sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேப்டன் விஜயகாந்த்! (15)

/

கேப்டன் விஜயகாந்த்! (15)

கேப்டன் விஜயகாந்த்! (15)

கேப்டன் விஜயகாந்த்! (15)


PUBLISHED ON : நவ 30, 2025

Google News

PUBLISHED ON : நவ 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையராஜாவை சந்திக்க சென்ற இயக்குனர், கோகுல கிருஷ்ணா அவருடன், பூந்தோட்ட காவல்காரன் படத்தை பார்த்தார். படம் பார்த்த கையோடு காரியம் ஒன்றை செய்தார். அடைக்கலராஜ் எம்.பி., அப்போதைய பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சினிமா வினியோகஸ்தர். பூந்தோட்ட காவல்காரன் படத்தை திருச்சியில் வினியோகம் செய்ய முன் பணம் கொடுத்திருந்தார். மெனக்கெட்டு எம்.பி.,க்கு போன் போட்ட இயக்குனர், கோகுல கிருஷ்ணா, 'போயும் போயும் இந்தப் படத்தையா நீங்க வாங்கியிருக்கீங்க. நல்லாவே இல்லியே...' என்றார்.

'தீர விசாரிப்பதே மெய்...' என்ற உணர்வற்று, அடைக்கலராஜும், ராவுத்தரிடம் பேசி, முன் பணத்தை திருப்பி வாங்கினார். இயக்குனர், செந்தில்நாதன் சரியாக வேலை செய்யவில்லை என்ற வீண் பழியை சுமக்க வேண்டி வந்தது. கடுங்கோபம், விஜயகாந்தின் குருதியோடு கலந்தது. இளையராஜாவை காண சென்றார்.

'நீங்க தனியா, படம் பார்க்க மாட்டீங்களா? கூட, மத்த சினிமாக்காரங்கள வெச்சிக்கிட்டு தான் பார்ப்பீங்களா? இப்ப யாரும் என் புதுப் படப்பெட்டியை எடுக்க மாட்டேங்கிறாங்க. என்னை விடுங்க. ஒரு, தயாரிப்பாளரா நான் நஷ்டத்தை தாங்கிக்க முடியும். ஒண்ணுல இல்லண்ணா இன்னொன்னுல சம்பாதிச்சிட முடியும். பாவம் அந்த, செந்தில். இப்ப, அவன் எதிர்காலம் பாழ்பட்டு நிக்குது...' என்றார்.

உணர்ச்சி பெருக்கில் விட்டால் அழுது விடுவார் என்பது போல் காட்சி அளித்தார், விஜயகாந்த்.

'நீங்க வருத்தப்படாதீங்க. மறுபடியும், ரீலை அனுப்பி வையுங்க. 'ரீ-ரெகார்டிங்' முடிஞ்சதும் பார்க்கலாம்...' என்றார், இளையராஜா.

அவரது வார்த்தைகளை நம்பினார், விஜி.

'இதுவரையில காசு வீணானது போதும். இனியும் அதுல பணத்தை போட்டு ஏமாறுவானேன். படம் டப்பான்னு ஆளாளுக்கு பேசிட்டு திரியறான். பொட்டியை துாக்கி உள்ளே வை...' என்ற, ராவுத்தரின் முடிவில், அனுபவத்தின் கசப்பு தெறித்தது.

விஜயகாந்த் அதுவரையில், செய்யாத கதாபாத்திரம். நடிகர் திலகத்தின், ஞான ஒளி பட பாதிப்பில், நாயகனுக்கு, அந்தோணி என்று பெயர் சூட்டியிருந்தனர். சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்தும் கதாபாத்திரம், விஜயகாந்துக்கு. மாறுபட்ட சிகை அலங்காரங்களில் இளமை, முதுமை என, இரு வேறு கம்பீர தோற்றங்களில் நடித்திருந்தார்.

காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காது. செந்தில்நாதனுக்கு தன் முதல் படம் வெளியாகும் நம்பிக்கை போய் விட்டது. யார் யாரோ அவர் காதுபடவே நெருப்பு வார்த்தைகள் பேசினர்.

'இந்த ஞான சூன்யத்தை நம்பி, பல லட்சத்தை போட்டுட்டு, ராவுத்தர் இப்ப கண்ணு முழி பிதுங்கிப் போய் நிக்கறாரு. இதுல இவங்க அப்பா வேற, எம்.ஜி.ஆரை, வெச்சி, நம்நாடு படத்தை இயக்குனாராம். அப்பன் பேரைக் கெடுக்க வந்திருக்கு இது...' என்றனர்.

வசவுகளை தாங்கிக்கொள்ள இயலாமல், விஜயகாந்தை சந்தித்தார், செந்தில். 'மறுபடியும் நம்ம இயக்குனர்கிட்டயே வேலை செய்யலாம்ன்னு பார்க்குறேன். இங்க வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்ன்னு...' இன்னும் பேசினால், உடைந்து அழுது விடும் நிலைமை.

