sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேப்டன் விஜயகாந்த்! (18)

/

கேப்டன் விஜயகாந்த்! (18)

கேப்டன் விஜயகாந்த்! (18)

கேப்டன் விஜயகாந்த்! (18)


PUBLISHED ON : டிச 21, 2025

Google News

PUBLISHED ON : டிச 21, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புலன் விசாரணை படத்தின், 'பட்ஜெட்' அதிகமாக, இயக்குனர், ஆர்.கே.செல்வமணியால் படத்தை முடிக்க முடியுமா என்ற சந்தேகம், வர, அவரை தன் சினிமா அலுவலகத்தின் உள்ளே வரக்கூடாது என, தடை உத்தரவு போட்டு விட்டார், ராவுத்தர்.

அதிக வேலைப்பளு, விஜி நடித்த படங்களில், நீடித்து வரும் சறுக்கல்களால் உண்டான கவலை எல்லாம் சேர்த்து, ராவுத்தர் படுத்த படுக்கையானார். அவருக்கு, மஞ்சள் காமாலை என்றனர், மருத்துவர்கள்.

ராவுத்தரை கண்டால், விஜயகாந்த் உட்பட அவரது ராஜாங்கமே அஞ்சி நடுங்கும். அத்தகைய ஆளுமை மிக்கவர். அவரைக் குற்ற உணர்வு வாட்டி வதைத்தது. செல்வமணியை விரட்டி விடச் சொன்னதால் தான், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக புலம்பத் துவங்கினார், ராவுத்தர். மஞ்சள் காமாலையின் ரூபத்தில், செல்வமணிக்கு மீண்டும் புதுவாழ்வு கிடைத்தது.

மீண்டும், புலன் விசாரணை படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ந்தது.

பிடிவாதக்காரர்களால் மட்டுமே சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு, செல்வமணியும் விதிவிலக்கல்ல. அவர் ஓர் அறிமுக இயக்குனர் என்பதை மறந்து, ஒவ்வொன்றிலும், அடம்பிடித்து தடம் பதிக்க முயன்றார். கவர்னர் பங்கு பெறும் காட்சியில், கவர்னராக நடிப்பவர், 'பென்ஸ் காரில் தான் வர வேண்டும்...' என்று விரும்பினார்.

'மறுநாள் பென்ஸ் கார் வந்தால் தான் படப்பிடிப்பு. இல்லாவிட்டால், ஷூட்டிங் கேன்சல்...' என்று, தன் சகாக்களிடம் தெரிவித்தார், செல்வமணி.

அந்த தகவல் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பியது.

'பென்ஸ் கார் இல்லேன்னா, 'ஷூட்டிங் கேன்சலா?' அதை, அவன் என்ன சொல்றது. நான் இப்பவே ஷெட்யூலை நிறுத்திடேறன்...' என்ற, ராவுத்தர், செல்வமணியை கடிந்து கொண்டார்.

செல்வமணி கிளப்பிய குட்டிக் குட்டி பூகம்பங்களால், ராவுத்தருக்கும், விஜயகாந்துக்கும் இடையில் லேசான விரிசல்கள் உண்டாயின. செல்வமணிக்கு ஓவர் செல்லம் கொடுத்து, இத்தனை துாரம் பிரச்னையை வளர்த்து விட்டது, ராவுத்தரா, விஜயகாந்தா? என, அவர்களுக்குள் முட்டிக் கொண்டனர்.

கொஞ்ச நாளைக்கு ஆறப்போடுவோம் என்று படத்தை நிறுத்தி விட்டனர். இனி, செல்வமணி போன்ற கத்துக்குட்டி தேவையில்லை. இயக்குனர், மணிவண்ணன் மாதிரியான நிறைகுடங்களிடம், புலன் விசாரணை படத்தை ஒப்படைப்போம் என்ற முடிவுக்கு வந்தனர், தோழர்கள் இருவரும்.

மனசாட்சியுள்ள, மணிவண்ணன் படத்தை இயக்க மறுத்து விட்டார். 'கொஞ்சம் ஆர்வக்கோளாறுல தப்பு செஞ்சிருக்கலாம். நீங்க, அவனையே வெச்சி முடிச்சிக்குங்க. ஒருத்தன் வாழ்க்கையை கெடுத்து, நான் அதுல சோறு தின்ன விரும்பல...' என்றார், மணிவண்ணன்.

கோபதாபங்களில், ஆறேழு மாதங்கள் ஓடி விட்டன. மீண்டும், செல்வமணியின் இயக்கத்தில், புலன் விசாரணை படம் துவங்கியது.

விஜயகாந்தின் திருமண வைபவமும், புலன் விசாரணை பட வெளியீடும், ராவுத்தரை ராப்பகலாக, துாங்க விடாமல் செய்தன. செல்வமணியை கூப்பிட்டு நேரடியாகவே சொல்லி விட்டார்.

'பொங்கலுக்கு படம் ரிலீசுன்னு ஊரு முழுக்க போஸ்டர் ஒட்டியாச்சு. இன்னமும் நீ, 'ஷூட்டிங்'கை முடிக்காம செஞ்சிக்கிட்டிருக்கே. நாலு நாளுல எல்லாம் முடிஞ்சிடுமா?' என்றார். ஒருவழியாக படம் வெளியானது.

