
பா - கே
பெ ங்களூரில், ப்ரீலான்ஸராக (தன் ஆர்வத்தில், சுயேச்சையாக செய்திகளை சேகரித்து, அனைத்து பத்திரிகைகளுக்கும் கொடுப்பவர்களை, 'ப்ரீலான்சர்' என்பர்.) இருக்கும் நண்பர் ஒருவர் சமீபத்தில், என்னை சந்திக்க, சென்னை வந்திருந்தார். 'என்ன, திடீர் சென்னை விஜயம். ஏதாவது விசேஷமா?' என்றேன். 'என் மச்சினிக்கு, குழந்தை பிறந்துள்ளது. என் மனைவியும், நானும் பார்க்க வந்தோம்...' என்றார், நண்பர். 'கல்யாணமாகி, நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது என்று சொல்வீங்களே, அவருக்கா?' என்றேன். 'ஆமாம். செயற்கை கருவுறுதல் மூலம், மச்சினிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது...' என்றார். 'இரட்டிப்பு சந்தோஷம் தான். 'டிரீட்' ஏதும் இல்லையா?' என்றார், அருகில் இருந்த, லென்ஸ் மாமா. 'பிரமாதமா கொண்டாடிடலாம்...' என்ற நண்பர் தொடர்ந்து, 'மணி, சென்னை ரொம்பவே மாறி விட்டது. மெட்ரோ ரயில் கட்டுமானங்களும், 'ஷாப்பிங்' மால்களும், ஹோட்டல்களும் பெருகியுள்ளன. 'இவற்றுக்கு போட்டியாக, ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருவுறுதல் செய்யும் மருத்துவ மையங்களும் நிறைய கண்ணில் பட்டன. இதில், பெங்களூரு அடுத்த கட்டத்துக்கு போய்விட்டது. பெண்களுக்கான, கருமுட்டைகளை உறைய வைத்து, பாதுகாக்கப்படும் மையங்கள், அங்கே நிறைய உருவாகி வருகிறது...' என்றார் நண்பர். 'ஆண்களின் விந்தணுவை சேமித்து வைக்கும் மையங்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இதென்ன, கருமுட்டைகள் பாதுகாப்பு மையம்!' என்றேன், ஆச்சரியமாக. 'உண்மை தான், மணி... பெங்களூரில் இதுபற்றி செய்தி சேகரிக்க சென்றபோது தான் பல தகவல்கள் கிடைத்தன...' என்று சொல்ல ஆரம்பித்தார், நண்பர்: கருமுட்டையை உறைய வைத்து, தேவைப்படும்போது, அதனை பயன்படுத்தி, குழந்தை பெற்றுக்கொள் ள இன்று பல பெண்கள் முன் வந்துள்ளனர்.
பெண்கள், பருவம் அடையும் போது, ஒரு லட்சம் முட்டைகள் உருவாகும். அவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்து விடும். இந்த கருமுட்டைகளின் இழப்பை தவிர்க்க முட்டையை உறைய வைக்கும் முறை சமீபத்தில் அறிமுகமாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக, கடினமான வேலைகள் செய்பவர்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு உள்ளவர்கள் தான், கருமுட்டையை சேமித்து வைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
இன்றைய பல பெண்கள், 'முல்லேரியன் எதிர்ப்பு ஹார்மோன்' (ஏ.எம்.எச் - ஆன்ட்டி முல்லேரியனம் டெஸ்ட்) எனப்படும் சோதனைகள் மூலம் கருவுறுதல் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.
இது, சம்பந்தமான விசாரணைகள், திருமணமான பெண்களிடமிருந்து தான் அதிகம் வருகின்றனவாம்!
பெங்களூருவில் உள்ள, கரு உறைய வைக்கும் ஒரு மையத்தில், கடந்த ஆண்டு அரிதாகத்தான் இதுபோன்ற விசாரணைகள் வந்ததாம். ஆனால், இந்த ஆண்டு, ஒவ்வொரு மாதமும், மூன்று அல்லது நான்கு கேஸ்கள் வருகின்றன என்கின்றனர், இந்த மையத்தினர்.
கருமுட்டையை உறைய வைக்க விரும்பும் பெண்களின் வயது, 20லிருந்து 30 வயது வரை இருக்கலாம். அதிகபட்சமாக, 33 வயது வரை கருமுட்டையை சேகரித்து, உறைய வைக்க முடியும் என்பதால், 28-33 வயது பெண்கள் அதிகளவில் வருகின்றனராம். அதிலும், குறிப்பாக, 29 வயதுள்ளவர்கள் அதிகம்.
தற்போது, பெங்களூரில் இது ஒரு பேஷனாகி விட்டது.
