
பா - கே 
'மணி, மாமி, அவ அம்மா வீட்டுக்கு போய் விட்டாள். மதியம், 'லஞ்ச்'க்கு வீட்டுக்கு வந்துவிடு. உனக்கு பிடித்த, கீ ரைஸ், சப்பாத்தி, மஷ்ரூம் கிரேவி செய்து விடுகிறேன்...' என்று போன் செய்திருந்தார், லென்ஸ் மாமா. 
மாமி, ஊரில் இல்லையென்றால், அன்று அவருக்கு கொண்டாட்டம் தான். துணைக்கு என்னையும் அழைத்துக் கொள்வார். 
'அதுக்காக, அலுவலகத்துக்கு, 'லீவு' போடணுமா?' என்றால், 'அட போப்பா... மாமி எப்பப் பார்த்தாலும், ஏக கெடுபிடி செய்வா... இந்த வயசுக்கு அவளுக்கு பயந்துட்டு இருக்க வேண்டியிருக்கு...' என்றார், பரிதாபமாக. 
மாமாவின், 'குஷி' மூடை கெடுப்பானேன் என்று, மதியம், 'லஞ்சு'க்கு அவர் வீட்டுக்கு சென்றேன். 
சமையலறையில், ஏதோ ஒரு ஆங்கில பாட்டை முணுமுணுத்தபடி மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார். 
ஹாலில், 'டிவி'யில், ஏதோ ஒரு, பழைய ராஜா - ராணி படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தில், ராஜா, அமைச்சரிடம் எதை பற்றியோ விசாரித்து கொண்டிருந்தார். அவர்களை தவிர்த்து, ராஜாவுக்கு இரு பக்கம் நின்றபடி, இரு பெண்கள் கவரி வீசிக் கொண்டிருந்ததை கவனித்தேன்.
'தர்பாரில், ராஜா, அமைச்சர்கள், காவலாளிகள் எல்லாம் ஆண்களாக இருக்க, விசுறுவதற்கு மட்டும் ஏன் பெண்களை நியமிக்கின்றனர்? 
'தர்பாரில் நடக்கும் நிகழ்வுகளை அந்தப்புரத்தில் இருக்கும் ராணிக்கு தகவல் தெரிவிக்க இருக்குமோ...' என்று யோசித்தேன். 
'என்ன மணி... படத்தில் மூழ்கிட்ட போலிருக்கு. இன்னும் அரைமணியில் சாப்பாடு தயாராகிவிடும்...' என்று கூறி, அருகில் டேபிள் மீது, பூப்போட்ட கிளாசில் இருந்த உ.பா.,வை எடுத்து வாயில் கவிழ்த்து கொண்டு சென்றார். 
'மாமா, திருந்தவே மாட்டிங்களா? எனக்கு ஒரு சந்தேகம். பல படங்களில், ராஜாவுக்கு பக்கத்தில் கவரி வீசுபவர்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர்?' என்றேன். 
வேகமாக, புத்தக அலமாரி அருகில் சென்றவர், கனமான புத்தகம் ஒன்றை எடுத்து வந்து, 'அடிமைகள்!' என்ற அத்தியாயத்தை பிரித்து, 'உன் கேள்விக்கான பதில் இதில் கிடைக்கும் படித்து பார்...' என்றார். 
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகம் அது. படிக்க ஆரம்பித்தேன். அதில்... 
உலகம் முழுவதும் காலம் காலமாக அடிமைகள் இருந்து வந்துள்ளனர். கிரேக்கம், ரோம், எகிப்து மற்றும் பாபிலோன் போன்ற மிக பழைய நாடுகளில், அடிமைகள் வாழ்ந்துள்ளனர். 
இரண்டு நாடுகளிடையே போர் நடக்கும் போது, தோற்ற நாட்டிலிருந்து, ஆண், பெண்களை பிடித்து வந்து அடிமையாக்கி கொள்வார், வெற்றி பெற்ற நாட்டின் அரசர். 
அவர்கள், அடிமைகள் என அறிவிக்கப்பட்டு ஏலம் நடக்கும். 
ஏலம் நடக்க வழிமுறைகள் உண்டு. தசைகளை கிள்ளுதல், கனமான பாரத்தைத் துாக்கிக்கொண்டு ஓடச் சொல்வது, குதித்து காட்டச் சொல்வது போன்ற பயிற்சிகள் வைத்து, அடிமைகளை தேர்வு செய்வர். பிறகு விலை நிர்ணயித்து, விற்பனை செய்வர். 
அதற்கு முன், அவர்கள் கழுத்தில் ஒரு டோக்கன் தொங்க விடப்படும். அதில், அவர்கள் வயது மற்றும் திறமை கூறப்பட்டிருக்கும். 
