
முதியோர் மனமறிந்து ...
தோ ழியுடன், பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்தேன். அங்கு, வீட்டிற்கு தேவையான பொருட்களோடு, பெரிய அளவிலான, செஸ் போர்டு, பாம்பு-ஏணி பரமபத அட்டை மற்றும் கேரம் போர்டு போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கினாள், தோழி.
அவளிடம், 'யாரும் உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகள் வீட்டிற்கு வருகின்றனரா?' என்றேன். அதற்கு அவள் அளித்த பதில், ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் அளித்தது.
'ஓய்வு பெற்ற என் மாமனார், மாமியார் இருவரும், நீண்ட நாட்களுக்கு பின், வீட்டிற்கு வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மற்றும் பணி புரிந்த இடங்களில் செஸ், மற்றும் கேரம் விளையாட்டுகளில் பல்வேறு நிலைகளில் பரிசுகளும், பட்டங்களும் வென்றவர் என் மாமனார்.
'அவர்கள் குழந்தைகளுடன் விளையாடவும், அடுக்குமாடி குடியிருப்பு, 'கிளப் ஹவுஸில்' விளையாடவும், தான் இதையெல்லாம் வாங்குகிறேன்...' என்றாள், தோழி.
முதியவர்கள் மனமறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படும் தோழியை, மனதார பாராட்டி விட்டு வந்தேன்.
முடிந்தவரை எல்லா குடும்பங்களிலும் இதைப் பின்பற்றினால், உறவுகள் பலப்படுவதோடு, வீட்டில் மகிழ்ச்சியும் நிலவும்.
கே. மேனகா, சென்னை.
இயற்கை வளத்தை பெருக்க...
சமீபத்தில், நாங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டுக்காக, பிரபல நிறுவனத்தின் நீரேற்றும் மோட்டாரை வாங்கினோம். வீட்டிற்கு வந்து பிரித்து பார்க்கும்போது, ஒரு சிறிய பையில் வேப்ப மர விதைகள் இருந்தன. உடனே அந்த விதைகளை, எங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஏரிக்கரையில் புதைத்து வைத்து வந்து விட்டேன்.
அதேபோன்று, முன்பு வேலை செய்த நிறுவனத்திலும் யாராவது வெளியிலிருந்து முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு பார்வையிட வந்தால், அவர்களின் கைகளாலேயே ஒரு செடி நட செய்வர். அந்த செடி யாரால் நடப்பட்டது என்ற விபரத்தை ஒரு பதாகையில் எழுதி வைக்கப்பட்டு, அந்த செடி வளரும் வரை பராமரிக்கப்படும்.
இப்போது நான் கார்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். ஒவ்வொரு காரும் விற்பனை ஆகும் போது கூடவே ஒரு செடியை கொடுக்க, ஆலோசித்து வருகின்றனர்.
இயற்கை வளங்களை அதிகரிக்க இதுபோன்ற செயல்களை அனைத்து நிறுவனங்களும் முன்னெடுத்தால் நன்றாக சுற்றுச் சூழல் பாதுகாக்கபடுமே!
கு. விக்னேஷ், வேலுார்.
ஓட்டுனர் ஓய்வறை!
சென்னையில் என் நண்பர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்தேன். அங்கு கார், 'பார்க்கிங்' பகுதியில் தென்பட்ட ஒரு அறை எனக்கு வித்தியாசமாக பட்டது. அருகில் சென்று என்னவென்று விசாரிக்க, ஓட்டுனர்கள் ஓய்வறை என்றனர்.
சாப்பிட மேஜை வசதி, தனியாக கழிவறை, நல்ல மெத்தையுடன் கூடிய கட்டில்கள் என, ஒரே நேரத்தில், 15 பேர் தங்கி ஓய்வெடுக்கும்படி வசதியாக இருந்தது, அந்த அறை.
'இந்த அடுக்குமாடி குடியிருப்பில், 100 வீடுகள் வரை இருக்கின்றன. எல்லா வீட்டினரிடமும் கார் இருக்கின்றன. சிலர் ஓட்டுனர்களை வேலைக்கு வைத்து இருக்கின்றனர். சிலரோ தாங்களே கார் ஓட்டினாலும், நீண்ட துார வெளியூர் பயணத்தின் போது, 'ஆக்டிங்' டிரைவர்களை வரச் சொல்லி, காரில் கிளம்பிச் செல்கின்றனர். தேவைப்படும் ஓட்டுனர்கள் இந்த அறையை பயன்படுத்தி கொள்கின்றனர்.
'அவர்கள் நிம்மதியாக ஓய்வெடுத்தால் தான், நல்ல மன நிலையில் காரை ஓட்ட இயலும்; விபத்துகளையும் தடுக்க முடியும். அதனால்தான் இந்த ஏற்பாடு செய்துள்ளோம். தேவைப்படும் ஓட்டுனர்கள் இதை ஒரு மணி நேரமோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ அறையை பயன்படுத்தி கொள்கின்றனர்.
'இதே போல, 'அண்டர் கிரவுண்டில்' உள்ள கார் பார்க்கிங்கிலும் ஒரு ஓட்டுனர் ஓய்வறை வைத்துள்ளோம்...' என்றனர்.
தங்களது பாதுகாப்பான பயணத்திற்காகவும், ஓட்டுனர்களையும் சக மனிதனாக பாவித்தும் இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பினரை பாராட்டினேன்.
இதேபோல் மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளிலும் செய்யலாமே.
- அ.பேச்சியப்பன், சென்னை.