இந்தியாவில், உதவி இனப்பெருக்கம் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் 2022ம் ஆண்டுபடி, அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரைதான், கருமுட்டையை உறைபனியில் வைத்திருக்க முடியும்.
பெங்களூரில் செயற்கை கருவுறுதல் மையங்கள் பல இடங்களில் இயங்குகின்றன.
இன்று பல பெண்கள், தான் விரும்பும்போது குழந்தைகளை பெற்றுக்கொண்டால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர்.
இந்த நடைமுறை, பெரும்பாலும் திருமணமாகாத மற்றும் தொழில் சார்ந்த பெண்களால் மட்டுமல்லாமல், திருமணமான பெண்களும் இதில் இறங்குகின்றனர்.
உதாரணமாக, 31 வயதான பெண் ஒருவர், தன் பரபரப்பான வேலை மற்றும் திருமணமாகாத நிலை குறித்து, தொடர்ந்து கிண்டலுக்கு உள்ளாகி, செயற்கை கருவுறுதல் முறைபடி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாக்க முன் வந்துள்ளார். 'பிற்காலத்தில் எனக்கு திருமணம் ஆகும்போது, கருவுறுதலுக்கான காலம் கடந்து விட்டால், அப்போது, கருமுட்டையை பயன்படுத்தி செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள இது உதவும்...' என்கிறார்.
திருமணமான, ஓய்வு ஒழிச்சல் இல்லாத, 33 வயதான பெண்மணி ஒருவர், தன் நிறுவன வேலையை காரணம் காட்டி, இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இவர் தன் கணவரிடம் இதுபற்றி விவாதித்த பின் தான், கருமுட்டைகளை சேகரித்து வைக்கும் முடிவுக்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.
தன் கருமுட்டைகளை உறைய வைக்க வந்த, மற்றொரு திருமணமான பெண், 'என்னுடைய திருமணம் முறியும் நிலையில் உள்ளது. நான் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால், என் கணவரோ, தான் தந்தையாக வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் இருக்கிறார். இனி, விவாகரத்து ஆனாலும், எதிர்காலத்தில் என்னால், குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்!' என்றார்.
அடுத்து கணவரை பிரிந்த, 41 வயது பெண் ஒருவர், கருமுட்டையை உறைய வைப்பதை பற்றி விசாரிக்க வந்தபோது, வயது அதிகமாக இருப்பதால், கருமுட்டை உறைய வைக்கும் மையத்தினர் தயங்குகின்றனராம்.
கருமுட்டை உறைய வைப்பது பற்றிய விசாரணை, தற்சமயம், 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது, கருமுட்டை உறைய வைக்கும் மையம் ஒன்று.
மகப்பேறு மருத்துவரிடம் வரும் விசாரணைகளில், 80 சதவீதம், திருமணம் ஆகாத பெண்கள், தொழிற்முறை காரணங்களுக்காக, கர்ப்பத்தை தள்ளி வைப்பவர்களாக இருக்கின்றனர்.
இதுசம்பந்தமாக தினமும், இரண்டு விசாரணைகள் நிச்சயம் வரும் என்கின்றனர்.
சில கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது இந்த நடைமுறையை உள்ளடக்கிய, 'பிரீமியம்' காப்பீட்டு திட்டங்களை கூட வழங்க முன்வந்துள்ளன.
-- என்று கூறி முடித்தார், நண்பர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த 'திண்ணை' நாராயணன், 'ஹூம்... நம்மூரும், வெளிநாடுகளைப் போல் மாறிட்டு வருதுப்பா. அன்பு எங்கே? என்ற திரைப்படத்தில் , 'உலகம் போறப் போக்கைப் பாரு டிங்கிரி டிங்காலே..' என்று, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பாடும் ஒரு பாடல் இடம்பெறும். அதுதான் நினைவுக்கு வருது...' என்று அங்கலாயத்தார்.
ப
கே ள்வி கேட்பவனிடம், பதில் சொல்பவன் ஏறுக்கு மாறாக பதில் சொல்வதை, எகத்தாளம் என்பர். இந்த சொல் எப்படி வந்தது? ஆதி தாளம், அட தாளம், திரிபுட தாளம், ஜம்ப தாளம், ரூபக தாளம் ஆகியவை, பஞ்ச தாளங்கள்.
ராகத்துக்கு தகுந்த தாளத்தை வாசிக்க வேண்டும். இந்த ஐந்து தாளத்தையும் சேர்த்து வாசிப்பது, ஏக தாளம். பாடுபவருக்கும், வாசிப்பவருக்கும் ஒத்து வராமல் போகும்போது, வாசிப்பவர் வேண்டும் என்றே ஏக தாளமாக வாசிப்பார். ஏக தாளம் என்பதே எகத்தாளம் ஆனது.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!

