/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: சின்ன இலையின் பெரிய கதை!
/
விசேஷம் இது வித்தியாசம்: சின்ன இலையின் பெரிய கதை!
PUBLISHED ON : நவ 02, 2025

நவ.,2 - பிருந்தாவன துவாதசி
திருமாலுக்கு உகந்த மாலை, துளசி. இதை, சாதாரண இலை என, நினைத்து விடாதீர்கள். இதற்கு புராண வரலாறு ஒன்று உள்ளது.
ஒரு சமயம் தேவர்கள் ஆணவத்தால் தலைகால் புரியாமல் செயல்பட்ட போது, அவர்கள் மீது கோபம் கொண்ட சிவன், தன் கோபத்தை, நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்தி, கடலுக்குள் செலுத்தினார். அந்த ஜோதிப்பிழம்பில் இருந்து ஒரு குழந்தை தோன்றியது. ஜலத்துக்குள் தோன்றியதால் அவனுக்கு, ஜலந்தரன் என்ற பெயர் ஏற்பட்டது.
தான் சிவனின் பிள்ளை என்பதை அறியாத, ஜலந்தரன் தன்னை, கடலரசனின் மகனாக கருதிக் கொண்டான். அவனுக்கு, காலநேமி என்ற அசுரனின் மகளும், கிருஷ்ண பக்தையுமான, பிருந்தா என்பவளைத் திருமணம் செய்து வைத்தனர்.
கணவனை தெய்வமாக மதித்தாள், பிருந்தா. அவளது கற்பு நெறிக்கு களங்கம் ஏற்பட்டால் தான், அவனுக்கு அழிவு நேரும் என்ற நிலைமை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி, பார்வதியையே தவறான கண்ணோட்டத்தில் பார்த்தான், ஜலந்தரன்.
இதையறிந்த, சிவன், அவன் தன் மகன் என்பதை வெளிப்படுத்தினார். ஜலந்தரன் அதை நம்பவில்லை. எனவே, பெற்ற பிள்ளை என்றும் பாராமல் அவனை அழிக்க முடிவெடுத்தார்; போர் துவங்கியது.
தன் இஷ்டத் தெய்வமான திருமாலிடம், தன் கணவனின் உயிரைக் காப்பாற்றித் தர வேண்டினாள், பிருந்தா. உலக நன்மைக்காக, வேறு வழியின்றி, பிருந்தாவின் கற்பு நெறிக்கு பங்கம் வர ஒரு மாயையை உருவாக்கினார், திருமால். தன் பக்தைக்கு களங்கம் விளைவிக்கிறோமே என, மனம் பதைபதைத்தது. இருப்பினும், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என, ஒரு தந்திரம் செய்தார். ஜலந்தரன் போல் தன் உருவத்தை மாற்றி, அந்த உருவத்தின் நிழல் மட்டும் தரையில் படுமாறு செய்தார். அவன் பேசுவது போல, 'நான் சிவனை வென்று விட்டேன், பிருந்தா...' என்றார்.
சத்தம் கேட்டு, தன் கணவன் தான் வந்து விட்டானோ என, பிருந்தா விழித்துப் பார்த்தாள். நிழல் தெரிந்தது. அந்த நிழலைத் தொட்டு வணங்கினாள். அது, திருமாலின் நிழல் என்பது அவளுக்கு தெரியாது. இதனால், அவளது கற்புக்கு களங்கம் ஏற்பட்டது. பிற ஆடவரின் நிழலைத் தொடுவது கூட பெண்ணின் கற்புக்கு களங்கம் என்ற நெறி அக்காலத்தில் இருந்துள்ளது.
இதையடுத்து, ஜலந்தரன் கொல்லப்பட்டான். உண்மையை அறிந்த, பிருந்தா, தானும் உயிர் விட முடிவெடுத்தாள். திருமாலை, துளசி செடியாக மாற சாபமிட்டாள். இதை ஏற்ற, திருமால், துளசி செடியாக மாறினார். தன் பக்தையான பிருந்தாவை மார்பில் தாங்கி, அவளையும் தெய்வ அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
திருமாலின் மனைவியான லட்சுமியின் அம்சமே துளசி செடி என்றொரு கருத்தும் உண்டு. பூமாதேவியான, ஆண்டாளும் துளசி மாடத்தில் பிறந்தவள் தான்.
துளசியை வணங்க ஏற்ற நாள், பிருந்தாவன துவாதசி. அன்று துளசி மாடத்திற்கு விசேஷ பூஜை செய்வர். கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதியை, பிருந்தாவன துவாதசியாகக் கொள்வர். இம்முறை ஐப்பசி வளர்பிறையிலேயே இந்த து வாதசி வந்துள்ளது.
- தி. செல்லப்பா