ரத்தம் சிந்தி உழைத்து படத்தை இயக்கிய, செல்வமணி, சென்னை, காசி தியேட்டரில், புலன் விசாரணை படத்தின் முதல் காட்சியை பார்த்தார். உழைக்கும் பாட்டாளி வர்க்கம் வாழும் பகுதி அது. திரைப்படத்தை அவர்கள் கொண்டாடிய நேர்த்தியில் ஆனந்த வியர்வை சிந்தினார், செல்வமணி.

'எனக்கு கல்யாணப் பரிசு கொடுத்துட்டீங்க...' என்று, புலன் விசாரணை வெற்றி சித்திரத்தை இயக்கிய, ஆர்.கே.செல்வமணியிடம் மனம் நெகிழ்ந்து சொன்னார், விஜயகாந்த்.

கேப்டனின் திருமணம் நடைபெற்ற, 1990 தைத்திங்களில், தென்னகமெங்கும், வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது, புலன் விசாரணை திரைப்படம்.

பு லன் விசாரணை திரைப்படம் வெளியாகி, அந்த தைத் திங்களின் முதல் முகூர்த்த நாள். செல்வமணியை கூட்டி வரச் சொன்னார், ராவுத்தர்.

'படம் பிரமாதமா ஓடுதுப்பா. அண்ணனை வெச்சு அடுத்த படம் எப்ப பண்ணப் போறே?' என்று, விஜயகாந்தின், 100வது படத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

பரபரப்பான ஒரு நிஜக்கதைக்கு திரை வடிவம் கிடைத்தது. சந்தனக் கடத்தல் வீரப்பன் அந்நாளில் தமிழக - கர்நாடக அரசுகளுக்கு மாபெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் விளங்கினான். வீரப்பனை, வீரபத்ரன் என்ற பெயரில் சினிமாவில் காட்டினார், செல்வமணி. வீரபத்திரனை சிறை பிடிக்க வரும் காட்டிலாக்கா அதிகாரி, கேப்டன் பிரபாகரனாக, விஜயகாந்த் அப்படத்தில் நடித்திருந்தார். பூஜையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், 1991 சித்திரை திங்களில் திரைக்கு வந்தது, கேப்டன் பிரபாகரன் படம்.

புலன் விசாரணை படத்தில், நடிகர், சரத்குமாருக்கு புது வாழ்வு கொடுத்தார், விஜயகாந்த். மிக நீண்ட காலம் வாய்ப்புக்காக, ராவுத்தர் அலுவலக வாசலில் கதறிக் கொண்டிருந்தவர், நடிகர், மன்சூர் அலிகான். அவரது அன்புத்தொல்லையை ஏற்று, அவரை கோலிவுட் வீரப்பனாக அறிமுகப்படுத்தினார், ராவுத்தர்.

காட்டில் வாழ்ந்த நிஜமான, சந்தன மரம் கடத்தல் மன்னன் வீரப்பனாக அரிதாரம் பூசி, வீரபத்ரனாக அவதாரம் எடுத்த, மன்சூர் அலிகானுக்கு மகுடம் சூட்டியது, கேப்டன் பிரபாகரன் படம்.

இசையமைப்பாளர், இளையராஜா எதைத் தருகிறாரே, அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயமாக நிலவிய சூழல்.

கேப்டன் பிரபாகரன் படத்தில், 'ஹைலைட்'டான ஒரு பாடல், 'ஆட்டமா தேரோட்டமா!' அதற்கு, இசையமைப்பாளர், இளையராஜா முதலில் வழங்கிய மெட்டு, இயக்குனர், செல்வமணிக்கு அத்தனை சிறப்பாக படவில்லை. இளையராஜாவின் செல்லம், செல்வமணி. அதனால், தன் அதிருப்தியை சொல்ல முடிந்தது.

'சரி உனக்கு எப்படி வேணும் நீயே சொல்லு...' என்றார், ராஜா.

'ஷோலே ஹிந்திப் படத்தில் வருகிற மாதிரி...' என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். புதிய, 'ட்யூன்' இரவோடு இரவாக வந்து சேர்ந்தது.

கும்பக்கரை அருவியில், பூங்கொடியாக வரும், ரம்யாகிருஷ்ணனின் ஒய்யார அசைவுகளுடன் அதைக் காட்சிப்படுத்தினார், இயக்குனர், செல்வமணி. சொர்ணலதாவின் சொக்க வைக்கும் குரலில், கேட்பவர்களை மயங்க வைத்தது, 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல். தன்னை, பிரபாகரனிடம் காட்டிக் கொடுக்க திட்டம் வகுத்த, கிட்டுவை, வீரபத்ரன் அநாயசமாக சுட்டுக் கொல்லும் காட்சி, பாடலின் முடிவில் ரசிகர்களை பதைபதைக்க செய்தது.

கடந்த, 1991ல், அரசியல்வாதிகள் தேர்தலை எதிர்கொண்ட சமயம். அப்போது என்ன நடந்தது?



- தொடரும் பா. தீனதயாளன்

நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073






      Dinamalar
      Follow us