
பழைய கார் வாங்கப் போகிறீர்களா?
நண்பர் ஒருவர், பழைய கார் ஒன்றை வாங்கி, வாடகைக்கு விட முடிவு செய்தார். அதற்காக, தெரிந்த மெக்கானிக்கிடம் சொல்லி வைத்திருந்தார்.
அதன்படி, மெக்கானிக்கின் சிபாரிசை ஏற்று, ஒருவருடைய காரை பார்க்க சென்றிருந்தார்.
அந்தக் கார், ஓரளவிற்கு நல்ல நிலையிலேயே இருந்தது.
மெக்கானிக்கும் காரைப் பரிசோதித்து, வாங்கலாம் என்று கூறியதால், உரிமையாளர் கூறிய தொகையிலிருந்து, சிறிது பேரம் பேசிக் குறைத்து வாங்கியவர், அந்த மெக்கானிக்கிடமே காரை சர்வீஸ் செய்தும், தேவைப்படும் பாகங்களை மாற்றி, பழுதுகளை நீக்கி தருமாறும் கேட்டார்.
அந்த வேலைகளை மு டித்ததும், மெக்கானிக் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு, பூஜை செய்து வர காரை எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார், நண்பர்.
வழியில், வாகன பரிசோதனை செய்த போலீசாரிடம் ஆவணங்களை கொடுத்த போது தான், அவை அத்தனையும் போலி என்பதும், அந்தக் கார் திருடப்பட்டது என்பதும் தெரிய வந்திருக்கிறது.
நண்பர், அதை வாங்கிக் கொடுத்த மெக்கானிக்கிடம் விபரத்தை கூறியதற்கு, 'அது திருட்டுக் கார் என்பது, எனக்கும் தெரியாது; விற்பனைக்கு என்னை அணுகியதால், தகவல் தெரிவித்தேன்...' என்றும் கூறி விட்டார்.
மெக்கானிக் வார்த்தையை மட்டும் நம்பி காரை வாங்கியதற்கு, பண நஷ்டம் ஏற்பட்டதோடு, போலீஸ், வழக்கு என்றும் அலைந்து கொண்டிருக்கிறார், நண்பர்.
வாசகர்களே... பழைய கார் வாங்குவதாக இருந்தால், அஜாக்கிரதையாக இல் லாமல், கவனமாக எல்லா ஆவணங்களையும் அசலா, போலியா என, ஒருமுறைக்கு இருமு றை சரிபார்த்து வாங்குங்கள்!
- எம்.முகுந்த், கோவை.
துறை சார்ந்த தொண்டுகளை செய்யலாமே!
எங்கள் பகுதியில் உள்ள, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அவரது, ஐம்பதாம் பிறந்தநாளை, சமீபத்தில் கொண்டாடினார்.
இந்நிகழ்வுக்கு, அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எங்கள் பகுதியிலுள்ள வேலை தேடும் இளைஞர்களையும் அழைத்திருந்தார்.
விழா முடிவில், அவர், வந்திருந்த இளைஞர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் வழிகாட்டி கையேடுகளை வழங்கி, அவர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அதோடு, இலவச மருத்துவ முகாமுக்கும் ஏற்பாடு செய்து, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு சிகிச்சையும் அளித்தார்.
அவரது பயனுள்ள சேவைகள், விழாவுக்கு வந்திருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பங்களிப்பை, அனைவருமே பாராட்டினர்.
இதுபோன்ற முயற்சிகள், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, முன் மாதிரியாக திகழும் என்பதால், ஒவ்வொருவருமே தங்கள் துறை சார்ந்த தொண்டுகளில் ஈடுபடலாமே!
- மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.
கொடுப்பதில் மகிழ்ச்சி!
அரசு மருத்துவமனையில் தங்கி, சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின், வீடு திரும்பும் நிலையில் தயாராக இருந்த ஓய்வுபெற்ற அலுவலர் ஒருவரை அழைத்து வர, நண்பருடன் சென்றிருந்தேன்.
மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்த காலத்தில், அவரைப் பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என, ஏராளமானோர் வந்து போயிருக்கின்றனர்.
அவர்கள் வாங்கி வந்த பழ வகைகள், ஊட்டச்சத்து பவுடர் டப்பாக்கள், பிஸ்கட் வகைகள் என, ஒரு மூட்டை அளவுக்கு சேர்ந்திருந்தது. இதை வண்டியில் ஏற்ற நாங்கள் முயன்ற போது தடுத்தார், அந்த ஓய்வு பெற்ற அலுவலர்.
'வீட்டில் நான் மற்றும் மனைவி மட்டுமே. இவை அனைத்தையும் எடுத்துச் சென்றால், வீணாகத்தான் போகும். அடுத்த பகுதியில் சிகிச்சை பெற்று வரும் ஏழ்மையில் உள்ள, 20 நோயாளிகளுக்கு இதை பிரித்து கொடுங்கள்...' என்றார்.
அவர் சொன்னது போல் கொடுத்தோம். நோயாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நம்மை பார்க்க வந்தவர்கள் கொடுத்தவற்றை வீணாக்குவதை விட, தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்து உதவலாமே!
- சோ.ராமு, திண்டுக்கல்.

