
பா-கே
'கலிமுத்தி போச்சு... மனுஷங்க வர வர வித்தியாசமா நடந்துக்கிறாங்க...' என்றார், 'திண்ணை' நாராயணன். 'ஓய், நாணா... தலையும் இல்லாம, வாலும் இல்லாம பேசுறதை முதலில் நிறுத்தும். இப்ப, மனுஷங்ககிட்ட அப்படி என்ன வித்தியாசத்தை பார்த்துட்டீர்...' என்று, 'கடி'த்தார், லென்ஸ் மாமா. 'அதுவா, இந்த செய்திய பாரு. யானையை திருடி, 27 லட்ச ரூபாய்க்கு வித்திருக்கு கில்லாடி கும்பல் ஒன்று. இதுக்கு என்ன சொல்றீர்?' என்றார், நாராயணன். 'யானையையா? அது என்ன பசுவா அல்லது ஆடா? தன்னை பராமரிக்கும் பாகனை தவிர வேறு யாரையும் பக்கத்தில் அண்ட விடாதே! நிஜமாகவே வியப்பாக இருந்தது, அச்செய்தி. மேற்கொண்டு அச்செய்தியை விளக்கமாக கூறினார், நாராயணன்: உ.பி., மாநிலம், மிர்சாபூரை சேர்ந்த சுக்லா என்பவர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒருவரிடமிருந்து, பெண் யானை ஒன்றை, 40 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஊர் திரும்புவதற்குள் இரவாகி விடவே, வழியில் இருந்த மைதானத்தில் யானையை கட்டி வைத்து விட்டு, துாங்கியிருக்கிறார்.
காலையில் எழுந்து பார்த்தால், யானையை காணவில்லை. 'ஐயோ அம்மா... 40 லட்சம் போச்சே...' என்று அலறி, அங்குமிங்கும் யானையைத் தேடி அலைந்துள்ளார். யானை கிடைக்காமல் போக, இறுதியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதைக்கேட்ட போலீசார், 'இதென்னடா... கிணறு காணாம போச்சுன்ற கதையாக, யானையை காணவில்லை என்கிறானே... மனநிலை சரியில்லையோ...' என்று புகார் கொடுத்தவரை சந்தேகத்துடன் பார்த்துள்ளனர்.
ஆதாரங்களைக் காட்ட இறுதியாக போலீசார், புகாரை ஏற்று, வழக்கு பதிவு செய்ததோடு, யானையை தேட ஆரம்பித்தனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த, சப்ரா என்ற ஊரில், பெண் யானை ஒன்றை, 27 லட்ச ரூபாய்க்கு ஒரு கும்பல் விற்றதாக தகவல் கிடைக்க, அங்கு விரைந்தது போலீஸ்.
விசாரித்ததில், காணாமல் போனது அந்த யானை தான் என்று உறுதியானது. அதை மீட்டு, புகார் கொடுத்தவரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால், யானையை கடத்தி சென்ற கும்பலை இன்னமும் தேடி வருகின்றனராம்.
உ.பி., ஜார்கண்ட் மற்றும் பீகார் என, மூன்று மாநிலங்களிலும் இந்த யானை கடத்தல் பற்றி தான் பேச்சாம்...' என்று முடித்தார், நாராயணன்.
'இது மட்டுமா... குன்னுார் பகுதியில், ஒரு காட்டு யானை, வீட்டிற்குள் புகுந்து, பாட்டி மற்றும் பேத்தியை மிதித்தே கொன்ற செய்தி வந்தது. அடுத்து, கோவை கோட்ட வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த ஒரு காட்டு யானையை அடக்க, 'டாப்சிலிப்'லிருந்து அழைத்து வரப்பட்ட, இரண்டு கும்கி யானைகளுக்கு மதம் பிடித்து விட, 'டாப்சிலிப்' முகாமுக்கு திரும்ப அனுப்பப்பட்டது. 'ஹும்... காட்டு யானைகள் ஊருக்குள் வருவதும், யானை - மனுஷன் மோதலும் தொடர்கதையாகி விட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், யானையையே கடத்தும் பலே கில்லாடிகள் பெருகி விட்டனர்...' என்று அங்கலாய்த்தார், உ.ஆசிரியர் ஒருவர். 'எல்லாம் சரிதான்... 'யானை மனோபாவம்' பற்றி தெரியுமா? என்றார், லென்ஸ் மாமா. 'அதென்ன, யானை மனோபாவம்? புதுசா இருக்கே...' என்றோம் கோரசாக. தொடர்ந்து கூற ஆரம்பித்தார், லென்ஸ் மாமா: குட்டியாக இருக்கும் யானையைப் பிடித்து வந்து, அதை பெரிய இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு பழக்குவர். அப்போது, அந்த குட்டி யானை தன் பலம் கொண்ட மட்டும் சங்கிலியை இழுத்து இழுத்து தப்பித்து செல்ல முயற்சிக்கும். ஆனால், சங்கிலி பலமாக இருப்பதால் அதன் முயற்சி பலிக்காது.