கிரேக்க படையினர், பல நாடுகளுடன் சண்டையிட்டு, ஏராளமானவர்களை பிடித்து வந்து, அடிமையாக்கி, வேலை வாங்கி எழுந்தவை தான், அந்நாட்டின் தலைநகரான ஏதென்சின் இன்றைய நினைவு சின்னங்கள். 
நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் அடிமைகளுக்கு பஞ்சமேயில்லை. கி.பி.,948, 1100, 1201 மற்றும் 1208 ஆண்டுகள் சார்ந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், அடிமைகளை வாங்கல், விற்றல் தகவல்கள் அதிகம் கிடைத்துள்ளன. 
ஐரோப்பிய நாடுகளில் உள்ள செப்பு, ஈயம் மற்றும் வெள்ளி சுரங்கங்களில் வேலை செய்ய அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
மது வகையில், ஒயின் இல்லாத நாடே இல்லை எனலாம். அது சார்ந்த திராட்சை தோட்டங்கள், தயாரிப்பு மற்றும் சுத்திகரிப்பு வேலைகள் பலவற்றிலும், அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். 
இந்தியாவில், விவசாயம், கோவில், மடங்கள் மற்றும் வீட்டு வேலைகள் என பலவற்றிற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். 
குறிப்பாக, அரண்மனைகளில் பெண் அடிமைகள் கவரி வீசுதல் மற்றும் துப்புரவு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். ஆண்கள், விவசாய நிலங்கள் உள்ளவர்களுக்கு அடிமையாக்கப்பட்டனர். 
போரில் தோல்வி அடைந்த நாடுகளில் இருந்து பிடித்து வரப்பட்டவர்கள் தான் அடிமைகள் என எண்ண வேண்டாம். கடனை திரும்பக் கட்ட இயலாதவர்கள், பொய், பித்தலாட்டம், திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் பிடிபட்டவர்களும் அடிமைத்தொழிலை மேற்கொண்டனர். இவர்கள் அடிமைசாசனம் எழுதித் தருவர். 
முதலாம் ராஜேந்திர சோழன், சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து, ஜெயித்து நாடு திரும்பும் போது, தன்னுடன் பல்லாயிரக்கணக்கான பெண் அடிமைகளை அழைத்து வந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. 
சோழ ராஜ்ஜியத்தில் மட்டும் தான் அடிமைகள் இருந்தனர் என எண்ண வேண்டாம். பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் ஆட்சியிலும் அடிமைகளை வைத்து வேலை வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. 
கி.பி.,1830ல், இங்கிலாந்தில் அடிமை ஒழிப்பு சட்டம் வந்தது. 
இந்தியாவில், 1843ல், இந்த சட்டம் வந்தது. ஆனால், சரியாக அமல்படுத்தப்படவில்லை. ஏனெனில், அடிமை முறையை ஒழித்தால், விவசாய தொழில் பாதிக்கப்படும் என, கூறப்பட்டது. இதனால், கண்டுகொள்ளாமல், அடிமை முறை தொடர்ந்தது. 
சுதந்திரம் கிடைத்த பின்னரே இந்தியாவில் அடிமை முறை ஒழிந்தது. 
கடந்த 1843 - 1867ம் ஆண்டுகளுக்கு இடையே பிரிட்டிஷார், இரண்டு லட்சம் இந்தியர்களை, இலங்கைக்கு கொத்தடிமையாக அனுப்பி வைத்தனர். இதில், பெரும்பாலோர் தமிழர்கள். 
இன்று இலங்கை எழுந்து நிற்பதற்கு இவர்களே காரணம். அவர்களின் வாரிசுகள் இன்று கவுரவமாக வாழ்வதுடன், தமிழ் கோவில்களையும் பராமரித்து வருகின்றனர். 
ஒரு தகவலின் படி, 1978ம் ஆண்டில் கூட, தமிழகத்தில், 2 லட்சத்து 50 ஆயிரம் கொத்தடிமைகள் இருந்தனர். 
வட மாநிலங்களில் இஸ்லாமியர் - ராஜபுத்திரர்களிடையே நடந்த போரில், ராஜபுத்திரர்கள் தோற்றால், பெண்கள் பலர் தற்கொலை செய்து கொள்வர். ஒரு ராஜபுத்திர மன்னன் தோற்றபோது, 18 ஆயிரம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். 
எதற்கு? முகலாயர்கள் பிடியில் சிக்கி, அசிங்கப்படாமல் இருக்கத்தான். 
- படித்து முடித்ததும், 'இப்படியெல்லாமா அக்காலத்தில் இருந்துள்ளனர்...' என்று நினைத்தேன். 'மணி... சாப்பாடு ரெடி...' என்று மாமா குரல் கொடுக்க, எழுந்து சென்றேன். மாமா நன்றாகவே சமைத்து இருந்தார். ஒரு பிடிபிடித்து, அவருடன் சிறிது நேரம் பேசிய பின், அலுவலகம் கிளம்பினேன்.

