
முன்கதைச்சுருக்கம்: தன் மகள் தீபாவின் காதலனை மறுநாள் சந்திப்பதாக கூறி, துாங்க சென்ற ஞானசேகரன், அன்று இரவே இறந்து விடுகிறார். அவரது மறைவை தாங்கிக் கொள்ள முடியாமலும், அப்பாவின் திடீர் மறைவுக்கு காரணம் தெரியாமலும் குழம்பினாள், தீபா.
ஞானசேகரன் வாழ்க்கையில் ரகசியங்களும் உண்டா?
தன் மனைவியிடமும், மகளிடமும் அன்பை குறைவின்றிப் பொழிந்த தன் அப்பாவின் வாழ்வில், வெளியில் சொல்ல முடியாத ஏதோ ரகசியங்கள் இருக்கக்கூடும் என்பதையே தீபாவின் மனம் நம்ப மறுத்தது.
வெறும் கேள்விகளாலும், சந்தேகத்தாலும், அழுகையாலும் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. இழக்கப்போவதுதான் அதிகம் என்று அவளுள் ஓர் எண்ணம் அழுத்தம் பெற்றது. அப்புறம் தான், தீபாவின் மனது கொஞ்சம் கொஞ்சமாக இறுகலாயிற்று.
''தீபூ...''
குரல் கேட்டு சிலிர்த்துத் திரும்பினாள், தீபா.
திலகன்.
அவன் முகத்தில், ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்டவன் போல் ஒரு திடுக்கிட்ட திகைப்பு.
''தீபு, என்ன இது? நான்... எனக்கு...'' அவன் குரல் தடுமாறியது.
அவனைப் பார்த்ததும், கட்டுப்பாட்டை மீறி, தீபாவின் நெஞ்சிலிருந்து அழுகை திமிறி, வெளியே வந்தது.
''திலக், அப்பா உன்ன இன்னிக்குப் பார்க்கறேன்னு...'' என்று வாக்கியத்தை முடிக்கா மலேயே விம்மினாள், தீபா.
''அப்பாவுக்குப் பிடிக்கும், பார்க்க வரும்போது, கொத்து ரோஜாப்பூவை வாங்கிட்டுவான்னு சொன்னியே இதுக்காகத்தானா?'' என்று கண் கலங்கினான், திலகன்.
வாங்கி வந்திருந்த ரோஜா மாலையை குளிர்ப்பெட்டியின் மீது சாத்தினான்.
சலனமற்ற அவர் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஓரமாக ஒரு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்திருந்த தீபாவின் அம்மா, மஞ்சுளாவை நெருங்கி, அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். அவன் கைகளைத் தன் நெற்றியில் பதித்துக்கொண்டு, அவள் வெடித்து அழுதாள்.
''உங்களைப் பாக்காமலேயே போயிட்டாரே,'' என்று ஏதோ சொல்லப் பார்த்து, வார்த்தைகள் குழறித் தவித்தாள்.
''எனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான்,'' திலகனின் குரல் உலர்ந்து தேய்ந்தது.
'அழவிடாமல் போய் விடுங்கள்...' என்று டாக்டர் கண்களாலேயே உத்தரவிட, தன் கைகளை விடுவித்து, தீபாவை நெருங்கினான், திலகன்.
''திடீர், 'ஹார்ட் அட்டாக்'ன்னு சொல்றாங்களே, எந்த அறிகுறியும் இல்லியா?''
இது, 'ஹார்ட் அட்டாக்' இல்லை, மீடியாவிலும், மற்றவர்களிடமும் அப்படிச் சொன்னது ஒரு பொய் என்று மனதில் இருப்பதையெல்லாம் அவன் மடியில் இறக்கிக் கொட்டித் தீர்க்க வேண்டும். ஆனால், தள்ளாத வயதில் ஒரு சித்தி கைத்தாங்கலாக டாக்ஸியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும், தீபா கண்களைத் துடைத்துக் கொண்டு, அங்கு போக வேண்டியிருந்தது.
