி.ஜி.பி.இசக்கி, நெல்லை: தங்களின், 'அம்பாசிடரும்' உங்களைப் போல், எப்போதும், 'பிஸி'தானோ!
ஆமாம்! அவர் தான் கோபால் பல்பொடி விளம்பரம் போல், 'இந்தியா, இலங்கை, மலேஷியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா' என்று பறந்து பறந்து மணிமேகலை பிரசுரத்தின் புத்தகங்களையும், என் புத்தகங்களையும் விற்பனை செய்கிறாரே!

