PUBLISHED ON : நவ 02, 2025

இயக்குனர் ஆபாவாணன் எழுதிய கதை, நடிகர் வாகை சந்திரசேகருக்கு தெரியும். ஒருநாள் பேச்சுவாக்கில், ஆபாவாணனிடம், 'ஆமா, அந்த டி.எஸ்.பி., வேடத்துல யாரைப் போடப் போறீங்க?' என்றார், சந்திரசேகர்.
சிவகுமார் தங்களைக் கொஞ்சம் கூட, சட்டை செய்யவில்லை என்று கூறி வருந்தியதோடு, ஜெய்சங்கர் பெயரையும் கூறினர்.
'நீங்க ஏன், விஜயகாந்தை டி.எஸ்.பி.,யாக நடிக்க வைக்கக்கூடாது. போலீஸ் வேஷம்ன்னா, எங்க விஜி சூப்பரா செய்வானே! நீங்க, சாட்சி படம் பார்த்தது இல்ல...' என்று கேட்டார், சந்திரசேகர்.
இதைக் கேட்டதும், நிமிர்ந்து உட்கார்ந்தனர் இருவரும். இது, ஏன் இத்தனை நாட்கள் நமக்கு எட்டாமல் போயிற்று என்று நினைத்தனர்.
'இல்ல, இது கொஞ்சம் வயதான, 'கெட்- அப்!' விஜயகாந்த், 'யங் ஹீரோ' 'விக்'லாம் வச்சி நடிக்கணும். அவரு ஒத்துக்குவாரா...' என்றனர்.
'அதெல்லாம் ராவுத்தர் பார்த்துக்குவாரு. நான், ராவுத்தர்கிட்ட பேசறேன். நீங்க ரெண்டு பேரும் அவரைப் போய் பாருங்க. ராவுத்தருக்கு உங்க கதை புடிச்சிப் போச்சின்னா நீங்க இப்பவே ஜெயிச்சிட்டீங்கன்னு அர்த்தம். ஆல் தி பெஸ்ட்...' என்று வாழ்த்தி அனுப்பினார், சந்திரசேகர்.
அ ரவிந்த்ராஜும், ஆபாவாணனும் நினைத்தது போல, ஆரத்தி எடுத்து வரவேற்கவில்லை; அந்த அளவுக்கு, 'பிஸி' விஜயகாந்த். ஆரம்பத்தில், ஆபாவும், அரவிந்த்ராஜும், ஐந்து நாட்கள், 'கால்ஷீட்' கிடைத்தால் கூட போதும் என்று நினைத்தனர்.
ஆனால், ராவுத்தர் கதை கேட்க நேரமே ஒதுக்கவில்லை. அவர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக அங்கு நடையாய் நடந்தனர். ஒன்றும் பிரயோஜனமில்லை. இருவரையும் காண நேர்ந்தால், 'வாங்க வாங்க...' என்று அன்பாக வரவேற்று, 'ஷூட்டிங்' போய் விடுவார், விஜயகாந்த்.
படத்திற்கான பாடல்களை முதலிலேயே பதிவு செய்து விட்டனர். அதை, ராவுத்தரிடம் போட்டுக் காட்டினால், ஏதாவது முன்னேற்றம் இருக்காதா என்ற நப்பாசை.
ஆபா, நினைத்தது நடந்தது. பாடல்களை கேட்ட ராவுத்தர், நெகிழ்ந்து போனார். குறிப்பாக, 'நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்...' என, துவங்கும் பாடல். அதில் ஓர் இடத்தில், 'தினந்தோறும் உணவு, அது பகலில் தோன்றும் கனவு...' என்ற வரிகள், ராவுத்தரை கண்கலங்க வைத்தன.
அதை கேட்டு, 'சோத்துக்கு திண்டாடறவன் தான் இப்படியொரு வரி எழுத முடியும். பசியோட அருமை சோறு கிடைக்காத போது தான் தெரியும். விஜிக்கு மார்க்கெட் இல்லாதப்ப, நானும், விஜியும் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கோம்...' என்றார், ராவுத்தர்.
'இந்திய சினிமாவில் பாடல்களுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றனர்? நிஜ வாழ்க்கையில் நாம், 'டூயட்' பாடிக் கொண்டிருப்பது இல்லையே...' என்று பேசுவர், சில அறிவுஜீவிகள்.
அவர்கள் அறிய நியாயமில்லை. ஆபாவாணன், ஊமை விழிகள் படத்துக்காக உருவாக்கிய பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம், திரைப்படக் கல்லுாரி மாணவர்களுக்கான சொர்க்க வாசலின் திறவுகோலாக அமைந்தது என்று!
மு ன்னைக் காட்டிலும், ஆபாவாணன் - அரவிந்த்ராஜ் இருவருக்கும், ராவுத்தருடனான நெருக்கம் அதிகரித்தது. அன்றாடம் அலுவலகம் செல்வது போல், ராவுத்தர் அலுவலகத்துக்கு வந்து போயினர். ஒவ்வொரு நாளும் வேளை தவறாமல் காபி, டிபன், சாப்பாடு என்று வகைவகையாக வயிறார சாப்பிட்டு வர முடிந்தது. என்றைக்காவது ஒருநாள் ராவுத்தர், நிச்சயம் கதையைக் கேட்பார் என்ற நம்பிக்கையை விதைத்தது, சோறு மட்டுமே.