'அதெல்லாம் ஒண்ணும் வேணாம், செந்தில். எவனோ எதுவோ சொன்னான்னு நம்ம வாழ்க்கையை நாம ஏன் கெடுத்துக்கணும். ராஜா சார்கிட்ட நாளைக்கு பொட்டியைக் கொண்டு போங்க. ஏழுமலையான் இருக்கான் நமக்கு. அவன் பார்த்துப்பான்...' என்றார், விஜயகாந்த்.

விஜயகாந்தின் வார்த்தையை மதித்து, மறுநாள், இளையராஜாவிடம் போனார், செந்தில். இசைக் கோர்ப்பு பணி பூர்த்தி ஆனது.

ஜூன் 10, 1988ல், பூந்தோட்ட காவல்காரன் படம் வெளியானது. படத்தை பிரிவியூவில் பார்த்த, வினியோகஸ்தர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

'ஏன், விஜியும், ராவுத்தரும் இங்கே வரல. யாருய்யா இயக்குனர். படம் சூப்பரா பண்ணியிருக்காரு. இவ்வளவு நல்லாயிருக்கு, இதையா நல்லா இல்லைன்னு சொன்னாங்க...' என்றனர்.

ஆயிரம் அவமானங்களை ஏற்கனவே தாங்கி இருந்தாலும், புதிதாக ஒன்று நிகழும் போது, மனம் கலங்கவே செய்யும். அந்த நிலையில், ராவுத்தரும், விஜியும், பூந்தோட்ட காவல்காரன் படத்தை காணச் செல்லாமல் ஒதுங்கி நின்றனர்.

படம், 'சூப்பர் டூப்பர் ஹிட்.' கண்டிப்பா, விஜிக்கு இன்னொரு வெள்ளி விழா என்பது உறுதியான பின்பே, பார்த்து ரசித்தனர்.

படம் சரியில்லை என்று பணத்தை வாபஸ் வாங்கியவர்கள் அதிசயித்து நின்றனர். இது, எப்படி சாத்தியம் என்று மலைத்து போயினர். இளையராஜா விரல்களின் விஸ்வரூப நர்த்தனம் படத்துக்கு பொன்னாடை போர்த்தியது என்று தான் சொல்லணும்.

பூந்தோட்ட காவல்காரன் பட வெற்றியால், புகழ் வெளிச்சம் பெற்றவர்களில், லிவிங்ஸ்டனுக்கு முக்கிய இடம் உண்டு. லிவிங்ஸ்டன் வெட்டியாக சினிமா, சினிமா என்று அலைந்ததில், அவரது, அம்மா மனம் உடைந்து போனார்.

'நீ கவலைப்படாதம்மா. நான் சீக்கிரத்திலேயே லட்ச லட்சமா சம்பாதிச்சு, உன் காலடியிலேயே கொண்டாந்து கொட்டறேன்...' என்று அவர் தாய் மீது சத்தியம் செய்திருந்தார், லிவிங்ஸ்டன்.

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் வில்லனுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் ஊதியமாக கொடுத்து, அவரை திக்குமுக்காடச் செய்தனர், விஜயகாந்தும், ராவுத்தரும்.

அப்படியும், லிவிங்ஸ்டனின் ஆசை தீரவில்லை. தயங்கிக் கொண்டே, 'சார் நீங்க ஐநுாறு, ஆயிரம்ன்னு கட்டுக்கட்டா ரூபாயைக் கொடுத்தீட்டீங்க. நான் எங்கம்மாகிட்டே, 'பிராமிஸ்' பண்ணியிருக்கேன். அவங்களைப் பணத்தாலேயே அபிஷேகம் பண்றேன்னு. நுாறு நுாறா தந்தீங்கனா நெறய பணமா கண்ணுக்கு தெரியும். அப்படி தர முடியுமா? பிளீஸ் சார்...' என்று கேட்டார், லிவிங்ஸ்டன்.

ஒரு புதுமுகத்துக்கு பேசியவாறு ஊதியம் கொடுப்பதே பெரிய விஷயம். இதில், நோட்டை மாற்றி இன்னும் சில்லறையாக தருமாறு சொன்னதும், அதைக்கேட்டு, விஜியும், ராவுத்தரும் கட்டடம் அதிரும்படியாக சிரித்தனர்.

'டேய் விஜி, இவன் இஷ்டப்படியே பணத்தை கொடுப்போம்...' என்று கூறி, உதவியாளர், சுப்பையாவிடம், 'பேங்குக்கு போயி இந்த ருபாய் கட்டுகளை நுாறு ரூபாய் கட்டுகளாக மாத்தி எடுத்திட்டு வந்து கொடு...' என, கூறினார் ராவுத்தர்.

மூட்டையாக நோட்டுகளை கண்டதும், லிவிங்ஸ்டனுக்கு அடுத்த கேள்வி பிறந்தது.

'சார், சார்... இந்த மூட்டையை நான் எப்படி வெளியே துாக்கிட்டு போறது?' என்றார்.

அதற்கும் ஒரு வழி கூறினர், விஜயகாந்தும், ராவுத்தரும். அது என்ன?



- தொடரும் பா. தீனதயாளன்

நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073






      Dinamalar
      Follow us