குட்டி யானை வளர்ந்து பெரிய யானை ஆனதும், அதை கொஞ்சம் வலுவான கயிற்றால் தான் கட்டியிருப்பர். அப்போது, அது, மெதுவாக இழுத்தாலே கயிறு அறுந்து விடும். ஆனால், அந்த முயற்சியில் ஈடுபடாது, யானை. அதற்கு காரணம், அந்த யானைக்கு கற்பிக்கப்பட்ட பாடம் தான்.
இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த காலத்தில், அது அடைந்த தோல்வி அதன் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அந்தக் காலத்தில் செய்யாத முயற்சியா? எவ்வளவோ முயற்சி செஞ்சும் அப்பவே முடியலையே; இப்பவா முடியும்? என்று அது நினைப்பதால் கயிற்றால் கட்டியிருக்கும் போது கூட, இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக நினைத்து அதற்கு கட்டுப்பட்டு, அங்கேயே நின்று கொண்டிருக்கும். இந்த தவறான மனோபாவத்தை தான், 'யானை மனோபாவம்!' என்றார், லென்ஸ் மாமா.
சினிமாவில், அதிலும் சின்னப்ப தேவர் எடுத்த படங்களில், நடிகர்கள் யானைகளுடன் சகஜமாக நடித்ததைப் பார்த்து, அவை சாதுவான விலங்குகள் என்று நினைத்திருந்தேனே! ஆனால், தினமும் கேள்விப்படும் செய்திகளிலிருந்து, யானை சாதுவா, மூர்க்கமானதா என்று அறிய முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாமே!
ப
'க ண்கள் காட்டும் பாவனைகள் புரிவதில்லை...' என்று சொல்கின்றனரே... உண்மைதானா? அது, அந்தக் காலம். இப்போது கண்களின் மொழியை கண்டுபிடித்து வரையறுத்து விட்டது, நவீன அறிவியல். அந்தக் கண்களின் மொழியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா! * கண்கள் வலப்பக்கமாக பார்த்தால், பொய் சொல்கிறது என்று அர்த்தம்
* இடப்பக்கமாக பார்த்தால், உண்மை பேசுகிறது
* மேல் நோக்கிப் பார்த்தால், ஆளுமை செய்கிறது
* கீழே பார்த்தால், அடிபணிகிறது
* விரிந்தால், ஆச்சரியப்படுகிறது; ஆசைப்படுகிறது
* கூர்ந்து பார்த்தால், விரும்புகிறது
* வேறு எங்கோ பார்த்தால், தவிர்க்கிறது
* வலமும், இடமும் மாறி மாறி ஓடினால், பதட்டத்தில் உள்ளது
* கண்கள் படபடத்தால், விரும்புகிறது; வெட்கப்படுகிறது
* மூக்கைப் பார்த்தால், கோபப்படுகிறது
* எதைப் பார்க்கிறதோ, அதை விரும்புகிறது
* கண்கள், பெண்ணின் கழுத்துக்கு கீழே பார்த்தால், காமம்
* கண்ணுக்குள் பார்த்தால், காதல்
* இடப்பக்கமாக கீழே பார்த்தால், தனக்குள் பேசிக் கொள்கிறது
* கண்கள் இடமாக மேலே பார்த்தால், பழைய நினைவுகளை தேடுகிறது
* கண்கள் வலமாக கீழே பார்த்தால், விடை தெரியாமல் யோசிக்கிறது
* கண்கள் வலமாக மேலே பார்த்தால், பொய் சொல்ல யோசிக்கிறது
* கண்கள் உயர்ந்தும், தலை தாழ்ந்தும் இருந்தால், காம வயப்படுகிறது
* கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால், விரும்புகிறது
* கண்கள் மூடித் திறந்தால், உள்ளுக்குள் எதையோ தேடுகிறது
* கண்களை, கைகள் கசக்கினால், தஞ்சம் கேட்கிறது
* கண்கள் மூடித் திறந்தால், வெறுக்கிறது
* கண் புருவங்கள் உயர்ந்தால், பேச விரும்புகிறது
* கண்களும், புருவங்களும் சுருங்கி இருந்தால், கோபம்.
ஆக, கண்கள் மனிதனின் முகம் பார்க்கும் கண்ணாடி. அதன் பிரதிபலிப்பையும், மொழியையும் உணர முடியும். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