அ டுத்த முயற்சியாக, இருவரும் தாங்கள் எடுத்த, குறும்படத்தை திரையிட்டு காட்டினர். 'மர்டர் எக்கோ' என்ற அந்த குறும்படம், ராவுத்தரை அசத்திவிட்டது. மீண்டும், மீண்டும் பார்த்து ரசித்தார்.
'பத்து நிமிடம் மட்டுமே ஓடிய படத்தையே இத்தனை பிரமாதமாக எடுத்திருக்கிறார்களே... ஒரு முழு நீள சினிமாவை ஏன் சிறப்பாக உருவாக்க மாட்டார்கள்?' என்ற ஆச்சரியம், அவரது அடி மனதில் ஆழமாய் வேரூன்றியது.
'விஜியும் பார்த்துடட்டும். அவனையும் கூப்பிட்டு படத்தைப் போட்டுக் காட்டுங்க. அவனும் சரின்னு தான் சொல்வான்...' என்றார், ராவுத்தர். ஆனால், படத்தை ரசித்துப் பார்த்த விஜி, 'ஓல்டு கெட்-அப்'பில் நடிக்க மறுத்தார்.
இப்போது தான், ராதிகா, அம்பிகா, ராதா மாதிரியான கனவுக்கன்னிகள் ஜோடியாக நடிக்கின்றனர். 'ஓல்ட் கெட்-அப்'பில் நடித்தால், தான் எடுபடுவோமா என்ற நியாயமான தயக்கம் தடை விதித்தது.
ஏற்கனவே, எஸ்.பி.சவுத்திரியும், அலெக்ஸ் பாண்டியனும் கொடி கட்டிப் பறந்த கோலிவுட்டில், டி.எஸ்.பி., தீனதயாளன் சாதித்துக் காட்டுவாரா என்ற சந்தேகம்.
விஜியை சமாதானம் செய்தார், ராவுத்தர். 'உன்னால கண்டிப்பா முடியும், விஜி. 'ஓல்ட் கெட்-அப்'பும் பண்ணிப்பாரேன். இன்னைக்கு உனக்கு தான் மார்க்கெட், 'ஸ்ட்ராங்'கா இருக்குது. நீ, எப்பவும் கெத்தாவே திரியறவன். அந்த டி.எஸ்.பி., வேடத்தை நீ ஊதித் தள்ளிடுவே. பசங்க ஏதோ புதுசா, 'ட்ரை' பண்றாங்க. நாமளும் சேர்ந்து, ஒத்துழைப்போம். நம்மள மீறி என்னாயிடப் போகுது. நான் தான் இருக்கேனே...' என்றார், ராவுத்தர்.
'ஆமா... கேமரா முன்னால நீயா நடிக்கப் போற? நடிச்சுப்பாரு. அந்தக் கஷ்டம் புரியும். மொத்தமே அஞ்சு நாளு. அதுவும் கெஸ்ட் ரோலு. அதுக்காக ரொம்பவும் மெனக்கடணுமா... வேற ஆர்ட்டிஸ்டை பார்க்க சொல்லு...' என்றார், விஜி.
'அதெல்லாம் நான் கவனிச்சுக்கறேன், விஜி. நீ, முழு படமும் வர்ற மாதிரி புதுசா எழுதச் சொல்றேன். நீ, இந்தப் படத்துல கண்டிப்பா நடிக்கிற...' என்றார்.
ராவுத்தர் சொல்லை மீறி நடந்ததே கிடையாது, விஜயகாந்த்.
ஊமை விழிகள் திரைப்படம் உருவானது. ஆர்வம் இருந்த அளவு, பணப்பற்றாக்குறையும் அதிகரித்தது. நிதி நெருக்கடியை அடியோடு போக்க, விஜயகாந்தின் சொந்த நிறுவனமான, 'ஆண்டாள் அழகர் மூவிஸ்' முன்நின்றது. சென்னை, மதுரை, பெங்களூரு வினியோக உரிமையை வாங்கிக் கொண்டது.
விஜயகாந்தும், சரிதாவும் முதன்முதலாக இணைந்து நடித்தனர். அவர்களுக்கு, 'டூயட்' எல்லாம் கிடையாது. விஜயகாந்த் தவிர, மற்ற நட்சத்திரங்களுக்கெல்லாம் பாடல் காட்சிகள் இருந்தன.
'தோல்வி நிலையென நினைத்தால்...' என்ற, ஆபாவின் அற்புதமான பாடலை யார் எழுதியது என்று அனைத்து சினிமா கவிஞர்களையும் அண்ணாந்து பார்க்க வைத்தது.
இப்பாடல், எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது தெரியுமா?
- தொடரும்
பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தொலைபேசி எண்: 7200050073