திலகனை இயலாமையுடன் பார்த்து விலகினாள், தீபா.
மஞ்சுளாவின் அருகில் ஒரு நாற்காலி போட்டு சித்தியை அமர்த்திவிட்டு, தீபா நிமிர்ந்த போது, கையில் பெரிய மலர் மாலையுடன் வீட்டுக்குள் நுழைபவரை பார்த்தாள்.
''வாங்க, பத்மனாபன் சார்,'' என்று, அவரை எதிர்கொண்டார், முத்துராமன்.
பத்மனாபன், கம்பெனியின் சட்டப்பிரிவு நிபுணர். முக்கால் வழுக்கையும், நரைத்த புருவங்களும், நெற்றியின் குறுக்காக திரிசூர்ணமும் விளங்க அவர் மாலையைச் சாத்தி விட்டு வந்தார்.
''நேத்து நைட் என்னைப் பார்க்க வந்திருந்தாரே... அப்பக்கூட இப்படி ஆகும்ன்னு நெனைக்கலியே!'' அவர் குரல் தழுதழுத்தது.
''அப்பா எதுக்கு உங்களைப் பார்க்க வந்தார், அங்கிள்?''
''இப்ப அதை பேச வேண்டாம்மா,'' என்று அவசரமாக அவர் மஞ்சுளா இருந்த பக்கம் நகர்ந்து விட்டார்.
முத்துராமனை நெருங்கினாள், தீபா.
''பெசன்ட் நகர் மயானத்தில், மதியம் ரெண்டு மணிக்கு கொண்டு வரச்சொல்லி, நேரம் கொடுத்துட்டாங்க. வேனுக்கு சொல்லியாச்சு. அய்யருக்கு சொல்லியாச்சு. பேப்பர்ல எந்த போட்டோ போட்டு அஞ்சலி செலுத்தணும்ன்னு இப்பதான், 'செலக்ட்' பண்ணிக் கொடுத்திட்டு வரேன்,'' என, முத்துராமன் படபடவென்று சொல்லிக்கொண்டே போக, அவரைக் கையமர்த்தினாள், தீபா.
''அதெல்லாம் இருக்கட்டும், அங்கிள். உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்.''
நிமிர்ந்தார். அவர் முகத்தில் பெரும் வேதனை குடி கொண்டிருந்தது. கண்கள் தீபாவை சந்திக்க தயங்கி விலகி, தாழ்ந்தன.
''நானே பேசணும்ன்னு தான் நெனைச்சிட்டிருக்கேம்மா. ஆனா இப்ப எதுவும் வேணாம். காரியம்லாம் முடியட்டும். அப்புறம் பேசலாம்,'' என்றவரின் குரல் தடுமாறியது.
பத்மனாபனும், முத்துராமனும் எதையோ மறைக்கின்றனர். மனதில் புதைத்து ரகசியமாக்கி இருக்கின்றனர். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில், எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, அதுபற்றி அவர்களிடம் கேட்க முடியுமென்று தோன்றவில்லை.
''நல்ல மனுஷராச்சே, இவருக்கு போய் ஹார்ட் அட்டாக்கா?'' என்று யாரோ கேட்டுக்கொண்டு குறுக்கில் வர, அதையே சாக்காக்கி, சட்டென்று விலகி சென்றார், முத்துராமன்.
எதற்காகவும் காத்திருக்காமல், நேரம் நகர்ந்தது.
இ றுதி ஊர்வலத்துக்குத் தயாராக, வாசலில் அலங்காரம் செய்யப்பட்ட வேன் வந்து நின்றது.
குளிர்ப்பெட்டியின் மீதிருந்து, ஞானசேகரனை மறைத்திருந்த மலர் மாலைகளும், வளையங்களும் விலக்கப்பட்டன.
ஊர்வலமாகத் தொடரப் போகிறவர்கள், தாமாகவே தங்களை ஒழுங்குபடுத்தி, வரிசைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.
அய்யர் மந்திரங்களை உரக்கச் சொல்லி முடிக்க, மஞ்சுளா, தலைவிரி கோலமாக கதறி, கண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தாள்.
தீபாவைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே, சில உறவினர்கள் கடந்து போயினர். கம்பெனியின் ஊழியர்கள் பலரும் பரபரவென்று இயங்கி கொண்டிருந்தனர்.
அவர்களில் எத்தனை பேருக்கு உண்மையான துக்கம் இருக்க முடியும், எத்தனை பேருக்கு தங்கள் பணி என்ன ஆகும் என்ற அச்சம் இருக்கும் என்று, தீபாவின் மனதில் வக்கிரமாக ஓர் எண்ணம் வந்தது.
அப்போது, வாசலில் ஓர் ஆட்டோ வந்து நின்றது.
ஆட்டோவிலிருந்து ஓர் இளம்பெண் இறங்கினாள். 26 வயதிருக்கலாம். அவள் கண்களும், முகமும் சிவந்திருந்தன. ஐந்தடி ஆறங்குலம் இருந்தாள். கறுப்பு நிறத்தில் ஒரு பருத்திப்புடவையை உடம்போடு ஒட்டித் தழையத்தழைய அணிந்திருந்தாள். கூந்தல் அடர்த்தியாய் இருந்தது. கழுத்தை மூடுவது போல் காலர் வைத்த ரவிக்கை.
பின்னாலேயே, 17 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபனும் இறங்கினான்.
யார் இவர்கள்?
அந்தப் பெண்ணின் முகத்தில் அழுகையின் துவக்கமும், கலவரமான ஒரு தவிப்பும் தெரிந்தன. தீபாவை நிமிர்ந்து பார்த்தாள். உதடு துடிக்க, தீபாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
''தீபா?'' என்றாள், கேள்வியாய்.
''யெஸ், நீங்க?''
''என் பேரு, ஆராதனா. இது என் தம்பி, வருண். அப்பாக்கு என்னாச்சு?''
''அப்பா! யா... யாரைச் சொல்றீங்க?''
''அவரைத் தான்,'' என, ஞானசேகரனை காட்டினாள்.
அனுமதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்பது போல, தீபாவை நகர்த்திவிட்டு, உள்ளே நுழைந்தாள். பின்னாலேயே அந்தப் பையனும்.
அங்கிருந்த அத்தனை பேருடைய பார்வைகளும், ஆராதனாவைத் தொடர்ந்தன.
ஐஸ் பெட்டியிலிருந்து எடுத்து கீழே வைத்திருந்த, ஞானசேகரனை பார்த்ததும், அவள் வெடித்து அழுதாள். அப்படியே மண்டியிட்டு அவர் பாதங்களில் நெற்றியைப் பதித்தாள். அழுகையில் குலுங்கியது, முதுகு.
அவள் தம்பி சற்றுத்தள்ளி, இரு கைகளையும் கூப்பியவாறு நின்றிருந்தான்.
ஆராதனா திரும்பினாள்.
''வாடா, வருண். அப்பா மூஞ்சியை அப்புறம் பார்க்க முடியாது. கடைசியா ஒரு தடவை பார்த்துக்க.''
அப்பா, அப்பா, அப்பா!
மீண்டும் மீண்டும் அவள் ஞானசேகரனை அப்பாவென்று விளித்தது, சுற்றியிருந்தவர்களிடம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
''என்ன தீபா இது? யார் இவங்க?'' என்று அவள் காதில் கிசுகிசுத்தான், திலகன்.
தீபா என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தாள். அத்தனை பேருக்கு நடுவில் மிக தர்மசங்கடமான சூழல். மஞ்சுளா இருந்த பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
அவள் கண்களிலும் திகைப்பு தெரிந்தது. திகைப்பை மீறி ஓர் ஆவேசம் பிறந்தது.
''சொன்னேனே தீபா. உங்கப்பா நமக்கு துரோகம் பண்ணிட்டிருக்காருன்னு. பாரு, யார் யாரோ வந்து இப்ப சொந்தம் கொண்டாடறாங்க,'' என்று கிரீச்சிட்டு எழுந்தாள், மஞ்சுளா.
''ஏய், யாருடி நீ? இங்க வந்து டிராமா ஆடறே?'' என்று சித்தி முன் வந்து ஆராதனாவின் முடியைப் பிடித்து இழுத்தாள்.
ஆராதனா நிமிர்ந்தாள். கைகளைக் கூப்பினாள். கன்னங்களில் கண்ணீர் கோடுகள் இறங்கிக் கொண்டிருந்தன.
''நாடகம் ஆட வரல. எங்கப்பாக்கு கடைசி மரியாதை செலுத்தத்தான் வந்தோம்,'' என்றபடி, புடவைத் தலைப்பால் நாசூக்காக கண்களை ஒற்றிக் கொண்டாள்.
தீபாவை நெருங்கி, ''ஏதாச்சும், 'ஹெல்ப்' தேவையா?'' என்றாள்.
அவளை எரித்து விடும் பார்வையால் பார்த்தாள், தீபா.
''உனக்கும், எங்கப்பாவுக்கும் என்னடி சொந்தம்?'' என்று கனல் கக்கினாள்.
'' அதை அவர் இதுவரைக்கும் உங்ககிட்ட சொல்லலைன்னா, சொல்றதுக்கு எனக்கும் உரிமையில்ல.''
''என்னடி, 'டயலாக்' பேசறே? சொல்றதுக்கு அப்படியென்னடி கூச்சம்?''
''ஹலோ!'' என்று குறுக்கே வந்தான், வருண்.
''இது சாவு வீடு. அநாவசிய சிக்கல் வேண்டாம். ஆனா, வார்த்தைக்கு வார்த்தை அடி புடின்னு மரியாதை இல்லாம எங்கக்காவைப் பேசினா, நான் சும்மா இருக்க மாட்டேன்!''
''என்னடா செய்வே?''
பதில் சொல்ல வாயெடுத்தபோது, ''வருண்!'' என்று அதட்டினாள், ஆராதனா. துடிக்கும் உதடுகளை அடக்கினான், வருண்.
''எனக்கும், இவருக்கும் என்ன உறவுன்னு இப்ப சொன்னா உங்க யாருக்கும் புரியாது. நிதானமா பேசுவோம். இப்ப ஆக வேண்டியதைப் பார்ப்போம்.''
''இப்ப ஆக வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். நீ வெளிய போ,'' என்று உச்சக் குரலில் கத்தினாள், மஞ்சுளா.
''நீங்க யாரா வேணா இருங்க. தயவு செஞ்சு கலாட்டா எதுவும் பண்ணாமப் போயிடுங்க. எது பேசணும்ன்னாலும் அப்புறம் பேசிக்கலாம்,'' என்று, ஆராதனாவை நெருங்கி சொன்னார், முத்துராமன். குரல் ரகசியமாய் இருந்தாலும், அதில் போதிய அழுத்தம் இருந்தது.
''இன்னொரு தடவை இந்த வீட்ல அப்பா குப்பான்னு சொந்தம் கொண்டாடிட்டு வந்தே, காலை ஒடைச்சு வெறகா எரிச்சிடுவேன்,'' என்று, தன் அதிகாரத்தை நிலை நாட்டினாள், சித்தி.
குனிந்து, ஞானசேகரனின் பாதங்களை மீண்டும் கண்களில் ஒற்றிக் கொண்டாள், ஆராதனா.
அவள் தோளைப் பற்றி இழுத்த, தீபாவை திரும்பிப் பார்த்தாள். பார்வையில் காழ்ப்பு இல்லை. கோபம் இல்லை. மெல்லிய விரக்தி தான் இருந்தது.
''வாடா,'' என்றாள், தம்பியிடம்.
இருவருமாக, ஞானசேகரனின் முகத்தை இன்னொரு முறை தரிசித்து விட்டு, வெளியேறினர்.
பார்வைகள் அவர்களைத் தொடர்ந்தன.
- தொடரும்
சுபா

